Site icon பாமரன் கருத்து

தேசியக் கல்விக் கொள்கை 2020 – சாதகக பாதக விசயங்கள் என்ன இருக்கிறது?

பள்ளி மாணவர்கள்

தேசியக் கல்விக் கொள்கை 2020 – சாதகக பாதக விசயங்கள் என்ன இருக்கிறது?

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை 2020” க்கு ஒப்புதல் அளித்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கல்விக்கொள்கையானது தேசிய கல்விக் கொள்கை 1986 க்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிற இந்த புதிய கல்விக்கொள்கை குறித்து இருவிதமான கருத்துக்கள் கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அவை குறித்து நாம் பார்ப்பதற்கு இதில் இருக்கக்கூடிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம். 

ஆதரவு மற்றும் எதிர்ப்புக்கருத்துக்களை பார்க்கும் போது எனது கருத்துகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 இல் இருக்கும் 20 சிறப்பம்சங்கள்

[Source : பிபிசி]

 

மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்.

 

தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்துதல்.

 

எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, கற்பதுடன் சிறந்து விளங்கும், எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்தல்.

 

இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்தல்.

 

பள்ளி கல்வியிலிருந்து வெளியே வரும் போது ஒவ்வொரு மாணவரும் கூடுதலகாக ஒரு திறனை வளர்த்து கொள்வதை உறுதி செய்தல்.

 

கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி 2030-க்குள் நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

3,5,8-ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் , உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும்.

 

ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழிக் கல்வி.

 

திறந்தநிலை பள்ளிகளை உருவாக்குதல்.

 

மாணவர்களுகான பள்ளி ரிப்போர்ட் கார்டுகளில் வெறும் மதிப்பெண்களை மட்டும் குறிப்பிடாமல், விரிவாக அவர்களது முழு திறனையும் குறிப்பிடுதல்.

 

உயர் கல்விக்கான சேர்கை விகிதம் 50 சதவீதமாக உயர்வதை உறுதி செய்தல்.

 

எம்.பில் படிப்புகள் இனி இருக்காது.

 

இளநிலை பட்டக் கல்வி , பன்நோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். ஓராண்டு கல்வியுடன் வெளியேறினால் சான்றிதழ் மட்டுமே கிடைக்கும், இரண்டாண்டு கல்வியுடன் வெளியேறினால் டிப்ளமோ மட்டுமே கிடைக்கும்.

இந்திய மொழிகளை, கலைகளை, கலாசாரத்தை ஊக்குவிக்க பாடத்திடங்களை ஏற்படுத்துதல்.

மொழி பெயர்ப்புக்கான கல்வி நிலையங்களை உருவாக்குதல்.

 

சமஸ்கிருதம் மற்றும் இதர செம்மொழிகளுக்கான கல்வி நிலையங்கள் மற்றும் துறைகளை வலிமைப்படுத்துதல்.

 

பாலி, பாரசீகம், பிராகிரதம் ஆகியவற்றுக்கான தேசிய கல்வி நிலையங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உருவாக்கப்படும்.

 

கல்வித் துறையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

 

பட்டியில் இன, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

மேல்நிலை பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, தேசிய கல்வி முகமை (NTA) மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

புதிய தேசிய கல்விக்கொள்கை இப்போது அவசியமா?

ஏற்கனவே ஒரு தேசிய கல்விக்கொள்கை நல்ல முறையில் பின்பற்றப்பட்டவரும் போது புதிய கல்விக்கொள்கை அவசியமானதா என்பது சிலரது விவாதமாக இருக்கிறது.

பாமரன் கருத்து :

கால சூழலுக்கு ஏற்ப கல்விக்கொள்கையை மாற்றுவது தவறான விசயமென முற்றிலுமாக கூறிவிட முடியாது. அதேபோல நாம் ஏற்கனவே பின்பற்றி வருகிற கல்விமுறைதான் சிறந்தது எனவும் உறுதியாக சொல்லிவிட முடியாது. 

குலக்கல்விக்கான தந்திரமான வழியா?

கல்வி செயற்பாட்டாளர் மற்றும் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “இந்த கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்விக்கே வழிவகை செய்யும்,” என்கிறார். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் ஏதாவது ஒரு தொழில் கல்வியை கற்றுக் கொண்டு அதில் திறமையுடன் வெளியே வர வேண்டும் என்கிறார்கள். நீங்கள் இந்தியச் சமூகச் சூழலில் இதனைப் பொருத்திப் பாருங்கள் ஒரு மாணவர் 14 வயதில் ஒரு தொழிலில் திறமையாக இருந்தால், அவர் ஆர்வம் எதில் செல்லும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் அந்த வயதில் சரி ஏன் மேலும் படித்துக் கொண்டு, கற்ற தொழிலை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவோம் என்றுதானே நினைப்பான்.” என்கிறார்.

பாமரன் கருத்து :

இதுவொரு முக்கியமான கருத்து. இந்தியாவின் வறுமை சூழ்நிலையோடு நாம் ஒப்பிட்டு பார்த்தால் இப்படியொரு பிரச்சனை நடைபெறுவதை நம்மால் கவனிக்க முடியும். ஏழை எளியவர்களின் பிள்ளைகள் இதனால் உயர்கல்விக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும்.

அதே சமயம் இன்னொரு பார்வையும் இந்த விசயத்தில் அவசியமாகிறது. எனக்குத்தெரிந்து உயர்கல்வி பயின்ற பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர்கள் பிற வேலைகளுக்கும் செல்ல முடியாமல் படித்த கல்விக்கான வேலையும் கிடைக்காமல் படிக்காதவர்களைக்காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருந்துவருகிறார்கள். இவர்கள் உயர் கல்வி படித்து என்ன பயன்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இந்த விசயத்தில் சில ஆண்டுகளுக்கு பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஏழைக்குழந்தைகள் கல்வி கற்றலில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை பார்த்தால் மட்டும் தான் மிகச்சரியாக இந்த விசயத்தை கையாள முடியும்.

மூன்று மொழிகள் கற்க வேண்டியது அவசியமா?

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் தற்போது இருமொழிக்கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்பட இருக்கிறது. இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது கல்வியாளர்கள் வைக்கின்ற குற்றசாட்டு.

பாமரன் கருத்து :

உண்மையாலுமே மும்மொழிக்கொள்கை என்பது அவசியமற்ற ஒன்று. மொழி என்பது அறிவு அல்ல என்பதை புரிந்துகொள்ளாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட முடிவாகத்தான் நான் பார்க்கிறேன். இந்தியை ஊக்குவிக்கவில்லை என்று சொன்னாலும் கூட மூன்றாவதாக எந்தமொழியையும் பிள்ளைகள் கூடுதலாக கற்றால் அது அவர்களுக்கு சுமையாகவே அமையும்.

ஒருவர் வெளிப்பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நிச்சயமாக அவர்கள் அந்தப்பகுதியின் மொழியை கற்றுக்கொள்ளுவார்கள். நமது ஊரில் இருக்கும் ஓட்டுநர்கள் இதற்கு மிக முக்கியமான உதாரணம். குறைந்தது 1% முதல் அதிகபட்சமாக 5% வரைக்கும் மட்டுமே இன்னொரு பகுதியில் வேலை செய்திட வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் மீதமிருக்கும் மாணவர்களும் எதற்காக கூடுதல் சுமையை சுமக்க வேண்டும் என்பதே அடிப்படையான கேள்வியாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சான்றிதழ் அவசியமா?

புதிய முறைப்படி ஒரு மாணவர் ஒரு பட்டப்படிப்பை படிக்கிறார் எனில் அவர் முதலாம் ஆண்டை நிறைவு செய்தால் ஒரு சான்றிதழ் ,இரண்டாம் ஆண்டை நிறைவு செய்தால் ஒரு சான்றிதழ், இறுதியாக படித்து முடித்த பிறகு பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு ஒரு சான்றிதழ் என வழங்கப்படும். இதனால் ஒருவர் கல்வியை பாதியில் விட்டால் கூட சில ஆண்டுகளுக்கு பின்னர் கல்வியை தொடர முடியும் என ஆதரவாளர்களால் சொல்லப்படுகிறது. இதனை எதிர்ப்பவர்களோ ஆண்டுக்கு ஆண்டு ஒரு சான்றிதழை கொடுப்பதனால் இடையிலேயே கல்வியை விட்டுவிட்டு பல மானவர்கள் சென்றுவிடுவார்கள் என கூறப்படுகிறது.

பாமரன் கருத்து :

தற்போது உயர்கல்வியில் இடைநிற்றல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்துவருகிறது. புதிய முறை குறித்து வைக்கப்படும் இருவிதமான கருத்துக்களுக்கும் போதுமான அளவு உதாரணங்கள் நம்மிடையே இருக்கின்றன. உண்மையில் இந்தப்புதிய முறை ஏழை எளிய மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டால் மீண்டு விட்ட இடத்தில் இருந்து துவங்குவதற்கு இந்த புதிய முறை வரப்பிரசாதமாக அமையும். சிலர் படிப்பை பின்னர் தொடரலாம் என அலட்சியமாக விட்டுச்செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நல்லனவற்றையே பார்ப்போம்.

கல்வியில் எவ்வளவு முதலீடு செய்யப்பட இருக்கிறது?

கல்வித் துறையில் பொதுமுதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% த்தை விரைவில் எட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும் என புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது. பாமரன் கருத்து :

இதுவரைக்கும் மிக அற்பமான தொகையே கல்விக்கென பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 6% என்பது நல்ல முடிவு. இதனால் கல்வித்துறையில் பல்வேறு ஆக்கபூர்வமான முன்னேற்றங்களை செய்திட முடியும். உயர்கல்வியில் ஆராய்ச்சி படிப்புகளில் பெரும் முன்னேற்றத்தை இதனால் செய்திட முடியும். கடைக்கோடியில் இருக்கும் பாமரனின் பிள்ளைகளுக்கும் அதன் பயன் சென்றடைந்தால் செய்கின்ற செலவு சமூகத்திற்கானதாக இருக்கும்.

ஆசிரியர்களுக்கான தகுதி?

பாமரன் கருத்து : இந்த புதிய கல்விக்கொள்கையில் ஆசியர்களுக்கான தகுதிக்கென சில விசயங்கள் கூறப்பட்டுள்ளன. வரும் காலங்களில் பிஎட் படிப்பு நான்கு ஆண்டுகள் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தகுதி அடிப்படையிலும், பல ஆதார, கால அளவிலான செயல்திறன் மதிப்பீடு, கல்வியியல் நிர்வாகிகள் அல்லது ஆசிரிய கற்பிப்பாளர்களாக உயரும் வகையிலான முன்னேற்ற வழிமுறைகளின்படியும் , பதவி உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டியது.

மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதா?

ஏற்கனவே மாநிலங்களின் உரிமை பல்வேறு விசயங்களில் பறிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கல்வியிலும் மத்திய அரசு தலையிடுவது மாநில அரசின் கல்வி மீதான உரிமையை மேலும் பறிப்பதாக பல கல்வியாளர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இது உண்மையும் கூட. மத்திய அரசு தகுதிகளையும் வரையறைகளையும் மட்டும் நிர்ணயித்துவிட்டு மாநிலங்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட உரிமைகளை வழங்குவது நன்மை பயக்கும் என்பது பல கல்வியாளர்களின் கருத்து.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version