Site icon பாமரன் கருத்து

என். டி. ராமராவ் பார்முலா ரஜினிக்கு ஒத்துவருமா?

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. வெறும் மூன்று மாதங்களே தேர்தலுக்கு இருக்கும் சூழலில் என். டி. ராமராவ் போன்று தேர்தலில் ரஜினி வெல்வார் என நம்பிக்கை கூறுகிறார்கள், அவரை அரசியலுக்கு அழைத்து வந்தவர்கள். அது நடக்குமா?

அண்மையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பிற்கு பிறகு, முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றார் ரஜினி. ரஜினி அப்படி கூறியவுடன்  அவர் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என பலரால் ஆரூடம் சொல்லப்பட்டது. ஆனால் அனைத்திற்கும் மாற்றாக, ஜனவரியிலேயே கட்சி ஆரம்பிக்கப்படும் என அறிவித்து ஆச்சர்யமளித்தார் சூப்பர் ஸ்டார்.

ரஜினி இத்தனை நாட்கள் தயங்கியதற்கு காரணம், வெற்றி பெற முடியுமா என்கிற சந்தேகம் தான். வெளிப்படையாகக்கூறினால் இன்றளவும் கூட அந்த சந்தேகம் என்பது ரஜினி உட்பட அனைவருக்குமே இருக்கிறது. ஆனால் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உட்பட ரஜினி அவர்களின் அரசியல் வருகையை ஆதரித்த சிலர் ரஜினி அவர்கள் என். டி. ராமராவ் ஆந்திராவில் கட்சி ஆரம்பித்து சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தது போலவே பிடிப்பார் என நம்பிக்கை கூறுகிறார்கள்.

ரஜினி அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியுமா? குறிப்பாக என். டி. ராமராவ் பார்முலா ரஜினிக்கு ஒத்துவருமா? என்பதைத்தான் இங்கே விரிவாக பார்க்க இருக்கிறோம்.

ஆட்சி பிடிப்பு சாத்தியமா?

இந்தக்க்ள்வியை இன்னும் சற்று சரியாகக் கேட்க வேண்டும் என நினைக்கிறேன். வருகிற 2021 இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பதென்பது சாத்தியமா? “சாத்தியமில்லை” என்பது தான் தமிழக அரசியலை குறைந்த அளவிலேனும் உற்று நோக்குகிறவர்களின் பதிலாக இருக்க முடியும். இதனை உறுதிப்படுத்தும் விதமான சில காரணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.

எழுச்சி இல்லை : சில மாதங்களுக்கு முன்பு ரஜினி அவர்கள் குறிப்பிட்டுக்கூறிய வார்த்தை ‘எழுச்சி’. ரஜினியின் தேவை இருக்கிறது என்ற எழுச்சி மக்கள் மத்தியில் எழுந்தால் கண்டிப்பாக வருவேன் என தெரிவித்திருந்தார் சூப்பர் ஸ்டார். ஆனால் அப்படியொரு எழுச்சி அலை எங்கேயும் இல்லாத நிலையில் அழுத்தத்தின் காரணமாக மட்டுமே ரஜினி அரசியலுக்கு வந்துள்ளார் என்பதே எதார்த்தமான உண்மை.

என். டி. ராமராவ் vs  ரஜினி  : என். டி. ராமராவ் ஆந்திராவில் கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார் என்பதையே உதாரணமாகக்கூறுகிறார்கள். என். டி. ராமராவ் எந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகரோ அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத திரைப் புகழ் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ஒரு வெற்றிக்கு திறமையும் புகழும் மட்டுமே போதுமானது கிடையாது. மாறாக, சரியான தருணமும் சூழ்நிலையும் மிகவும் அவசியமான காரணிகள். இந்த இரண்டும் தான் தற்போது தமிழகத்தில் ரஜினி அவர்களின் வெற்றிக்கு தடையாக இருக்கின்றன. ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்தார் ராமா ராவ். மக்களிடமும் அந்தப்பிரச்சாரம் எடுபட்டது. ஆனால் இங்கே , அத்தகைய வாய்ப்பு இல்லை.

கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு பேராளுமைகள் மறைந்துவிட்ட தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருக்கவே செய்கிறது.

என். டி. ராமராவ்  vs ரஜினி

ஆனால் அந்த இடங்களை பிடிக்க ஸ்டாலின் தீவிரமாக தயார் ஆகிவிட்டார். மற்றொருபுறம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரும் இயக்கத்தின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். இன்னும் இந்த பட்டியலில் சீமான், விஜயகாந்த், கமல் ஹாசன் என ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது. இதில் இன்னொரு நபராகவே இணைந்திருக்கிறார் ரஜினி.

கூட்டணிக்காகவே ரஜினி : ரஜினி தனித்து போட்டியிட வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. அவர் பாஜக அதிமுக கூட்டணியில் இணையலாம் அல்லது பாமக , மக்கள் நீதி மையம் கட்சியுடன் இணைந்து மூன்றாம் கூட்டணி அமைக்கலாம். ஆக ரஜினி அவர்களின் இப்போதைய தேவை, வாக்குகளை பிரிப்பதில் தான் இருக்கும். மொத்தத்தில் திமுகவிற்கு சவால் தரக்கூடிய பணியில் தான் ரஜினியின் பங்களிப்பு இந்தத்தேர்தலில் இருக்கும்.

எதிர்காலமும் சவால் தான் : இதுவரைக்கும் நமக்கு தெரிந்தவரையில் ரஜினி தீங்காக நினைக்கக்கூடியவர் இல்லை. ஊழல் செய்யவும் மாட்டார், ஊழல் செய்யவும் அனுமதிக்க மாட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல மூன்று மாதங்களில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் பலமும் அவரிடம் இல்லை என்பதே உண்மை.

ரஜினி அவர்களின் எதிர்காலம் : காலம் எப்படி வேண்டுமானாலும் செயல்படும். ஆனால் அவரின் உடல்நலன் என்பது அவரின் மன வேகத்திற்கு ஈடுகொடுக்குமா எனத் தெரியாது. அரசியல் என்பது நல்லவர்களின் கூடாரம் அல்ல. ஆகவே அவரை போன்றவர்களை அடையாளம் காண்பது மிகப்பெரிய வேலை. அதிலும் அவருக்கு பிறகு கட்சியை யாரிடம் ஒப்புவிப்பார் என்ற மாபெரும் கேள்வியும் எழவே செய்கிறது.

சவால்கள் அரசியலில் சகஜம். நமக்கு முன்னரே ரஜினி அவர்கள் இதைப்பற்றியெல்லாம் விவாதித்து இருப்பார். அவரிடம் நம்முடைய அனுமானங்களை உடைத்தெறிந்து வெற்றிபெறக்கூடிய சக்தி இருப்பின் வெல்லட்டும்.

பலநாள் வாக்குறுதியை நிறைவேற்றிய ரஜினியின் அரசியல் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

பாமரன் கருத்து

Exit mobile version