சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறது. அதற்க்கான வேட்பாளர்கள் அறிவிப்பும், தேர்தல் பரப்புரை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பேச்சுக்கள் பெரும்பாலானவை “புவிசார் அரசியல்” “சூழலியல் அரசியல்” போன்றவற்றை உள்ளடக்கி இருப்பதனால், அது சார்ந்தே இக்கட்டுரையின் நீட்சியும் இருக்கும்.
>> புவிசார் அரசியல் தேவையானதா?
>> புவிசார் அரசியல் தேர்தலில் வெற்றியை பெறுமா?
>> பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கவனிக்கப்படுமா?
>> நாம் தமிழர் கட்சியின் குறைபாடுகள் என்ன?
வாருங்கள் அலசலாம்.
ஒவ்வொருவருடைய பார்வையும் வித்தியாசப்படலாம். உங்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கமெண்டில் தவறாமல் பதிவிடுங்கள் .
நாம் தமிழர் கட்சியின் புவிசார் அரசியல் தேவையானதா?
பிற அரசியல் கட்சிகள் வெறும் அரசியல் நோக்கத்துக்காக 8 வழிச்சாலை தடுப்பு பிரச்சாரத்தையும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளையும் மீத்தேன் பிரச்சனைகளையும் அக்கறையோடு பேசி வருகின்றனவே அன்றி அவைகளுக்கு சூழலியல் அக்கறை இருப்பதற்கு எந்தவித சான்றும் அவர்களின் பேச்சுக்களில் இருந்து நமக்கு கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளில் புவிசார், சூழலியல் சார் அரசியலை பேசக்கூடிய கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. நிச்சயமாக இதனை வரவேற்றுத்தான் ஆகவேண்டி இருக்கிறது.
காரணம், இலவசமாக கிடந்த தண்ணீரை மாசடைய செய்துவிட்டு “சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை” விலைக்கு வாங்கி குடித்துக்கொண்டு இருக்கிறோம். அடுத்ததாக காற்றை அசுத்தப்படுத்தி விட்டு “சுத்தமான காற்றை” விலைக்கு வாங்கி சுவாசிக்க இருக்கிறோம். ஒரு மனிதன் வாழ்வதற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற “நீர் மற்றும் காற்று” ஆகியன இலவசமாக கிடைக்கப்பெற வேண்டும்.
இந்த சூழலில் எவர் புவிசார் அரசியலை முன்னெடுத்தாலும் அதனை வரவேற்கவே “பாமரன் கருத்து” முன்வரும். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சூழலியல் சார்ந்த அரசியல் முன்னெடுப்பை வரவேற்கவே செய்கிறோம். நிச்சயமாக இன்றைய சூழலில் புவிசார் அரசியல் தேவையானதே.
புவிசார் அரசியல் தேர்தலில் வெற்றியை பெறுமா?
புவிசார் அரசியல் தேர்தல் அரசியலில் எடுபடுமா என்றால் “எடுபடும்” ஆனால் அதற்கு மிக நீண்ட காலம் பிடிக்கும் என்பதே நிதர்சனம்.
மற்ற அரசியல் கட்சியினர் “தொழிற்சாலைகள்” “சாப்ட்வேர் நிறுவனங்கள்” அமைக்கப்படும் என கூறும் போது “மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக்குவேன்,விவசாயத்தை அரசு பணியாக்குவேன்” என்பது போன்ற வாக்குறுதிகள் மக்களை ஈர்க்க மறுத்தன. உண்மையை சொல்ல வேண்டுமானால் ஆரம்ப காலங்களில் சீமானின் இப்படிப்பட்ட பேச்சுக்களை கண்டு “பலர் சிரித்தார்கள்” “என்ன இவர் இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்” சீமானின் பாசையில் சொல்ல வேண்டுமானால் “பயித்தியகாரத்தனமான பேச்சு” என்றெல்லாம் கூட விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் 8 வழிச்சாலை பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை போன்ற சூழலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளினால் தற்போது மக்கள் சூழலியல் சார்ந்த அறிவியலை கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றே கூற முடியும். ஆகையினால் சீமானின் சூழலியல் சார்ந்த பேச்சுக்களை அவர்கள் இப்போது கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆமாம் அவர் சொல்வதும் சரிதான் என்ற பேச்சுக்களை கேட்க முடிகிறது.
தேர்தல் அரசியலில் புவிசார் அரசியல் இப்போதைக்கு எடுபடாது என்பதனை சீமான் அறிந்து இருக்கிறார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசும்போது “நாம் வாக்குக்காக புவிசார் அரசியலை பேசவில்லை, வாழ்விற்க்காக பேசுகிறோம்” என்றார்.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கவனிக்கப்படுமா?
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டையே நாம்மால் இன்னும் கொண்டுவர முடியவில்லை. சீமான் 50 % இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு கொடுத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது.
வளரும் கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சியில் 50% இடஒதுக்கீடு கொடுப்பது என்பது சாதாரணமானது. வரும் காலங்களிலும் இதே 50% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு உண்மையாலுமே சமஉரிமை வழங்குகிறார்கள் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். ஆகவே எதிர்காலம் தான் நமக்கு இதனை தெரியவைக்கும்.
நாம் தமிழர் கட்சியின் குறைபாடுகள் என்ன?
விவசாயம் மட்டுமே போதாது – நாம் தமிழர் கட்சியின் பிரதானமாக இருப்பது விவசாயம், சூழலியல் சார்ந்த அரசியல். ஆனால் வளரும் தேசத்திற்கு அது மட்டுமே போதாது. தொழில்நுட்பத்துறை, தொழிற்சாலைகள் ஆகியவையும் அவசியமாகிறது. பெரும்பாலான இளைஞர்கள் அப்படிப்பட்ட துறை சார்ந்த படிப்புகளை படித்துக்கொண்டு இருக்கும் போது அவர்கள் சார்ந்த துறைகளை கவனிக்க தவறுவது கூடாது. அவர்களுக்குமான கொள்கைகள் இருக்க வேண்டும். அனைத்து மக்களையும், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அரசியலே வெற்றியடையும்.
தமிழர் என்றால் மட்டுமே போதாது – எந்தவொரு விசயத்தையும் உணர்ச்சிபூர்வமாக அணுகினால் அங்கு தவறுதான் ஏற்படும். எந்தவொரு விசயத்திற்கும் தமிழர் என்பது மட்டுமே தகுதியாக இருக்க கூடாது. இதற்கு ஓர் உதாரணம், ராமர் பிள்ளை ஏமாற்றுகிறார் என பிரச்சனை எழுந்தபோது அவர் தமிழர் , அவரை முடக்க பார்க்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்கள் நாம் தமிழர் கட்சியின் சார்பிலானவர்களால் முன்னெடுக்கப்பட்டது.தமிழன் என்றால் சரியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல என்பதனை உணர வேண்டும். தமிழர் என்ற உணர்வும் சாதிய உணர்வாக உருவாகிவிடக்கூடாது, பிற இனங்களின் மீதான வெறுப்பாக மாறிவிடக்கூடாது.
வெறுப்பு அரசியல் தவிர்க்கப்பட வேண்டும் – விமர்சனங்களுக்கு சரியான முறையில் பதிலளிப்பதும் தங்களது கொள்கைகளை பொறுமையான வகையில் முன்னெடுப்பதும் அவசியமாகின்றது . பொதுமக்களிடத்தில் , குறிப்பாக இளைஞர்களிடத்தில் பரப்புரை மேற்கொள்ளும்போது அவர்களுடைய சிந்தனையை தூண்டுகிற விதத்தில் தான் பரப்புரை இருக்கவேண்டும் . மாறாக அவர்களுடைய உணர்ச்சியை தூண்டிடும் விதத்தில் இருக்கக்கூடாது . அது என்றுமே ஆபத்தில் தான் சென்று முடிவடையும் .
அண்மையில் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக வெளியான ஆடியோ அதற்கு பதிலளித்த விதம் நாம் தமிழர் கட்சியிலும் ஒருநபர் ஆதிக்கம் தான் இருக்கின்றதோ என்ற பார்வையை உண்டாக்கி இருக்கின்றது . வளரும் கட்சிக்கு இதுபோன்றதொரு தோற்றம் நல்லதல்ல . ஜனநாயகமே அனைவரையும் ஈர்க்கும் , நன்மை பயக்கும் .
தேர்தல் அரசியலில் மக்களே இறுதி எஜமானர்கள் . மக்கள் இப்போது அனைத்துக்கட்சிகளையும் அவர்களது செயல்பாடுகளையும் கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் , விமர்சனம் செய்ய துவங்கி இருக்கிறார்கள் . நாம் தமிழர் கட்சிக்கும் அவர்கள் மதிப்பெண்ணை வழங்குவார்கள் . பொறுத்திருந்து பார்ப்போம் .
உங்களது கருத்துகளை பதிவிடுங்கள்