கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகள விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. இந்த வெற்றி அவருக்கு எளிமையாக கிடைத்துவிடவில்லை. பல சோதனைகள் இழப்புகள் என அனைத்தையும் கடந்தே கோமதி மாரிமுத்து இந்த வெற்றியை பெற்று இருக்கிறார்.
தங்க மங்கை கோமதி மாரிமுத்து வெற்றிக்கு பின்னால் இருக்கும் உழைப்பு
20 வயதில் விளையாட்டு தான் இனி வாழ்க்கை என முடிவெடுத்து கடும் பயிற்சியில் இறங்கிய கோமதி மாரிமுத்து தனது 30 ஆம் வயதில் ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் தூரத்தை 2.02.70 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். “நான் வளர்ந்த காலங்களில் என்னுடைய திறனை அறிந்து என்னால் வெல்ல முடியும் என சொல்ல எவரும் இல்லை. கல்லூரியில் சேரும் வரை எனக்கிருந்த தனித்திறனை நான் அறிந்திருக்கவே இல்லை. மற்ற ஏழைக்குடும்பத்து குழந்தைகள் நினைப்பதை போலவே எனது குடும்பத்தை காப்பாற்றிட எனக்கு ஓர் வேலை வேண்டும் என்பது மட்டுமே எனது எதிர்பார்ப்பாக இருந்தது” என்கிறார் கோமதி மாரிமுத்து.
விவசாய குடும்பத்தை பின்னனியாக கொண்ட கோமதி மாரிமுத்துவிற்கு இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. கடுமையான பயிற்சிக்கு பிறகு 2013 இல் புனேவில் நடந்த ஆசிய விளையாட்டுக்கு தேர்வானார் கோமதி, அதில் 7 ஆம் இடத்திலேயே அவரால் வர முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவில் நடைபெற்ற போட்டியில் 4 ஆவது இடத்தை பிடித்தார். நல்ல முன்னேற்றம் அடுத்த முறை நிச்சயமாக ஒரு பதக்கத்தை தட்டி விடலாம் என நம்பிக்கையோடு இருந்த கோமதிக்கு சோதனைகள் வர ஆரம்பித்தன.
2016 இல் கோமதியின் அப்பா கேன்சர் நோயால் மரணமடைய குடும்பமே நிலைகுலைந்து போனது. அதே ஆண்டு டிசம்பரில் தசைப்பிடிப்பால் [Groin Injury] பாதிப்படைந்தார். பின்னர் நேஷனல் அணியில் இல்லாதபோது தனக்கு பயிற்சி அளித்த காந்தி அவர்களின் மறைவும் கோமதிக்கு பெரிய சோதனையாக வந்து சேர்ந்தது.
அத்தனை பிரச்சனைகளையும் கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கோமதி மீண்டும் தனது பயிற்சியை துவங்கினார். தோகாவில் நடைபெறும் போட்டிக்கான தேர்வில் கலந்துகொண்டு 2.03.21 நிமிடத்தில் போட்டி தூரத்தை கடந்து முதலாவதாவாக வந்தார். சில ஆண்டுகளாக பயிற்சியில் இல்லாததால் மீண்டும் அவரை சோதிக்க விரும்பிய அத்தலெடிக்ஸ் பெடரேஷன் அவரை மீண்டும் ஓடச்செய்தது. அதில் 2.04.12 நிமிடத்தில் போட்டி தூரத்தை கடந்தார். பின்னர் தான் தோகாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
பல சோதனைகளை கடந்து இன்று சாதனைப்பெண்ணாக கோமதி மாரிமுத்து திகழ்கிறார். ஏதாவது ஒரு சூழலில் தன்னுடைய முயற்சியை அவர் கைவிட்டு இருந்தால் இன்று தங்க மங்கை என்கிற புகழை அவர் அடைந்து இருக்க முடியாது. பணமும் பிரச்சனைகளும் சாதனைக்கு ஓர் தடைக்கல் அல்ல என கோமதி இன்று நிரூபித்து காட்டியுள்ளார். அவர் பல பெண்களுக்கு ஓர் உந்துசக்தியாக மாறியிருக்கிறார்.
வென்றால் மட்டுமே உலகம் உன் உழைப்பை கவனிக்கும் என பெரியோர்கள் சொல்வதைப்போல இன்று கோமதி மாரிமுத்துவின் ஏழ்மை, விடாமுயற்சி பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
வாழ்த்துக்கள் கோமதி மாரிமுத்து!