அரசியல் ஆர்வம் ஊற்றெடுக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு கடந்த கால அரசியல் ஆளுமைகளை பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்துவரும் தமிழகத்தின் இருபெரும் கட்சிக்கும் ஒரே முன்னோடியாக திகழ்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றிய வரலாறு இக்கால தமிழ்ப் பிள்ளைகளுக்கு கிடைக்கப்பெற வேண்டும்.
அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றிய சிறு சிறு தொகுப்புகள் ஆங்காங்கே சில புத்தகங்களாக தொகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அவரது வாழ்வையே சுருக்கி நமக்கு விளங்க வைக்கக்கூடிய ஒரு புத்தகத்திற்கான இடம் காலியாகவே இதுவரைக்கும் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அந்தப் புத்தகம் தான் “மாபெரும் தமிழ்க் கனவு [Maperum Tamil Kanavu]”
சுய அனுபவம் : சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தான் “மாபெரும் தமிழ்க் கனவு” புத்தகத்தை வாங்கினேன். நான் மட்டுமல்ல என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் புத்தகப்பையில் இடம்பிடித்து இருந்தது “மாபெரும் தமிழ்க் கனவு”.
இந்தப்புத்தகம் ஒவ்வொருவர் வீடுகளின் அலமாரியிலும் அமர வேண்டிய அறிய புத்தகம். எவ்வளவோ செலவு செய்திடும் நாம் நமது முன்னேற்றத்திற்கு பெரிதும் உழைத்திட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிப்படிக்க வேண்டியதும் அடுத்த தலைமுறைக்கு நியாபகப்படுத்த வேண்டியதும் அவசியமான ஒன்று. அமேசான் தளத்தில் இந்தப்புத்தகம் கிடைக்கிறது,
ஆசிரியர் கே.அசோகன் அவர்களின் முன்னுரை
இந்தப்புத்தகத்தை உருவாக்குவதற்கு பெரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த இந்து தமிழ் திசை ஆசிரியர் திரு கே அசோகன் அவர்களின் முன்னுரை இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக விளக்கும்.
நம்முடைய பேராளுமைகளின் வரலாற்றையும் விழுமியங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் இந்து தமிழ் திசையின் மேலும் ஒரு முயற்சி தான் மாபெரும் தமிழ்க் கனவு.
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவராக்க பேரறிஞர் அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் அண்ணா என்கிற ஆளுமை இந்த அரை நூற்றாண்டாக நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களையும் நினைவுகூர விரும்பினோம். அண்ணாவை அவருடைய முக்கியத்துவத்துடன் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு நல்லபுத்தகம் நம்மிடம் இல்லை என்கிற வெற்றிடம் இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தை பெரிதாக்கியது. அண்ணாவின் வரலாறு; அண்ணாவின் பேச்சுக்கள் – எழுத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்; அண்ணாவின் அரசியலின் தனித்துவத்தையும் சர்வதேச அளவில் இன்றைய அதன் பொருத்தப்பாட்டையும் சொல்லும் ஆளுமைகளின் கட்டுரைகள் என்று இப்புத்தகம் விரிந்திருக்கிறது.
அண்ணா மறைவு தமிழ் நாட்டுக்கு மாபெரும் நஷ்டம்
அண்ணா அவர்களின் பெரும் தகவல்களை கொண்டிருக்கும் இந்த புத்தகத்தின் முதல் பகுதியே அண்ணா பற்றிய ஆளுமைகளின் கருத்துக்களோடு தான் துவங்குகிறது. அதிலும் குறிப்பாக, அண்ணா அவர்கள் பெரிதும் மதித்த பெரியார் அவர்கள் அண்ணா மறைவின் போது எழுதிய அந்தக்கட்டுரையில் இருந்து தான் துவங்குகிறது. அதில் பெரியார் இப்படி எழுதி இருப்பார்,
யானறிந்தவரையில், சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்கத்தில் நான்கில், எட்டில் ஒரு பங்கு கூட வேறு எவருக்கும் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டார் என குறிப்பிட்டு இருந்தார் பெரியார்.
அண்ணாவும் இந்தியாவும் சிறப்புக்கட்டுரைகள்
இந்தப்பகுதியில் அண்ணா அவர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து தற்கால ஆய்வாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தரப்பட்டிருக்கின்றன.
என் தேசம் இறவாமல் காத்தவர் எனும் தலைப்பில் கர்க சட்டர்ஜி எனும் கொல்கத்தா ஆய்வறிஞர் இவ்வாறு தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்,
ஒரு வங்காளி என்ற முறையில் கூறுகிறேன், அண்ணா இப்போதும் வாழ்கிறார். ஆதிக்கவாதத்துக்கு எதிராக, தேசியம் போராட்டம் நடத்தும் போதெல்லாம் அண்ணா வாழ்வார். அண்ணா இன்னமும் வாழ்கிறார் என்று ஏன் கூறுகிறேன் என்றால், வங்காளியான என் மீது இந்தி படிப்பது கட்டாயம் என்று மத்திய அரசால் திணிக்க முடியவில்லை.1965 இல் அண்ணா தலைமை தாங்கி நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் இதற்கு முக்கியக்காரணம் என குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற இன்னும் பல ஆய்வறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இந்தப்பகுதியில் இருக்கின்றன.
அண்ணாவின் திமுக : சில கதைகள்
பேராளுமையின் வலராறு குறித்து படிப்பது என்பது எப்போதும் சுவாரஸ்யமானது. அந்த வகையில் பல்வேறு சிறப்புக்கட்டுரைகள் இந்தப்பகுதியில் இடம்பெற்று இருக்கின்றன.
உதாரணத்திற்கு, இளம்வயதில் அடிக்கடி கோயிலுக்குப் போகும் வழக்கம் உண்டு அண்ணாவிற்கு. அண்ணாவுக்கு மொட்டை போட்டு பெயரிட்டதே திருத்தணியில் தான். இளமைக்காலத்தில் அண்ணா அவர்கள் நாத்திகம் பேசினார். பிற்காலத்தில் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றாலும் நிறுவனமயமாக்கப்பட்ட மதம்,சடங்குகள், சம்பிரதாயங்கள் வழியிலான மதவாதத்தைக் கடைசிவரை எதிர்த்தார். ஆட்சிக்கு வந்ததும் அரசு அலுவலங்களில் கடவுளர் படங்களை நீக்கிட உத்தரவு போட்டார் என கே கே மகேஷ் தந்திருக்கும் பல தகவல்கள் சிறப்பு வாய்ந்தவை.
இதுதவிர இன்னும் பல நல்ல தொகுப்புகள் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்று இருக்கின்றன.
திராவிட நாடு : எண்ணச் சிதறல்கள்
அண்ணா : சில நினைவலைகள்
அண்ணாவை எப்படிப் புரிந்துகொள்வது?
அண்ணாவும் தமிழ்நாடும்
இந்தியாவுக்கு வெளியே அண்ணா
அண்ணாவின் மக்கள் மன்ற உரைகள்
அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள்
அண்ணாவின் சட்டமன்ற உரைகள்
அண்ணாவின் கடிதங்கள்
அண்ணாவின் பத்திரிக்கைகள்
ஒரு தலைவன் இரு தமிழ்க் கவிகள்
அண்ணா : ஒரு சிறுகதையும் நாடகத்தின் சில பகுதிகளும்
அண்ணா பேட்டிகள்
அண்ணா பாதுகாக்கப்படாத பொக்கிஷம்
அண்ணா சில அரிய தருணங்கள்
அரசியல் வேறு, நிர்வாகம் வேறு
சில அரசியல்வாதிகள் மட்டுமே அரசியலையும் நிர்வாகத்தையும் வெவ்வேறாக பார்க்கும் தன்மையுடையவர்கள். அதிலே அறிஞர் அண்ணா அவர்களும் ஒருவர். ஒரு சமயம, என்எல்சியிடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமே மின்சாரத்தை வாங்கிக்கொண்டு இருந்தது. உற்பத்தி செலவு அதிகரித்தபோது, மின்சாரத்திற்கு கூடுதல் விலை தருமாறு தமிழ்நாடு அரசிடம் கேட்டார்கள். இதுபற்றிய விவாதத்தின்போது, ” பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும் பொது என்எல்சி மட்டும் லாபத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கலாமா? நம்மிடம் மட்டும் இப்படி கேட்கலாமா?” என்று முதல்வர் அண்ணாவிடம் கேட்டார் ஒரு அதிகாரி. அதனை உடனடியாக மறுத்தார் அண்ணா.
‘ஒரு அரசியல்வாதி வேண்டுமானால் இப்படியெல்லாம் பொதுக்கூட்டத்தில் பேசலாம். ஆனால், ஒரு முதல்வராக இப்படியொரு முடிவை எடுக்க கூடாது. ஒரு மாநிலத்தில் செய்திருக்கும் முதலீட்டில் இருந்து கணிசமான வருமானம் வரவேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பது நியாயமானது தான். அதற்கான ஏற்பாட்டை செய்திடுங்கள்’ என்றார் அண்ணா. அதன்படி விலை உயர்வு தர மின்சாரவாரியம் ஒப்புக்கொண்டதால் என்எல்சியின் செலவு ஈடுகட்டப்பட்டது. அதன் பலனாக நெய்வேலியில் இரண்டாவது சுரங்கம் அமைக்க மத்திய அரசு முன்வந்தது. மின்னுற்பத்தியும் அதிகரித்தது. இதற்கெல்லாம் அண்ணா எடுத்த முடிவே காரணம் என குறிப்பிட்டார், அண்ணா ஆட்சிக்காலத்தில் நிதித்துறை செயலராக இருந்த ஜி. ராமச்சந்திரன்.
தமிழ்நாடு என்ற பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன?
தமிழ்நாடு என அழையுங்கள் என்பதை வலியுறுத்தி அண்ணா பேசும்போது அதனை எதிர்த்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும் மிகவும் சரியான முறையில் பதில் அளித்தார் அண்ணா. அதில் இந்தக்கேள்வியை கேட்டவர் திரு என் எம் லிங்கம். இதுபோன்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கு அண்ணா அவர்கள் அளித்த பதில்களை இந்த புத்தகத்தில் படிக்கலாம்.
அண்ணாவின் பதில் : நான் எதை அடைவேன்? பார்லிமென்ட் என்பதை லோக் சபா என மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரசிடெண்ட் என்பதை ராஷ்டிரபதி என மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? நான் உங்களை திருப்பிக் கேட்கிறேன். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்?
நீங்கள் எதையாவது பெரிதாக இழப்பதாக இருந்தால் இந்தக் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தவில்லை. அடிப்படையான எதையும் நீங்கள் இழக்காதபோது இக்கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். உங்களுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உணர்வுபூர்வமாக நாங்கள் திருப்தி அடைவோம். பழந்தமிழ்ச் சொல் ஒன்று கோடிக்கணவர்களின் நாவிலும் மனங்களிலும் இடம்பெறுகிறது என்று மகிழ்ச்சி அடைவோம். பெயர் மாற்றம் என்ற சிறிய செயலுக்கு இது போதுமான மிகப்பெரிய ஈடு இல்லையா? பெயர் மாற்றத்துக்கு எதிராக நீங்கள் வைக்கும் அனைத்து வாதங்களும் தவிடுபொடியாகின்றன. மாநில அரசு இந்த கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் ஏற்றிருப்போம் என அரசுத்தரப்பில் கூறுகிறார்கள்.
சென்னை மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் இருந்தாலும் அதன் அமைப்பு எப்படிப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். சென்னை மாநிலம் என்பதற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கோரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தால் விருப்படி வாக்களியுங்கள், கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என கூறுவீர்களா? விருப்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதி அளிப்பீர்களா? மாட்டீர்கள்.
இதுபோன்ற பல சுவாரஸ்யமான விசயங்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பல கருத்துக்களும் பொதிந்து கிடக்கிற “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற நூலை வாங்கி வாசியுங்கள். உங்களை நிச்சயம் ஏதாவது ஒருவகையில் இந்த புத்தகம் செதுக்கும்.
Download/Buy : Maperum Tamil Kanavu / மாபெரும் தமிழ்க் கனவு