Site icon பாமரன் கருத்து

லட்சத்தீவு மக்களின் மீது அடக்குமுறையா? என்ன நடக்கிறது அங்கே?

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா நோய் தொற்று காரணமாக நிம்மதி இழந்து நிற்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமும் நிம்மதியான சுற்றுலாத்தளமுமான லட்சத்தீவு வேறு ஒரு காரணத்திற்காக நிம்மதி இழந்து நிற்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா நோய் தொற்று காரணமாக நிம்மதி இழந்து நிற்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமும் நிம்மதியான சுற்றுலாத்தளமுமான லட்சத்தீவு வேறு ஒரு காரணத்திற்காக நிம்மதி இழந்து நிற்கிறது.

அரபிக்கடலில் கேரளாவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் தான் 36 சிறிய சிறிய தீவுகளாக இருக்கிறது லட்சத்தீவு. இதில் ஒரு தீவான பாராலி கடல் அரிப்பின் காரணமாக கடலுக்குள் மூழ்கிவிட்டபிறகு எஞ்சியிருக்கும் 35 தீவுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கே வாழ்கிறவர்களில் 98% முஸ்லீம் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய குற்றங்களே இல்லாத ஒரு பிரதேசமாக வந்திருக்கிறது லட்சத்தீவு. இதற்கு மிக முக்கியக்காரணம், அங்கே மதுவிற்கு அனுமதி கிடையாது என்பதோடு இந்தியர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டினராக இருந்தாலும் சரி அவர் இந்திய அரசின் முறையான அனுமதியை பெற்றபிறகே லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல இயலும்.

அப்படிப்பட்ட லட்சத்தீவு மக்கள்தான் தற்போது நிம்மதி இழந்து நிற்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு காரணம், கடல் அரிப்போ அல்லது கொரோனாவோ காரணம் இல்லை. மாறாக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா பட்டேல் செயல்படுத்திய புதிய திட்டங்களும் அறிவிப்புகளும் தான் பிரச்சனைக்கு காரணம் என்பது தான் கவலைக்கு உரிய விசயமே. வழக்கம் போல வளர்ச்சி என்ற பெயராலேயே அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 

ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கக்கூடிய திரு சரத் பவார் அவர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா பட்டேல் நிர்வாக ரீதியாக செய்த தவறுகளை பட்டியலிட்டுள்ளார்.

1. கொரோனா கட்டுப்பாட்டை நீக்கியது

இந்தியா 2020 துவக்கத்தில் இருந்து கொரோனா பிரச்சனையை எதிர்கொண்டது. ஆனால் லட்சத்தீவை பொறுத்தவரைக்கும் முதல் கொரோனா பாதிப்பு என்பது ஓராண்டுக்கு பின்னர் அதாவது ஜனவரி பாதியில் தான் கண்டறியப்பட்டது. இதற்கு மிகமுக்கியக்காரணம், அங்கே செல்வதற்கு கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் தான். ஆரம்பத்தில், ஒருவர் லட்சத்தீவுக்குள் செல்ல வேண்டுமானால் கொரோனா சோதனை எடுத்து நெகடிவ் வந்த பிறகு 14 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். ஆனால் பிரபுல் படேல் பொறுப்பேற்றபிறகு, லட்சத்தீவுக்குள் நுழைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரேயொரு ஆர்டி பிசிஆர் சோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற்றால் போதுமானது என விதிமுறையை தளர்வுப்படுத்தினார். இவர் தளர்வுபடுத்தியது டிசம்பரில், அதன் பிறகு எண்ணிக்கை அதிகரிகத்துவங்கியது.

2. குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்தியது

பொதுவாக குற்ற செயல்கள் அதிகமாக நடக்கும் இடங்களில் தான் குண்டர் சட்டம் என்பது நடைமுறைப்படுத்தப்படும், ஆனால் குற்றச்செயல்கள் பெரிதாக நடைபெறாத லட்சத்தீவில் குண்டர் சட்டத்தை அறிமுகம் செய்தார் பிரபுல் படேல். சிஏஏ-வுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்களை அடக்கவே இதனை செய்ததாக மக்கள் நினைக்கிறார்கள்.

3. வேலைவாய்ப்பு பறிப்பு

சுமார் 15 ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றிய 193 பேர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதற்கு பதிலாக வெளியில் இருந்து ஆட்களை நியமித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

4. மதுவிற்கு அனுமதி

இந்தியாவை பொறுத்தவரைக்கும் மது அனுமதிக்கப்படாத யூனியன் பிரதேசமாக இருந்தது லட்சத்தீவு மட்டும் தான். சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறோம் என்ற போர்வையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி மதுவிற்கு அனுமதி கொடுத்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

5. மாட்டு இறைச்சிக்கு தடை

லட்சத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விலங்குகள் பாதுகாப்பு விதியானது, இந்திய குடிமக்கள் தங்களது உணவினை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை பறிப்பதாக இருக்கிறது. அதாவது, புதிய விதியானது மாட்டு இறைச்சி விற்பது, வாங்குவது, கொண்டுசெல்வது ஆகியவற்றை தடை செய்திடும் விதத்தில் இருக்கிறது. கேரளாவிற்கு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களாக இருப்பவர்கள் லட்சத்தீவு மக்கள், ஆகவே மாட்டு இறைச்சி அவர்களின் பிரதான உணவு என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் முக்கிய பிரச்சனைக்கு காரணம்.

6. தேர்தலில் போட்டியிட தடை

இந்தியாவில் ஒருவர் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் கிடையாது. ஆனால் லட்சத்தீவில் புதிதாக பதவி ஏற்றவர், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்கிறவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்ற புதிய விதியை கொண்டு வந்தார். இது மிகப்பெரிய விமர்சனத்தை உண்டாக்கியது.

7. சொத்துரிமை

லட்சத்தீவில் பிறந்த குடிமக்கள் மட்டுமே அங்குள்ள நிலங்களை வாங்க முடியும். மற்றவர்களால் அங்கே நிலம் வாங்க முடியாது. ஆனால் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என விதியை தளர்த்தியுள்ளார் பிரபுல் படேல். 8. நிலம் கையக படுத்தும் உரிமை

அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் தேவைப்பட்டால் யாரிடம் உள்ள நிலத்தை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும்.

9. கட்டிட மேம்பாட்டு வாரியம்

கட்டிட மேம்பாட்டு வாரியம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள உதவுவது, குறைவான விலையில் பொருள்களை விற்பது போன்ற வேலைகளை செய்துவந்தது . தற்போது இந்த அமைப்பு கலைக்கப்பட்டுள்ளது.

10. மீனவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியது

மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் படகுகள், வலைகள், படகுகளைப் பராமரிக்கத் தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றைக் கடல் பாதுகாப்புப் படையினர் சூறையாடியுள்ளனர்.

அனைவரையும் நாங்கள் சமமாக பார்க்கிறோம். அனைத்து மத, மொழி, இனங்களுக்கும் சமமான அக்கறையை வழங்குகிறோம் என சொல்லும் மத்திய அரசு, வளர்ச்சி என்கிற பெயரில் ஒரு அமைதியான பிரதேசத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் செய்துகொண்டிருக்கும் மாற்றங்களை திரும்பப்பெறுவதோடு அவரையும் குறிப்பிட்ட அந்த பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version