மீராபாய் சானுவின் வெற்றிக்கதை உங்களுக்காக
மீராபாய் சானு, ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெள்ளி பதக்கம் வென்றதற்காக இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறார். ஆனால் இதே மீராபாய் சானு கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் ஒருமுறை கூட பளு தூக்காததன் காரணமாக ‘வேஸ்ட்’ என விமர்சிக்கப்பட்டவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மீராபாய் சானுவின் வெற்றிக்கதை உங்களுக்காக……
மணிப்பூரின் தலைநகர் இம்பால் நகரிலிருந்து 45 கி.மீ தெற்கே உள்ள நோங்போக் கச்சிங் தான் மீராபாய் சானுவின் சொந்த ஊர். மீராபாய் சானுவின் பெற்றோருக்கு 6 பிள்ளைகள், அதிலே இவர் தான் கடைக்குட்டி. இவர் பிறந்த ஊர் கிராமப்புற பகுதி என்பதனால் அங்கே விறகுக்கு சிறுவர்கள் செல்லும் வழக்கம் உண்டு. அப்போது தனது மூத்த சகோதரர் தூக்கி வரும் விறகுகளைக்காட்டிலும் அதிக விறகுகளை மீராபாய் சானு தூக்கி வருவாராம். அப்போது தான் தனது மகளுக்கு எடையை தூங்குவதில் உள்ள திறனை அவரது அம்மா உணர்ந்துள்ளார்.
மீராபாய் க்கு ஆர்ச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் தங்கள் பகுதியை சேர்ந்த குஞ்சராணி தேவி என்ற பளுதூக்கும் வீராங்கனை பற்றி படித்தபிறகு பளு தூக்குதலில் விருப்பம்கொண்டார் .விருப்பத்தை அம்மாவிடம் சொல்ல அம்மாவும் ஒப்புக்கொண்டார். மீராபாய் பளுதூக்கும் பயிற்சியை பெறத்துவங்கினார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றபிறகு இவர் மீதான கவனம் அதிகரித்தது.
தொடர்ந்து ஏறுமுகமாகவே சென்றுகொண்டிருந்த மீராபாய்க்கு ரியோ ஒலிம்பிக் பெரிய பின்னடைவாக இருந்தது. பயிற்சி களத்தில் 85கிலோ எடையை எளிதாக தூக்கிய மீராபாயினால் ரியோ ஒலிம்பிக்கில் கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளின்போதும் ஒருமுறை கூட எடையை தூக்க முடியவில்லை. இதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் மீராபாய். இனியொரு முறை அவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கொடுக்கப்படவே மாட்டாது என எண்ணினார்கள். ரியோ ஒலிம்பிக்கில் பளுவை தூக்க முடியாததற்கு காரணம், அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் என்பதை கண்டறிந்தார் மீராபாய்.
இந்த நிகழ்விற்கு பிறகு அதிபயங்கர மன உளைச்சலுக்கு ஆளானார் மீராபாய். ஆனாலும் அவர் மீண்டு வந்தார். ஒருபக்கம், மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க, இன்னொரு புறம் தன்னுடைய உடல் தகுதிகளையும் மேம்படுத்திக்கொண்டே வந்தார். இதன் விளைவாக, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு பளு தூக்குதலில் இந்தியாவின் சார்பில் தங்கப்பதக்கம் வென்றது அப்போதுதான்.
அதன் பிறகு சில தோல்விகள் பின்னடைவுகள் வெற்றிகள் என எதனை சந்தித்தாலும் அதனால் பாதிப்பு ஏற்படாதவாறு தன்னை தயார் படுத்திக்கொண்டே வந்தார் மீராபாய்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 87 கிலோவை எந்தவித கஷ்டமும் இல்லாமல் தூக்கி தனது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார் மீராபாய் சானு. ரியோ ஒலிம்பிக்கில் ஒருமுறை கூட பளுவை தூக்க முடியாததால் பலர் இவரை பார்த்து சிரித்தார்கள், இவரை வேஸ்ட் என விமர்சித்தார்கள். ஆனால், அடுத்த ஐந்தே ஆண்டுகளில் தான் யார் என உலகுக்கே நிரூபித்துள்ளார் மீராபாய் சானு. உண்மையான வெற்றி.
வாழ்த்துக்கள் மீராபாய் சானு!
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!