தெரிந்தோ தெரியாமலோ நமது முன்னோர்கள் பழைய சோறு சாப்பிடுவதை நம் வழக்கத்தில் புகுத்தியுள்ளனர். நம் உடலுக்கு உதவக்கூடிய பல சிறந்த பாக்டீரியாக்கள் பழைய சோறில் இயற்கையாகவே இருக்கிறது என்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களை (inflammatory bowel diseases (IBD) குணப்படுத்த பழைய சோறு ஒரு அறிய மருந்து என்றும் சொல்லிவந்தார்கள். இதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க தமிழக சுகாதாரத்துறை ஆராய்ச்சியை துவங்கியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை 2.7 கோடி ரூபாய் செலவில் 600 நோயாளிகளை சோதனை செய்து இந்த ஆராய்ச்சியை நடத்திட முடிவு செய்திருக்கிறது. குடல் நோயால் பாதிக்கப்பட்ட 600 நோயாளிகளுக்கு பழைய சாதம் மற்றும் சில அடிப்படையான மருந்துகளை கொடுத்து சோதனை நடத்தப்படும்.
அண்மைய ஆண்டுகளில் குடல் நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் 1 லட்சத்திற்கு 45 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஸ்டீராய்டு மருந்துகள், நோயெதிர்ப்பு மருந்துகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இறுதியாக அறுவை சிகிச்சை கூட பயன்படுத்தப்படுகிறது.
சென்னையில் இருக்கக்கூடிய ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்காமல் பழைய சோறு மற்றும் அடிப்படையான மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கின்றன. பழைய சாதம் குடல் நோய் சிகிச்சைக்கு உதவுவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க தமிழக சுகாதாரத்துறை இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வு மூன்று கட்டங்களாக நடைபெறுமென சொல்லப்படுகிறது. முதல் படியில் சரியான அரிசி கண்டுபிடிக்கப்பட வேண்டும், இரண்டாவதாக எந்த சூழ்நிலையில் பழைய சாதம் சரியான முறையில் புளிக்கிறது, மூன்றாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து சோதனை நடத்துவது என மூன்று கட்டங்களாக நடைபெறும். மூன்று ஆண்டுகள் நடைபெறும் இந்த ஆராய்ச்சியில் நம்முடைய பழைய சோறு வெற்றிபெறும் என நம்புவோம்.
முன்னோர்கள் எதை செய்தாலும் அர்த்தம் கோடி அதில் இருக்கும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.
பாமரன் கருத்து