Site icon பாமரன் கருத்து

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் | ஜெயகாந்தன் புத்தகம்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் book pdf

சமூகம் கவனிக்காத மனிதர்களை கதைகளின் நாயகர்களாக மாற்றி அவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களை கதாநாயகர்களாக மாற்றி, அவர்களின் உணர்வுகள், கேள்விகள், கோவங்கள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகளை வெளிச்சம் போட்டு காட்டிடும் வித்தக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறக்க முடியாத படைப்பு “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”.

 

அவனொரு தாய் தந்தை இல்லாத அனாதை. சூழலினால் மணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ நேரும் ஒரு தம்பதியினர் அவனைக் கண்டெடுத்து, ஹென்றி என பெயர்  சூட்டி வளர்க்கிறார்கள்.

 

பப்பா இந்து, சைவர், மம்மா கிருத்துவர். பப்பா மனைவியைப் பறிகொடுத்தவர், மம்மாவின் இறந்துபோன கணவரின் நண்பர். ஹென்றியை அவர்கள் தமது அன்பால், நல்லறங்களால், உன்னத குணங்களால் எந்தத் தீமையும் அண்டாமல் வளர்க்கிறார்கள். பப்பா அவனை முன்னால் வைத்துக்கொண்டே தினமும்  குடிக்கிறார். அவர்களிடையே ஒளிவுமறைவு இல்லை. அவன் விருப்பப்படி பள்ளிக்கு செல்லவேண்டாம் என்றும் முடிவாகிறது.

 

பப்பாவும் மம்மாவும் கடந்துவந்த பாதை, அவர்களுக்கு ஒன்றைப் உணர்த்தி இருக்கலாம். மனிதர்களாகிய நாம் மிக எளியவர்கள், எதிர்காலத்தில்  நடக்கவிருக்கும் எதன்மேலும் நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. வாழ்க்கையில் நாம் போடும் திட்டங்களுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, அவனை எந்தவித சமூக நிர்பந்தங்களும் இன்றி வளர்க்கிறார்கள்.

 

 

இப்படிப்பட்ட சூழலில், வளர்ந்து வாலிபனாய் நிற்கும் ஹென்றி, அவர்களது இறப்புக்குப்பின், தன் வாழ்வைத் தனியாய், எதிர்கொள்ளத் தயாராகுகையில் கதை தொடங்குகிறது. சாகும் முன்னர், பப்பா தன் பூர்வீகத்தைப் பற்றி சொல்கிறார். அத்தோடு, அங்கே உள்ள வீட்டையும் நிலபுலங்களை அவன் பெயருக்கு எழுதிவைக்கிறார். அங்கு செல்லும் ஹென்றியை, அந்தப் பின்தங்கிய கிராமமும் மக்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை.



இந்த நாவலை முழுவதுமாக வாசித்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் இரண்டு நண்பர்கள் பகிர்ந்துள்ளார்கள். அவர்களின் பார்வை உங்கள் பார்வைக்காக….

செங்கோட்டையன்அவர்களது பார்வை

 

ஒரு இளைஞன் தன் பப்பாவையும் மம்மாவையும் இழந்தப்பின்பு கடந்த கால நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு தனக்கு யாருமில்லை என்ற என்றவுடன் தம் பப்பாவின் ஊருக்கு சென்று அவரின் நினைவுகளை துணையாய் கொண்டு வாழவேண்டும் என்ற ஆவலில் தன் பப்பாவின் ஊருக்கு வருகிறான். அவன் தான் ஹென்றி. அதன்பின் நடக்கும் நிகழ்வுகளே கதையை இல்லையில்லை வாழ்க்கையை நகர்த்தி செல்கிறன. தன் பப்பாவின் ஊருக்கு சென்றபின் அங்கேயிருக்கும் மனுஷங்க எல்லாம் அவனை வித்தியாசமான மனிதனாக பார்ப்பதும் அங்கு தேவராஜனுடன் சிநேகிதம் கொள்வதும் அழகு!. முதற் மூன்று அத்தியாயங்கள் ஹென்றி, தேவராஜன், அக்கம்மா, துரைக்கண்ணு , மண்ணாங்கட்டி, இன்னும் சில மனுஷங்களோட ஹென்றியின் வாழ்க்கை நகர்ந்து கொண்டே செல்கிறது. அடுத்ததாக நான்காம் பாகத்தில் பஞ்சாயத்து ஆரம்பித்ததிலிருந்து ஹென்றியுடனும் குமாரபுரத்து மக்களுடனும் நாம் வாழத்தான் வேண்டும்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்திப்புகளிலும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நம்மை யாருக்கும் எதுவும் ஆகிடகூடாது, எவ்வித பிரச்சினையும் இன்றி எல்லாம் சுமூகமாக அமையவேண்டும் என்ற எண்ணவோட்டமே மிகுதியாக காணப்படுகிறது. பஞ்சாயத்து நிகழ்வுகள் நாம் எல்லோரும்  வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது. பணம் சொத்து சுகத்தை விட நம் சொந்தங்களையும் உறவுகளையும் அவர்களின் அன்பை இறுதிவரைப் பெறுதலே உண்மையான சொத்து என்பதை மறைமுகமாக ஹென்றியும் துரைக்கண்ணுவும்  நமக்கு தெரிவித்துள்ளனர். பஞ்சாயத்து முடிந்த பின் அக்கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் ஹென்றியையும் துரைக்கண்ணுவையும் பிடித்தது மட்டுமின்றி அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு உண்டாயிற்று. அதன் பின்னர் ஹென்றியின் பப்பா வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க அங்குள்ள அனைவரும் உதவுவதும் அந்நிகழ்வில் நாமும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உள்ளத்தில் பொங்குவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.  ஹென்றியை துரைக்கண்ணு குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டதும் அவர் மேல் அன்பு கொண்டதும் மகிழ்வின் எல்லைக்கு கொண்டுச் சென்றது. கடைசியில் தேவராஜனும் அவர் மனைவி கனகவல்லியும் மீண்டும் தம்பதிகளாக சேர்ந்தது மகிழ்வின் எல்லைக்கு மீண்டும் அழைத்துச் சென்றது. தேவராஜன் அக்கம்மா அவர்களின் நல்ல உள்ளம் மண்ணாங்கட்டியின் மூலமாக வெளிப்பட்டது. முரடனாக எண்ணிக்கொண்டிருந்த துரைக்கண்ணுவை பஞ்சாயத்து நிகழ்வும் , பாண்டுவின் எதிர்காலத்தின் மேல் கொண்ட அக்கறையும், பேபியின் மீது அவர் கொண்ட பாசமும் பரிதாபமும் துரைக்கண்ணுவின் மேல் நமக்கு அன்பும் மரியாதையும் ஏற்படுகிறது. எல்லாம் சுலபமாக நடந்து கொண்டிருக்கும் போதே பேபி ஹென்றி வீட்டை விட்டு வெளியேறி ஹென்றி அன்று கொடுத்த வெள்ளை வஸ்திரத்தை அணிந்து கொண்டு தான்பாட்டுக்கு சென்றது அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கியது. வாசித்து முடிக்கும் போது சிறிது நாட்களே பேபி அக்கிராமத்தில் வாழ்ந்தாலும் நிரந்தரமாய் அக்கிராம மனுஷங்க மனசில மட்டுமில்லாம நம்மனசிலயும் வாழ்வா பேபி.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற நாவலின் மூலம் குமாரபுரத்தில் வாழ்ந்தும் பின் இன்னமும் அங்கு சிறிது காலமேனும் வாழவேண்டும் என்ற ஆசையை தூவிச்சென்ற ஜெயகாந்தன் அவர்களுக்கு பேரன்பின் முத்தங்கள் .

நாவலில் மனம் கவர்ந்த சில வரிகள்…

உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையை சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம்.

“ஏதாவது அர்த்தம் இருக்கும். அவங்களுக்கு அது தெரியாமல் நம்பறாங்க… நீங்களும் அதைத் தெரியாமல் அது மூடத்தனம்னு நெனைக்கிறீங்க. ஆனால் ஏதாவது அர்த்தம் இருக்கும். – ஹென்றி.

“தப்புப் பண்ணினவனைக் கூட ஒரு நல்ல காரியம் செய்ய வைக்கிற தண்டனை ஒரு பெரிய நாகரீகம் இல்லியா!”

அவனது உணர்ச்சிகள் ஜாதி மத சமூக பந்தங்களை எல்லாம் கடந்த ஓர் மனித உறவின் அடிப்படை.

சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்..!

 

நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம் – ஜெயகாந்தன்

தேவி அருண்அவர்களது பார்வை

 

நீண்ட நாட்களுக்கு பிறகு, புன்னகையின்வழி வாழ்க்கையை காட்டிய ஒரு புத்தகம். ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் என ஏதுமின்றி இதயத்திற்கு நெருக்கமான ஒரு கதைக்களம். காதல் என்று ஒன்றை கண்ணில் காட்டாமலே காதலின் உட்பொருளை ஊட்டிய கதை நடிகலன்கள். ஜாதிய பெயர்கள் பின்னொட்டில் மட்டுமே பதியவைத்து மனதில் ஒற்றுமையை நிலவிடவும் ஆசிரியர்.

 

ஹென்றி, தேவராஜன், துரைகண்ணு, அக்கம்மாள், மண்ணாங்கட்டி, பாண்டு, தேசிகர், மணியகாரர், கிளியம்மாள், போஸ்ட்டு ஐயர், பேபி, கனகவல்லி என ஒரு ஊரையே கதைக்கு ஆக்கியிருக்கும் அழகு, வாசிக்கும் போது மெருகேற்றுகிறது. இப்படி உயிரோட்டமாய் உலவவிட்ட மாந்தர்கள் மத்தியில், “பப்பா” (சபாபதி பிள்ளை), “மம்மா” என கதைக்குள் கதைகளாய் சுற்றி செல்லும் கதை கண்கலக்க வைத்தது ஒவ்வொரு வார்த்தைகளிலும்.

 

அப்பாவின் அன்பை, பப்பாவின் அப்பா முதல் துவங்கி, துரைகண்ணுவின் வளர்ப்பு வரைக்கும் வேறுபடுத்திக்காட்டி, பப்பா ஹென்றி வளர்க்கும் முறையில் அன்பை தனித்து காட்டும் படலங்கள் மனதை உரசி செல்கின்றன.

 

கதை போகிற போக்கில் கருத்துக்கு தீனி போடும் ஜெயகாந்தனின் விரல்கள்,  தாக்கத்தை ஏற்படுத்தவும், ஒரு நிமிடம் யோசிக்க வைக்கவும் எப்போதும் போல இப்போதும் மறக்கவில்லை.

 

அக்கா தம்பி, அப்பா மகன், அம்மா மகன், கணவன் மனைவி, அண்டை அயலார் உறவு, சகோதரத்துவம், இணக்கம், மாமியார் மருமகன், நட்பு, குழந்தை பார்வை என எல்லா உறவுகளையும் மனதில் நீந்த விட்டு விடைகளை நம்மை தேர்ந்தெடுக்க வைக்கும் ஜெயகாந்தன், ஜெயகாந்தன் தான்…

மொழி என்னடா மொழி, மனம் லயந்து அன்போடு கூறும் வார்த்தைகள் மொழிகளை மறந்து மனதோடு சேரும்; சுற்றியிருக்கும் பிறரின் கருத்துக்கு பயமின்றி, அதை பற்றிய நினைப்புமின்றி தனக்கு தோன்றியதை செய்யும் குழந்தை அவள், என பேபியை காட்டும் விதம் பைத்தியம் மீதும் காதல் எழ செய்யும்.

 

“அவள் ஏன் போகிறாள்? என்ற கேள்விக்கு அவள் ஏன் அன்று வந்தாள்? என்ற கேள்வியே விடையானது.” என்ற ஒற்றை வரியில் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகத்தின் தேவையை ஹென்றியின் மனக்கண்ணில் காட்டி அவன் திரும்பும் போது உறவுகளை கண்முன் நிறுத்தி, விடையை நம்மிடம் சொல்லாமல் சொல்லும் விதம் மனநிறைவை தருகிறது.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Exit mobile version