குறைந்தபட்சம் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது தவறு என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள். அதற்காக வெட்கப்படுங்கள்.
தேர்தல் என்றால் ஜனநாயகம் என்ற கருத்து மாறி தற்போது தேர்தல் என்றால் பணநாயகம் என்ற எண்ணம் தோன்றிடும் அளவிற்கு இப்போதைய நிலை மாறிவிட்டது. இதற்கு அரியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லிவிட்டு தப்பித்துவிட முடியாது. பொதுமக்களாகிய ஒவ்வொருவருக்கும் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறோம்.
உள்ளாட்சித்தேர்தல்
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே ஊராட்சி பதவிகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தடை எதுவும் இல்லாமல் நடந்துவிடுமா என தெரியவில்லை.
இவ்வளவு நாட்கள் தள்ளிபோனதே ஜனநாயக விரோதம்
உள்ளாட்சிதான் இந்தியாவின் அடிப்படை அங்கம். மக்களோடு நெருக்கமாக பணியாற்றுகிறவர்கள் உள்ளாட்சித்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் தான். அப்படி இருக்கும் போது அந்த அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்தாமல் தள்ளிபோட்டுக்கொண்டே போடுவது என்பது மிகப்பெரிய ஜனநாயகவிரோதம் தான். இப்போதும் இதில் குளறுபடிகள் இருப்பது என்பது தேர்தல் ஆணையம் எவ்வளவு பொறுப்பற்ற தன்மையோடு உள்ளாட்சித்தேர்தலை அணுகுகிறது என்பதனை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
ஓட்டுக்கு லஞ்சம் எவ்வளவு வரும் என எதிர்பார்க்கும் மக்கள்
நாம் உள்ளாட்சித்தேர்தலை எதற்காக எதிர்பார்க்கிறோம் என்றால், இந்தியாவின் மிக முக்கிய அமைப்பான உள்ளாட்சியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக. ஆனால் பொதுமக்களில் பலர் எதற்காக உள்ளாட்சித்தேர்தலை எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? ஓட்டுக்கு லஞ்சம் கிடைக்கும் என்பதற்க்காக. எல்லாரும் வாங்குகிறார்கள் தானே என சொல்லிவிட்டு ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதை நியாயமாக மாற்ற முயன்று கொண்டு இருக்கிறோம். பிறர் சாக்கடைக்குள் நின்றால் நீங்களும் சாக்கடைக்குள் நிற்பீர்களா? ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது என்பது சாக்கடையை விடவும் அசுத்தமானது. ஆனால் நாம் அதற்குள் சங்கடமே இல்லாமல் நிற்கிறோமே, இதற்கு வெட்கப்பட வேண்டாமா?
இதுதான் இந்த நாட்டிற்கு நாம் செய்கின்ற பிரதி உபகாரமா? நம்மைபோன்றவர்களையும் மதித்து வயது வந்தவுடன் வாக்களிக்கும் உரிமையை கொடுத்தவர்களை முட்டாள் ஆக்க நாம் முயல்கிறோமே இது சரியா? ஏழைகளுக்கும் படிக்காதவர்களுக்கும் ஓட்டு இல்லையென்றால் குறைந்தபட்சம் நம்மை மனிதனாகக் கூட நினைத்திருக்க மாட்டார்களே இந்த அதிகார வர்க்கத்தினர், அப்படிப்பட்ட உரிமையை உங்களுக்கு கொடுத்த ஒட்டு அதிகாரத்திற்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை இவ்வளவு தானா? ஏன் இந்த கேள்விகள் நம் மனதில் எழுவதே இல்லை.
ஓட்டை விற்பதற்கு வெட்கப்படுங்கள்
சம்பாரித்த காசைத்தானே தருகிறார்கள், இனி எப்படியும் சம்பாரிக்கத்தானே போகிறார்கள் என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு நீங்கள் செய்வதை நியாப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
குறைந்தபட்சம் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது தவறு என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள். அதற்காக வெட்கப்படுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!