அதிகாரம் குவிந்து கிடக்கும் போது ஜனநாயகம் சவாலுக்கு உள்ளாகும். இது இயற்கை தான் போல. ஆனால் இறுதியில் ஜனநாயகம் தான் வெல்லும். அதனை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் நிச்சயமாக பாடம் கற்றே தீருவார்கள். அது எமர்ஜென்சியாக இருக்கலாம், மகாராஷ்டிரா அரசியல் களமாக இருக்கலாம்.
நடந்தது சுருக்கமாக
தேர்தலுக்கு முன்னர் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அந்தத்தேர்தலில் பாஜக 105 இடத்திலும் சிவசேனா 56 இடத்திலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வென்றது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சிவசேனா சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் எனவும் இது தேர்தலுக்கு முன்னரே பேசப்பட்ட விசயம் தான் எனவும் கூறியது. ஆனால் இதற்கு பாஜக உடன்படவில்லை. இதனால் கோபமடைந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மறுபக்கம் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த கட்சிகள் இணைந்துதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சனிக்கிழமை காலை பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இதனால் மிகப்பெரிய குழப்பம் அங்கே ஏற்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், அஜித் பவார் பாஜகவுடன் சென்றது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் எனவும் தெளிவுபடுத்தினார். இதைத்தொடர்ந்து மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த நீதிமன்றம் புதன்கிழமை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், அதனைத்தொடர்ந்து பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக உத்தவ் தாக்ரே முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது.
பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர், ஆளுநர் தடுத்திருக்க வேண்டும்
ஏற்கனவே கர்நாடகாவில் இதே போன்றதொரு சூழலில் தான் எடியூரப்பா ராஜினாமா செய்தார். இப்போது மீண்டும் அதே நிகழ்வு மகாராஷ்டிராவிலும் அரங்கேறி இருப்பது பாஜகவிற்கு பின்னடைவே. இதனை மறுக்க முடியாது. குறிப்பாக, இரவோடு இரவாக குடியரசுத்தலைவர் ஆட்சி விளக்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் அதிகாலை முதல்வராக பதவியேற்பு நிகழ்வினை ஏன் நடத்திட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தேசியவாத காங்கிரஸில் இருந்து கணிசமான உறுப்பினர்களை அஜித் பவார் பிரித்துக்கொண்டு வந்திருந்தால் கூட பரவாயில்லை, எதுவும் இல்லாமலே இவ்வளவு பெரிய விசயத்தை அரங்கேற்றி இருப்பது அதனை தடுக்காமல் அரசியல் சாசன பதவி வகிக்கின்ற பிரதமர், குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர் இவர்கள் இருந்தது தான் வேதனைக்கு உரியது.
பெரும்பான்மை இல்லாத ஒருவரை முதல்வராக பதவியேற்க அனுமதிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இனியாவது கட்சிகளை கடந்து பிரதமரும் தங்களுக்கே உரிய பொறுப்புணர்வோடு குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரும் செயல்பட்டால் இதுபோன்றதொரு பிரச்சனை ஏற்படாது.
பிற்போக்குத்தனமான அரசியல்
தேர்தலுக்கு முன்பு பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எதிர்ப்புறம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இருந்தன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் பெரிதும் கொள்கை முரண்பாடு இருக்காது. ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதில் நிச்சயமாக கொள்கை முரண்பாடு இருக்கவே செய்யும். பாஜக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி அமைத்தது தவறு என்றால் இனி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்போகிறவர்களும் செய்திருப்பது தவறு தான். பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இப்படி அதிகாரத்திற்க்காக அங்கும் இங்கும் கூட்டணி அமைக்கும் கலாச்சாரம் இந்தியா முழுமைக்கும் இருக்கிறது, இது வரவேற்கப்பட கூடியது அல்ல.
அதேபோல அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவர்மீதான 9 ஊழல் வழக்குகள் விலக்கிக்கொள்ள பட்டன. ஊழலுக்கு எதிரானவர்கள் என பாஜக சொல்லித்தான் ஆட்சிக்கே வந்தது. அவர்கள் சொன்னதைப்போலவே இதுவரைக்கும் உயர்மட்ட அளவில் ஊழல் எட்டிப்பார்க்கவில்லை [பெருவாரியாக ஊழல் குற்றசாட்டு மேலும்பவில்லை] , அதற்காக பாராட்டுகிறோம். ஆனால் அரசியலுக்காக இன்னொருவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்வது சரியாகுமா?
ராஜ தந்திரத்தை விட நேர்மையே அவசியம்
இதுபோன்ற செயல்பாடுகளை பொதுவாக அரசியல் ராஜ தந்திரம் என்பார்கள். அப்போதைக்கு வேண்டுமானால் அது நன்மை அளிக்குமே தவிர எதிர்கால சந்ததிக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை கற்றுக்கொடுத்துவிட்டு போகிறோம் என்பதே மறைக்க முடியாத உண்மை. இப்போது கூட சொன்னார்களே, அன்று சரத் பவார் செய்ததை இன்று அஜித் பவார் செய்திருக்கிறார் என்று. இப்படித்தான் இது நீண்டுகொண்டே போகும்.
பெரும்பான்மையான இடத்தை பிடித்திருந்தாலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே என்கிற கவலை பாஜகவிற்கு தேவையில்லை, நல்ல எதிர்க்கட்சி கூட ஜனநாயத்திற்கு தேவை தான்.
ஆட்சிக்காக கொள்கையை இழக்காத ,மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிவோடு இருக்கும் அரசியல் கட்சிகளை தான் மக்கள் நம்புவார்கள், விரும்புவார்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!