இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் உயிர் பிரிவது வரை வாழ்ந்துகொண்டு இருப்பதாகவே கருதி வந்தேன் . அந்த எண்ணத்தில் நானும் வாழ்ந்துவரு வதாகவே கருதினேன் .
அண்மையில் நண்பர் ஒருவரின் வாயிலாக ஒரு வீடியோ ஒன்றினை பார்க்க நேர்ந்தது . அதனை பார்த்து முடித்தவுடன் நாம் தற்போது வாழ்ந்துவருவது வாழ்க்கையல்ல , வெறும் நாட்களை நகர்த்தும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றோம் என்பது புரிந்தது .
அந்த வீடியோ ஒரு கணக்கினை அடிப்படையாக கொண்டு விளக்கப்பட்டது . ஒரு மனிதனின் சராசரி வாழ்நாள் 80 ஆண்டுகள் என வைத்துக்கொண்டால் முதல் 20 முதல் 25 வயதுவரை கடினமாக படித்து நல்ல வேலைக்கு செல்வதற்காக செலவிடுகிறோம் .
பிறகு திருமணம் , குழந்தைகள் , குடும்பத்தை காப்பாற்றிட என 60 வயதையும் தாண்டி உழைத்து உழைத்து வெறும் உடம்பாக மட்டும் ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறோம் . 60 முதல் 80 வயதுவரை நோய்களின் இருப்பிடமாக மாறிய உடலினை சுமந்து சொல்லும் வாகனமாக மாறி வாழ்க்கையை கழித்து மறைந்து போகின்றோம் .
சிலர் இந்த முறையில் இருந்து மாறுபட்ட வாழ்க்கையை பெற்றிருந்தாலும் பெரும்பாலானவர்கள் நான் மேலே குறிப்பிட்ட இந்த முறையில்தான் வாழ்ந்து வருகின்றோம் . இதில் வருத்தம் என்னவென்றால் நம்மில் பலரும் இதுதான் சிறந்த வாழ்க்கை என நம்பிக்கொண்டு இருக்கின்றோம் . அதனையே நம் பிள்ளைகளுக்கும் கற்பித்து கொண்டும் வருகின்றோம் .
இப்போது கூறுங்கள் நாம் வாழுவது வாழ்க்கையா ?
சரி நாம் இப்போது வாழ்ந்துவருவது சரியான வாழ்க்கை இல்லையெனில் எது வாழ்க்கை ?
தற்போது அனைத்துமே பணத்தை மையமாக கொண்டு இயங்க ஆரம்பித்துவிட்டமையால் நம்மாலும் முற்றிலுமாக அதனை தவிர்த்துவிட்டு வாழ முடியாது . ஆனால் பணத்திற்காக
ஒருபக்கம் உழைத்தாலும், பிறந்ததே இன்பத்தோடு வாழுவதற்காகத்தான் என்பதனை உணர்ந்து வாழ்ந்தோமேயானால் நிச்சயமாக வாழ்க்கையை வாழ்ந்திட முடியும் .
வாழுவதே பணம் சம்பாதிக்கவும் அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்க்கவுமே என எண்ணிடாமல் ஒவ்வொருவரும் பிறந்ததே சந்தோசமாக வாழ்ந்திடத்தான் என எண்ணுதல் வேண்டும் . அதற்காக சிலவற்றை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
திருமணம் ஆகி சந்தோசமாக மனைவி மக்களுடன் குடும்பத்தோடு வாழ்ந்திட வேண்டிய வயதில் வெளிநாட்டில் சம்பாதிப்பதிலேயே முழு இளமையையும் இழந்துவிட்டு வயதாகி வருகின்ற பலரை கண்டிருக்கின்றேன் . திரும்பி வரும்போது வீடு இருக்கும் , வாகனம் இருக்கும் , பணம் இருக்கும் ஆனால் வயது இருக்காது .
அதற்காக பிறந்தது முதலே சந்தோசமாக இருந்தே பொழுதை கழிக்கலாம் , எதற்கு படிக்க வேண்டும் , எதற்கு உழைக்க வேண்டும் என முடிவெடுத்துவிடாதீர்கள் . உலகமே ஓர் திசையில் சென்றுகொண்டிருக்கும்போது நாம் மட்டும் எதிர்திசையில் சென்றால் கஷ்டமே வாழ்க்கையாகிவிடும் .
இப்போது இருப்பதைப்போன்றே வாழுங்கள் , ஆனால் ஒவ்வொரு நாளும் திரும்ப கிடைக்காது என்பதை உணர்ந்து ஒவ்வொரு தருணத்திலும் பெற வேண்டிய சந்தோசத்தை பெறாமல் இருந்துவிடாதீர்கள் .
இளமையில் விளையாட்டு , சுற்றுலா
மனைவியுடன் இன்பமாக வாழுதல்
குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொருநாளும் கண்டு ரசித்தல்
பெற்றோருடன் கடைசி காலத்தில் உடன் இருத்தல்
மனைவியுடன் இன்பமாக வாழுதல்
குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொருநாளும் கண்டு ரசித்தல்
பெற்றோருடன் கடைசி காலத்தில் உடன் இருத்தல்
ஊர் திருவிழா , நண்பர்களின் திருமணம் என ஏகப்பட்ட சந்தோசங்கள் நாம் அனுபவிக்க காத்திருக்கின்றன . அதனை அனுபவிப்பது நமது கைகளில் தான் இருக்கின்றது .
வாழ்க்கை இன்பமயமாக வாழுவதற்காகத்தான் என்பதனை உணர்ந்திடுங்கள் , வாழ்ந்திடுங்கள்
பாமரன் கருத்து