நீட் தேர்வினால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக பல மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்கள். தற்கொலை என்பது எதற்கும் தீர்வாக அமையாது என்ற போதிலும் கூட அதற்கான காரணத்தை நாம் உணர்ந்தால் தான் பல மாணவர்களின் உயிரையாவது காப்பாற்றிட முடியும்.
நல்ல மருத்துவர்கள் உருவாக வேண்டுமெனில் தகுதித்தேர்வு அவசியமானது தானே என்பது நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் வைக்கிற வாதமாக இருக்கிறது. மேலோட்டமாக பார்க்கும் போது இது சரியான வாதமாக தெரியலாம். ஆனால் அதில் இருக்கும் எதார்த்தமான பிரச்சனைகளை கவனிக்க வேண்டியது அவசியம்.
முதல் பிரச்சனை , நமது மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பாடத்தை பயில்கிறார்கள். ஆனால் நீட் தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் சிபிஎஸ்இ போன்ற வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதற்காக தமிழக மாணவர்கள் தனியாக கோச்சிங் சென்டருக்கு சென்று படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே முதல் மன உளைச்சல்.
இரண்டாவது பிரச்சனை, மருத்துவம் படிப்பது பெருங்கனவு கொண்டவர்கள் படிக்கிற படிப்பு. சிறு வயது முதலே இதற்காக கடுமையாக படித்து வந்திருப்பார்கள் மாணவர்கள். அப்படி 12 ஆம் வகுப்பு தேர்வை சந்தித்த ஒரு மாணவரிடம் தம்பி நீ படிச்சது போதாது இதோ இதையும் படி என சொன்னால் அழுத்தம் உண்டாகத்தானே செய்யும். இதனாலேயே ஏழை மாணவர்களால் நீட் தேர்வை சந்திக்க இயலாத சூழல் நிலவுகிறது. கனவுகள் சிதைக்கப்படும் போது சில சமயங்களில் உயிர் துச்சமாக போய்விடுகிறது.
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பாடத்திட்டத்தின் தரத்தை வைத்திருப்பது மாநில அரசின் தவறுதானே என சிலர் வாதம் செய்கிறார்கள். மாநில அரசுகளுக்கு பாடத்திட்டத்தினை உருவாக்கும் உரிமை வழங்கப்பட்டதற்கான காரணத்தை உணராதவர்கள் தான் அப்படி பேசுவார்கள். மாணவர்கள் அவரவர் சமூகம் சார்ந்த விவரங்களை கற்றுத்தேறுவதற்க்காக மட்டுமே அப்படி செய்யப்பட்டது.
தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு ஆனாலும் கூட மருத்துவம் படித்து அவர்கள் தேர்வு எழுதித்தான் மருத்துவர்கள் ஆகப்போகிறார்கள். ஆகவே அவர்கள் தகுதி படைத்தவர்களாகத்தான் வெளியே வருவார்கள். இதில் எதற்கு நீட் தேர்வு?
முதன் முதலாக நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா உச்சநீதிமன்றம் வரை சென்று பார்த்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் புரிந்துகொள்ளவில்லை, சாமானியர்களின் குரலுக்கு செவி கொடுக்கவேண்டிய நீதிதாயும் செவிமடுக்கவில்லை.
அனைவரும் கைவிட்டபிறகுதான் தற்கொலை எனும் தீர்வை நோக்கி நகர்ந்தார் அனிதா. அவரின் தற்கொலைக்கு காரணமான இந்த சமூகமோ அவ்வப்போது துக்கம் அனுசரிப்பதோடு சரியென ஓய்வெடுப்பதனால் மீண்டும் மீண்டும் ஒரு மரணம் அரங்கேறுகிறது. அரியலூரை சேர்ந்த விக்னேஷ் தற்போது தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்.
கனவே இல்லாத ஜென்மங்களால் கனவை தொலைத்தவர்கள் படுகிற துன்பத்தை உணர முடியாது. அப்படி உணரவில்லையென்றால் அமைதி காத்திடுங்கள்.
ஜல்லிக்கட்டிற்காக களம் கண்ட தமிழர்கள் நீட் தேர்வுக்கு எதிராக எப்போது களம் காணப்போகிறார்கள் என ஆவலோடு காத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவனே. ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் இருக்குமாயின் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக பரப்பிடுங்கள்.
மாணவர்கள் நீட் தேர்வு பிரச்சனையில் கவனம் செலுத்திட வேண்டும். நீங்கள் ஒன்றுபட்டால் உங்களை எவராலும் வீழ்த்திட முடியாது. புறப்படுங்கள்.
விக்னேஷ் கடைசி ஆளாக இருக்கட்டும்.