மாபெரும் சபைதனில் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகாரம் என்பது சாமானியர்களுக்கு நல்லது செய்வதற்காகவே வழங்கப்படுகிறது என்பது வலியுறுத்தும் புத்தகம் இது. போற்றத்தக்க ஐஏஎஸ் அதிகாரியான உதயச்சந்திரன் அவர்கள் எழுதியிருக்கும் இப்புத்தகம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
ஆசிரியர் : உதயச்சந்திரன்
பிரிவு : தன்நம்பிக்கை
பதிப்பு : 1
வருடம் : 2021
வெளியீட்டாளர் : விகடன்
எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணியாகும் என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் பணி அனுபவங்களில் இருந்து அறிய முடிகிறது. தான் ஆட்சியராகப் பணிபுரிந்த மாவட்டங்களில் ஆற்றிய பணிகள் குறித்தும், தான் பொறுப்பேற்ற துறைகளில் எடுத்த முன்னெடுப்புப் பணிகள் பற்றியும் அதன்மூலமாக தனக்கேற்பட்ட அனுபவப் பாடங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
சிறந்த ஆளுமையாக அறியப்பட்ட உதயச்சந்திரனை சிறந்த எழுத்தாளராகவும் அறியச் செய்யும் இந்த 40 கட்டுரைகள் வெறும் அனுபவத்தை மட்டும் சொல்பவை அல்ல. கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு, அறிவியல் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் கட்டுரைகளாகும். ஏழை எளிய விவசாயிகளை வரிச் சுமையிலிருந்து மீட்ட தாமஸ் மன்ரோவின் கருணை, மதுரை மாநகரை மாற்றியமைத்த கலெக்டர் பிளாக்பர்ன், மகாத்மா காந்தியின் தமிழ் மொழிப்பற்று… என பல வரலாற்று நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளோடு முடிச்சுப்போட்டு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அரசு ஊழியர்களைப் பற்றி பொதுமக்களிடம் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் எப்படி கடமையுணர்வோடு நேர்மையாகப் பணியாற்றுகிறார்கள், அவர்களின் அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை இந்த நூல்வழி அறிய முடிகிறது. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுகிறவர்களுக்கு உந்து சக்தியாகவும், ஐ.ஏ.எஸ் பணியில் புதிதாக ஈடுபட்டிருப்போருக்கு வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்கும் என்பதில் வியப்பில்லை. மாபெரும் பதவிதனில் அமர்வது மக்களுக்காகவே என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் ஒரு மேடையில் தனது நூல் எழுதும் அனுபவம் குறித்து உதயச்சந்திரன் இவ்வாறு பேசினார் “வெ.இறையன்புவிடம் கவிதை ஒன்றை எழுதி காட்டினேன். அப்போது, அவர் என்னை நிறைய எழுத அறிவுறுத்தினார். இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நூலை எழுத வாய்ப்பு கிடைத்தது. மாபெரும் சபைதனில் எனும் தலைப்பு மக்களால் தேர்வு செய்யப்பட்டதே. மக்கள் சொல்வதை செவி கொடுத்து கேட்பவனே தலை வனாக இருக்க முடியும். மேலும் மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மையை காப்பாற்றி, அவர்களுக்கானவற்றை செய்து முடிப்பவராக தலைவன் இருக்க வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் கம்பீரமாக திறம்பட தனது பணியை செய்தவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் என்றால் மிகையாகாது. இது போன்று, எளிய மனிதர்களாக கம்பீரமாக நடைபோடும் மனிதர்கள் குறித்தே மாபெரும் சபைதனில் நூல் எடுத்துரைக்கிறது என்றார்.
இந்த புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து இருந்தால் அதன் அனுபவம் குறித்து கமெண்டில் பதிவிடுங்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்