மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் இருந்து செல்வதற்கு சரியான வழியே இல்லாத சந்தர் என்ற இடத்திற்கு அருகேயுள்ள கிராமத்திற்கு ஒரு மாணவருக்கு பாடம் நடத்திட ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து பாடம் நடத்துகின்றார் ரஜினிகாந்த் மென்தே எனும் ஆசிரியர் . அவரது சிறப்பான செயலால் அந்த கிராமமே இன்று ஒளிர்கின்றது . என்ன நடந்தது?
பழைய நிகழ்வுதான் என்றபோதிலும் கூட இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்தக்கட்டுரையை எழுதுகின்றேன் .
மகாராஷ்டிராவின் புனே நகரத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் ஜந்தர் என்ற இடத்திற்கு அருகே செல்வதற்கு சரியான சாலைவசதியோ மின்சார வசதியோ இல்லாத கிராமம் இருக்கின்றது . அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார் ரஜினிகாந்த் மேண்டே . 2010 இல் இவர் பணிக்கு சேரும் நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து 12 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர் .
சில ஆண்டுகளில் மாணவர் எண்ணிகையில் பெரும் வீழ்ச்சி உண்டானது. மேற்படிப்பிற்காக சில மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றார்கள் , வேலைக்கு அனுப்புவதற்காக சில மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டனர் . இதனால் மாணவர்கள் எண்ணிக்கை 1 என்ற நிலைக்கு வந்தது .
யுவராஜ் சங்களே என்ற அந்தவொரு மாணவருக்கு பாடம் நடத்திட தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து வருகின்றார் . அதிலும் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தை கடப்பது மிகவும் சவாலான காரியமும் கூட . பயணிக்க முடியாத குண்டும் குழியுமான சாலைகளில் பயணம் செய்து பாடம் நடத்தி வருகின்றார் ரஜினிகாந்த் . இவரது செயலால் சிறந்ததொரு மாற்றத்தை அந்த கிராமமும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் அனுபவித்து வருகின்றன .
இந்த ஆசிரியரின் சிறப்பான செயல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரவின . இந்த செய்தி ஐஏஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்ஆப் குரூப்பிலும் பகிரப்பட்டது . அந்த செய்தியை மகாராஷ்டிரா மின்பகிர்மான நிறுவனத்தின் சேர்மன் சஞ்சீவ் என்ற அதிகாரியின் பார்வையிலும் பட்டது . ஒரு ஆசிரியரின் அர்பணிப்பு உணர்வைக்கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்த சஞ்சீவ் அந்த கிராமத்திற்கு மின்சாரம் கொடுக்க எண்ணினார் .
மின்பகிர்மான அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஆசிரியர் ரஜினிகாந்த் அவர்களை தொடர்புகொண்டு விபரம் கேட்க அவரும் அனைத்து விவரங்களையும் சொல்ல அடுத்த 7 நாட்களில் மின்கம்பங்கள் நடப்பட்டன , 70 வீடுகளுக்கு மின்சாரமும் வழங்கப்பட்டது. மிகவும் சவாலான பாதைகளைக்கொண்ட அந்த ஊருக்கு மின்சார வசதியெல்லாம் கிடைப்பது எளிதான காரியமில்லை . ஆனால் ஒரு ஆசிரியரின் பல ஆண்டுகள் அதனை சாத்தியமாக்கியது . ஒரு ஆசிரியரின் அர்பணிப்பு உணர்வுக்கு அங்கீகாரம் கொடுத்த சஞ்சீவ் என்ற ஐஏஎஸ் அதிகாரியும் பாராட்டுக்கு உரியவர் .
நல்ல ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை இங்கே இருந்துகொண்டே இருக்கின்றது . நல்ல ஆசிரியர் கிடைக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் . இதுபோன்ற பதிவுகள் அதற்கொரு தூண்டுகோலாக அமையும் என நம்புகின்றேன் .
பாமரன் கருத்து