கர்நாடக மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற சித்ரதுர்கா கோட்டை சிறந்த சுற்றுலாத்தலம் என்பதனை தாண்டி “ஒனகே ஒபவ்வா” எனும் வீரமங்கையின் வீரதீரத்தை அந்த கோட்டை சுமந்துகொண்டு இருக்கிறது. இன்றும் அந்தப்பகுதியில் அப்பெண்ணின் வீரத்தை போற்றி வருகிறார்கள்,நினைவில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய பெண்ணின் சரித்திரத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
பெங்களூருவில் இருந்து 200KM தொலைவில் இருக்கக்கூடிய சித்ரதுர்கா கோட்டை மடக்காரி நாயகா என்பவரது ஆட்சியில் இருக்கும்போது ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்படுவதற்கு முன்னதாகத்தான் இந்த சம்பவம் அரங்கேறியது, ஒனகே ஒபவ்வா எனும் வீரமங்கையின் வீரத்தை காட்டுவதற்கான வாய்ப்பினை வழங்கியது.
அதிக பாதுகாப்புகளை கொண்டிருக்கின்ற சித்ரதுர்கா கோட்டையில் நுழைவது என்பது மிகவும் கடினமான விசயம். அப்படிப்பட்ட கோட்டையில் இருக்கின்ற ரகசிய துவாரத்தின் வழியாக யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து திடீர் தாக்குதலை நடத்திதான் வெற்றி பெற்றார் ஹைதர் அலி. அந்த துவாரத்துக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார் ஒரு வீரர். கஹேல் முத்த ஹனுமா எனும் அந்த வீரரின் மனைவி தான் ஒனகே ஒபவ்வா. சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார் கஹேல் முத்த ஹனுமா. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது தண்ணீர் வேண்டும் என கேட்க, தண்ணீர் கொண்டுவர வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய சுனைக்கு சென்றார்.
அது கோட்டையின் பாதியில் இருந்தது, அதற்க்கு அருகே தான் ஹைதர் அலி தனது வீரர்களை ரகசியமாக உள்ளே அனுப்பிய வழி இருந்தது. ஒனகே ஒபவ்வா அப்போது எதிராளி போர் வீரர்கள் அந்த குகைப்பாதையில் இருந்து ஒவ்வொருவராக வருவதை பார்த்துவிட்டார். அந்த குகை பாதையின் வழியாக ஒரு வீரர் மட்டுமே உள்ளே வர முடியும். குகையில் இருந்து ஒவ்வொரு வீரர் வெளிவரும் போது அருகே இருந்த உலக்கையினால் அடித்துக்கொன்று பிணத்தை அருகில் நகர்த்தி வைத்துக்கொண்டு வந்தார். அடுத்து வருகிற வீரனுக்கு வெளியில் இருக்கின்ற ஒரு பெண் உலக்கையினால் அனைவரையும் அடித்து கொன்று கொண்டு இருக்கிறார் என்பது தெரியாமல் போனது. ஆகையினால் ஒவ்வொருவராக வந்துகொண்டே இருந்தனர்.
தண்ணீர் கொண்டுவர சென்ற மனைவி திரும்பி வராமல் போனதனால் என்னவாயிற்று என்பதனை அறிந்துகொள்ள ஒபவ்வாவின் கணவர் வந்தார். ரத்தக்கறையுடன் கையில் உலக்கையோடு பிணக்குவியல்களுக்கு நடுவே நிற்றுக்கொண்டிருந்த மனைவியை கண்டு ஒருகணம் அதிர்ந்தே போனார் கஹேல் முத்த ஹனுமா. பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர் தனது வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க போர் நடந்தது. நடந்த தாக்குதலில் ஹைதர் அலி வென்றார். அதே நாளில் ஒனகே ஒபவ்வாவும் இறந்துகிடந்தார் என கூறுப்பப்டுகிறது. அதிர்ச்சியினால் இறந்திருக்கலாம் அல்லது எதிரிகளின் தாக்குதலினால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
வீரமாக எதிரிகளை துவம்சம் ஆக்கிய அந்தப்பெண் கர்நாடகாவின் பெண் வீரமங்கையாக போற்றப்படுகிறார். ஹைதர் அலி வீரர்கள் உள்ளே நுழைந்த குகை வழிக்கு , ஒனகே ஒபவானா கிண்டி (கிண்டி என்றால் துளை ) என அழைக்கப்படுகிறது.
கர்நாடகாவிற்கு நீங்கள் செல்லும் போது சித்ரதுர்கா கோட்டையை பார்த்துவாருங்கள்.