Site icon பாமரன் கருத்து

மெசியாவின் காயங்கள் : ஜெ. பிரான்சிஸ் கிருபா

J.Francis-Kiruba kAVITHAIKAL-min

மெசியாவின் காயங்கள் – வனம்

மனதுக்குள் படிந்து பரந்துறங்கும்
நிலமலையின் நிழல் தொடர்ச்சி
புரண்டு படுக்கும் நேரம்
சிகர அந்நியத்தின் உச்சியிலிருந்தாய்.
அங்குமிருந்தது ஒரு வனம்.

கூடையோடும் கூந்தலோடும்
சிறகாடி புன்னகை தேடும்
பெண்ணொருத்தி
பள்ளத்தாக்கின் ஆழத்தில்.
அங்குமிருந்தது ஒரு வனம்.

நடுக்காட்டின் பெரும் சிரிப்பில்
நடுங்கி உதிர்ந்தபோது
இருவேறு கால் தடங்கள்
இருவேறு காம்புகளில்

கைத் தடயங்களுக்கான பிரார்த்தனையோடு
அங்குமிருந்தது ஒரு வனம்.

மெசியாவின் காயங்கள் – முடிவு

சரியாமல் நிற்கும் மரம்
உயரம் குறைவுதான்
அதைத் தவிர
குறைவுகள் மிகக் குறைவு.
திரட்சியான கிளைகள் கல் நிறத்தில்.
பட்டைபோல் தடித்த இலைகள்.
வெள்ளை வெள்ளையாக
உறுதியான மலர்கள்
உயிரின் இறுதி வாசம்.

மெசியாவின் காயங்கள் – விளம்பரம்

யாரொருத்தியும் வாய்க்காமல்
சுய முடிவெடுத்து
செத்தும் தொலையாமல்
நம்பிக்கையோடு இன்னும்
பெண் தேடிக்கொண்டுதான்
இருக்கிறது அது என்பதே
இத்தரப்பிலிருந்து
எல்லோருக்குமான தலைப்புச் செய்தி.
இதே நாளில்
பிரிந்து போனதற்காக
நாளிதழில்
குடும்பத்தோடு வருந்துபவர்கள்
தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்
இளம் பெண்களின் புகைப்படங்களை.

மெசியாவின் காயங்கள் – தேடல்

கண்ணாடிச் சிறகுகள்
தாழ்ந்திருக்கும் நிலையில்
நெருங்கினால் பிடிபட்டுவிடும்
புட்டான் சூத்திரங்களோடு
வனம் இறங்கி நடந்தேன்.

கைநீட்டிக் கைநீட்டி
ஏமாற
காலத்தின் மனமாய்
நழுவிக்கொண்டே போயிற்று
உன் கனவு

திருவிழாக் கூட்டத்தில்
தெரிந்தவர் முகம் தேடி
மேலும் மேலும் தொலையும்
குழந்தையானேன்

இறுதியாகக் கைநீட்டி
ஏமாந்தவன் இப்புறத்தில்

பிடிக்குத் தப்பியுன்
யோனி வழியே
வெளியேறிய வண்ணத்துப் பூச்சி
அப்புறத்தில்.

மெசியாவின் காயங்கள் – மௌனம்

கனக்கும் வாழ்வை
சுமக்கும் பக்குவமற்றவனை
முற்றுகையிடும் மௌனமே
விலகிப் போ.
கூச்சலிடவில்லையெனினும்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாக நீ
கொன்று கொண்டிருக்கிறாய்
ஏழு ஏழு சென்டிமீட்டராய்
எவரெஸ்ட் சிகரம்
எங்கு நகர்ந்து போனால் எனக்கென்ன
நான் எழுந்து நடக்க வேண்டும்
அங்கொரு பிட்சு நூறு வருடங்களாக
கண் விழித்திருந்தால் நான் என்ன செய்யட்டும்
நான் கொஞ்ச நேரமேனும் உறங்கி எழ வேண்டும்.
கரையில் படகுகள் அடகில் இருப்பதாய்
குமுறும் கற்பனை என்னுடையதல்ல.
கடவுளுக்கு ஆள் தேடும்
கனவுகளுக்கு அஞ்சி
புயலாடிய ஏழுகடல் நடனங்கள்
கண்டு பிதுங்கிய விழிகள்
கைகளுக்கு எட்டாத தூரத்தில்.
எண்ணிக் கொண்டுதானிருக்கிறேன்
திருட்டுபோய் நான் மீளாத
ஏழாவது அதிகாலை இது.

மெசியாவின் காயங்கள் – சுவடு

பசுமை படர்ந்து விரிந்த
உன் சிந்தை வெளியில்
மந்தையெனக் கலைந்து முன்சென்ற
கனவுகளை மேய்த்தபடி தொலைந்து போனாய்
புதிர்கள் புதர்களாய் அடர்ந்தவுடன்
மூடிவைத்த சுவடுகளை
ஒவ்வொன்றாய் புதையலெனக் கண்டெடுத்து
பின்தொடர்ந்து வந்து சேர்ந்தேன்
இம்மரத்தடியில்.
என்னை நோக்கி சத்தமின்றித் திறக்கின்றன
பசியின் கதவுகள்.
நீ செரிக்கப்பட்டிருக்கலாமோ
என ஐயம் கொள்கிறேன்
மிகத் தாமதமாய்.
சுள்ளிகளைப் பிரித்தெடுக்க அறியாத பறவைகள்
பழையகூடுகளை அப்படியே விட்டு
வெகுதூரம் சென்றிருக்கின்றன
காற்றிலாடும் மரக்கிளை
கைகளை வீசி ஊமை மொழியில்
உணர்த்துகிறது புதுப் புது ரகசியங்களை
உச்சிக் கிளையின் நுனிக்காம்பில்
இலைமறை காயாக
விளைந்துகொண்டிருக்கிறது
தேவதை எனப்பட்டவளின்
ஒளித்து வைக்கப்பட்ட
ஒற்றை முலை.

மெசியாவின் காயங்கள் – கனவுகள்

அழகான கனவு அபூர்வமாய் சித்திக்கிறது
ஆயிரத்தில் ஒருவருக்கு.

சர்ப்பத்தின் நாவாக அச்சத்தைத் துருத்தி
நெளிந்து நீள்கின்றன கெட்ட கனவுகள்.

கலையும் தறுவாயில்தான்
கண்டு கொள்கிறேன் நல்ல கனவுகளை.

இரவுக்கு வெளியே
கனவுக்குக் காவலிருக்கும்
தேவதைகளும் உறங்குகிறார்கள்

அவர்கள் கனவுகள்
நாம் நுழைய முடியாத
நீர்க் குமிழியாகப் பூட்டியிருக்கின்றன.

வெளியிலிருந்து பார்த்தாலும்
தெளிவாய்த் தெரிகிறது கபடமற்ற கனவுகள்.

திரும்பத் திரும்ப வரும் கனவுகளில்
திருத்தங்களே இருப்பதில்லை.

இறுதிக் காட்சியாக விரிந்து
கண்ணைக் கொத்தும் இரக்கமற்ற கனவுகளில்
செத்துச் செத்து அலுத்துப்போனது

இறப்பதுபோல் எல்லோரும் காண்கிறார்கள்
ஏறக்குறைய இரண்டு கனவுகளேனும்.

பிறப்பதுபோல் வந்திருக்குமா
யாருக்கேனும் ஒன்று.

மெசியாவின் காயங்கள் – சித்திரம்

பாத்திரம் கூட அற்ற
பிச்சைக்காரனாய்
சூரியனை எழுப்பும்
குளிர்காலங்களில்
பனித்துளிகளை
நிதானமாகத் தானமிடும்
ஒற்றை விரலே
யாரின் கையுள் நீயிருக்கிறாய்?
தூரிகையின்றி நீ வரைந்த
மகத்தான ஓவியத்தில்
நானிருக்கக்கூடுமா
வண்ணமாகவேனும்.
எழுதுகோலின்றி எழுதிச் செல்லும்
இம் மகாகாவியத்தில்
நான் பெறுவேனா
துளி பாத்திரமேனும்

மெசியாவின் காயங்கள் – தாவரங்கள்

கண்ணாடித் தாவரத்தின்
விரித்த கைகளாக
ஒழுங்கற்று விரியும்
ஒவ்வொரு இலையிலும்
வேர்களின் பயண முகங்கள்
நரம்புகளாக,
விட்டு விலகிப்
போகத் தெரியாதவனிடம்
நரம்புகள் நடிக்கின்றன
வேர்களாக
வேர்கள் மற்றொன்றாக.

மெசியாவின் காயங்கள் – சிற்பி

என் களைத்த பெருமூச்சு
மலைராணியின்
சிரசிலடித்து எதிரொலித்தது

உச்சி நீவிய மேகங்கள்
என் வித்தையில் கண் பதித்து
மெச்சிக் கொண்டலைந்தன

உளியும் சுத்தியும் ஏந்திய மந்தியாக
தாவித் திரிந்தேன் நெட்டுயர்ந்த
கல்விருட்சத்தின் திரேகமேங்கும்

கல் நரம்புகளை இழுத்து முறுக்கினேன்
மத்தளங்களைச் செதுக்கினேன்
புல்லாங்குழலில் கண்கள் திறந்தேன்
சிற்ப சங்கீத சிருஷ்டி நிறைவுற்றது

அருவிக்காலமோ
நூறு பிறைகளுக்கப்பால்
நொண்டி நொண்டி வந்துகொண்டிருந்தது

பொறுமையின்றி
கற்பனை நதியைக் கொட்டிக் கவிழ்த்தேன்
பருவத்தின் வாசலில்
வெள்ளமும் நுரையுமாய்
சுழித்து ஓடி வர
குறுகின இசைக்கண்ணிகள்

பீறிட்டெழுந்தது
தாகத்தின் நித்திய சங்கீதம்
பிடிபட்டது ஒலியின் சிற்பம்
உளியின் துல்லியத்தில்

அதற்கென்றே மிச்சம் வைத்திருந்த
ஒரேயொரு சிறுபாறையில்
வடிக்கத் தொடங்கினேன்
கர்வம் படர்ந்த என் முகத்தை
உளியின் முதற்தீண்டலில்
மௌனம் கலைந்து
நடக்கத் துவங்கிற்று பாறை

மெசியாவின் காயங்கள் – வானவில்

நடக்கும் கல்யாணத்தை
நம்பத் தயாராய் இல்லைதான்
ஆயினும்
வாழ்த்து மடல் எழுதி
தோற்றுக்கொண்டேயிருக்கிறேன்
வந்தின்னும் வரிகளுக்குள்
வாய்ப்பதாயில்லை
மழையில் நனையும் வெயில்

மெசியாவின் காயங்கள் – வெற்றி

வெட்டு குத்துக்களுடன்
கட்டங்கள் தாண்டி
ரத்தம் சொட்ட
பழுக்க விதிக்கப்பட்டிருக்கிறோம்
தாயத்தில் எல்லோரும்

காய்களாக்கப்பட்ட பின்னும்
உடைந்த வளையலின்
ஒவ்வொரு துண்டிலும்
வளைந்து கிடக்கிறது
வானவில் நினைப்பு

வினாடி முத்துக்களை
கண்டுபிடித்தவன் முகத்திலேயே
விட்டெறிந்து விளையாடுகிறது
காலம்

விழு என்றால்
விழுகிறது
உடையாமல்
தாயம்

மெசியாவின் காயங்கள் – அனிச்சை

ஒளியின் விரல்களுக்கிடையே
பின்னிக் குழையும் இருளின் விரல்
விறகாக எரிகிறது

முழு ஆகாயத்தையும்
ஒருகணத்தில்
அளக்க எத்தனிக்கிறது
ஒற்றைச் சிறகு

பறக்கத் துடிக்கிறது பூச்சி
இருக்கத் துடிக்கிறது பல்லி

வெள்ளி நாவின் சுழற்சியில்
மின்னித் தெறிக்கின்றன
மீட்சியின் சொற்கள்

மெசியாவின் காயங்கள் – இரு கோடுகள்

புன் சிரிப்புமாய்
நெருங்கி வந்தவன்
அன்றைய அவன் வருகைக்கான
அத்தாட்சிக் கையொப்பம்
பெற்றுப் பிரிகிறான்

தனித் தனியே செல்லவும் தெரியாமல்
பின்னிப் பிணையவும் முடியாமல்
தொட்டும் விலகியும்
தொடர்ந்து செல்கின்றன
தபால்காரனின்
சைக்கிள் தடங்கள்.

மெசியாவின் காயங்கள் – சித்திரம்

பாத்திரம் கூட அற்ற
பிச்சைக்காரனாய்
சூரியனை எழுப்பும்
குளிர்காலங்களில்
பனித்துளிகளை
நிதானமாகத் தானமிடும்
ஒற்றை விரலே
யாரின் கையுள் நீயிருக்கிறாய்?
தூரிகையின்றி நீ வரைந்த
மகத்தான ஓவியத்தில்
நானிருக்கக்கூடுமா
வண்ணமாகவேனும்.
எழுதுகோலின்றி எழுதிச் செல்லும்
இம் மகாகாவியத்தில்
நான் பெறுவேனா
துளி பாத்திரமேனும்

மெசியாவின் காயங்கள் – மாயை

ரத்தநாளங்களில் சுத்தமாக
குருதியின் விறுவிறுப்பு குறைந்து
இமைக்கும் துடிப்போய்ந்த
இதயக்கண் வெறிப்பில்
உயிருக்கு நேர் எதிரே
நகர்த்தி வைக்கப்படுகிறது
தலைவாசல் திறந்திருக்கும்
மரணத்தின் மௌனம்

அவிழ்த்தெடுக்கப்பட்ட திசைகள்
குவிந்து கிடந்த மூலையிலிருந்து
விரியும் கம்பளச் சுருள்
முடிவடைகிறது காலடியில்

அள்ளியணைக்கும் ஆர்வம்
பேரன்பாய் பெருகுகிறது
நிழலின் சிரிப்பில்.

மெசியாவின் காயங்கள் – கவிஞன்

தோல்வியின் அறிவிப்பு
தோற்கப் போவது
இருவரில் ஒருவர் தான்
நீ பொய்யனானாலும்
உன் கவிதைகள்
பொய்யறியாதவை
ஒழுங்கான பொய்களாக
உன் வார்த்தைகள்
அமைந்திருப்பினும்
ஒழுக்கமற்ற உண்மைகள்
உன் எழுத்துக்குள்
மின்னி மின்னிச் செல்கின்றன
நம்பிக்கையின் நிறத்தை
நீ நிச்சயிக்கிறாய்
அவநம்பிக்கையின் நிறத்தை
நான்
கிளியிலிருந்து பச்சையெடுத்து
புல்லில் வந்து அமர்ந்ததும்
புல்லின் பச்சை கொத்தி
கிளியை நோக்கி பறந்ததும்
எதுவென்று தெரிந்துவிடும்

மெசியாவின் காயங்கள் – ஒளி

பழகியிருந்தன
எல்லா வீடுகளும்.

ஆணும் பெண்ணுமாக
ஏழு பிள்ளைகள்
ஒரே திண்ணையில்
இடம் விட்டு விட்டு நித்திரையில்
குறுக்கே வெளிகளற்ற ஒரு கனவோடு.

இடைவெளி குறையும் போதெல்லாம்
எழுந்து பிள்ளைகளை
சரி செய்வாள் அம்மா.

ஏழு வீட்டிலும்
விளக்குகுழியில் சிம்னி விளக்கிருந்தது
அதற்கு மேலும்
குறைக்க முடியாத
வெளிச்சத்தோடு

மெசியாவின் காயங்கள் – மகிழ்ச்சி

புகைப்படமொன்றில்
அடைமழையைப் பார்த்து
விடாது சிரித்துக்கொண்டிருந்தார்
அப்பா

மெசியாவின் காயங்கள் – சிக்னல்

எழுதிக்கொண்டு வருகிறோம்
திட்டமிட்ட விபத்துக்கள்
சாதுர்யமான விபத்துக்கள்
எதிர்பாரா விபத்துக்கள்
எழுதாமலிருக்க முடியவில்லை
வழிந்தோடிப் பரவும் ரத்தத்தில்
உறைந்து கிடக்கிறது
நீ எழுதிய சாலை விதிமுறைகள்
உன் விபத்தை பற்றி
யாரை விசாரிப்பது

மெசியாவின் காயங்கள் – முரண்பாடு

நேர்மையற்ற வீடுகள்
நிறைய நிறையக்
குறுக்குச் சுவர்களால்
கட்டப்பட்டிருக்கின்றன

ஒவ்வொரு அறைகளுக்கும்
வெவ்வேறு ரகஸியங்களை
ஒதுக்கியிருக்கிறோம்

வரவேற்பறையில் பெரும்பாலும்
மடங்கியே இருக்கின்றன
நாற்காலிகள்.

எல்லா விருந்தாளிகளுமே
தயங்குகிறார்கள்
ஊஞ்சலில் அமர.

அடுத்த வீட்டுக் கழிவறையில்
அரவமின்றி புழங்குவதிலே
பெண்களின்
மொத்த சாமர்த்தியமும் செலவழிகிறது.

பரிமாறப்படும் காபி கோப்பையிலிருந்து
எழுந்து நடனமிடும் ஆவி
விண்ணை நோக்கி நேராய்
ஒரு கோடு கிழிக்க, படும் சிரமத்தை
ருசித்ததில்லை எந்த உதடுகளும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நீ வருகிறாய்
நேர்மை பற்றி பேசவும் விவாதிக்கவும்

ஒரு ஒற்றையடிப் பாதையைக் கூட
நேராய்க் கிழிக்க வக்கற்றவன்தான்
நானும்.

மெசியாவின் காயங்கள் – சூரியன்

மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து
சுருள் சுருளாய் விரிகிறது
இருள்.

மெசியாவின் காயங்கள் – உணவு

சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்.

மெசியாவின் காயங்கள் – சிந்தனை

பணிக்கப்பட்ட சிறுமி
பந்தை
கீழே வைக்க மனமின்றி
தாடைக்கடியில்
ஆதாம் ஆப்பிளாய்
அழுத்திப் பிடித்து
அடிபம்பு கம்பியில்
எம்பி எம்பி நீரடிக்கிறாள்.
உச்சி வெயிலில்
துப்பு கொண்டு வந்த
தூரத்து ஊர் பெரியவருக்கு
உப்பு சரி பார்த்து
மோர் கரைத்துக் கொடுத்துவிட்டு
குடத்திலிருந்த குடிநீரை
தொட்டியில் கொட்டிவிட்டு
வேகமாய் தண்ணிக்கு வந்தவள்
அடிக்கொரு தரம்
நழுவியோடும் பந்தையும்
எடுத்தெடுத்து
அடக்கிக் கொள்ளும் சிறுமியையும்
அலுக்காமல் பார்த்து நிற்கிறாள்
இடுப்பில் வெற்றுக் குடத்தோடு.

மெசியாவின் காயங்கள் – இலையுதிற் காலம்

ஜெ. பிரான்சிஸ் கிருபா
சிதைந்த உடலுமாய்
நிழலில் அமர்ந்து
யாசிக்கும் கிழவனை
பணயம் வைத்து
கைச் சிட்டுகளாய்
பழுத்த இலைகளை இறக்கி
பகலைச் சூதாடிக் கழிக்கின்றன
பூவரச மரங்கள்.

மெசியாவின் காயங்கள் – விடியற் காலை

புல்லின் தளிர் விரல் நுனியில்
பனிக்காலம்.
கட்டி முடித்த கண்ணாடித் தீவுக்கு
விளக்கேற்றுகிறது ஒரு
விடிவெள்ளியின் முகம்.

மெசியாவின் காயங்கள் – நீர்துளிகள்

தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்ணெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக் கூந்தலை
கடலாகச் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி
நீருற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறீட்டடிக்கிறது ரத்தம்.

கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத்
தானமிடு.

மெசியாவின் காயங்கள் – மனசு

ஒளிரும் சமுத்திரச்சிற்பம் நீ
உன்மீது கவியும்
எண்ணங்களெல்லாம்
சுவாசக் காற்றின்
இரக்கமற்ற புறக்கணிப்பில்
பறக்கும் கானல் தோணிகள்

பளிங்குவெளி மீது
பதி வைத்துப் பாயும் விழிக்கதிரோ
பச்சை உமிழும்
பசும் புதிரின் வாசலில்
குழையும் நாய் வால்.

மெசியாவின் காயங்கள் – அவள்

குமரிகள் குளித்துக் கரையேறிய
துவளத்து ஈரம் உலராத
கிணற்றுப் படித்துறையில்
எனக்காகக் காத்திருக்கும்
மறந்து வைத்த மஞ்சள் கிழங்கு

மெசியாவின் காயங்கள் – கலை

நிமிரும்
இறந்த காலம்.
மறைக்க
மறந்துபோன
மலைக்குள்ளிருக்கும்
மனம் வார்த்த
சிற்பம்.

இருந்தும்
கணுக்கணுவாக
முறிந்த கணம்
வேதனையில்
விழுந்தும்
கல்லின் குரல்
கணத்தில் தொனிக்கும்
போதெல்லாம்
ஒரு ஜனனம்.

மெசியாவின் காயங்கள் – உருவம்

எப்படி வருவதென்று
வழி கேட்டேன் தொலைபேசியில்
இப்படி வந்தாலும் சிக்கல்
அப்படி வந்தாலும் சிக்கல்
என்றது எதிர்முனை பதில்
சுதந்திரமற்ற என் கணங்களை
ஒவ்வொன்றாய்
எண்ணிக்கொண்டு நடந்தேன்
எண்ணிக்கை முடிந்தபோது
எதிரே நின்றிருந்தது நிலைக்கண்ணாடி.

மெசியாவின் காயங்கள் – அமாவாசை

பிறை செழிக்காத இரவுகளில்
பிசைந்தூட்ட ஊட்ட
முற்றத்திலிருந்து
நிலா தின்ற பிள்ளையின்
தூரப் பார்வையில் நின்று சிரித்தது
பழகிய விழியொன்று.
தாய்போல் பார்த்திருந்தது
ஒரு நாள்
பிரிவைக் கோடு கிழித்து
நாய்போல் பாய்ந்தது.
திடுக்கிட்டுத் திரும்ப
இன்மைகள் யாவும் நிறைந்து வழிய
ஆறுதலாய் அருகே இருந்தது
அவள் முகம்.

Exit mobile version