அதிகார வர்க்கத்தினருக்கு சமமாக அமர்ந்து கேள்வி கேட்டதனால் 44 பேரை கொழுத்திய கொடூரம் நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. சாட்சி சொல்கிறது கீழவெண்மணி.
இன்று சம்பள உயர்வு போராட்டங்கள் அமைதியாக நடக்கின்றன. சம்பள உயர்வு கொடுத்தால் உங்கள் நிறுவனத்தில் இருப்போம் இல்லையேல் வேறு நிறுவனத்திற்கு சென்றுவிடுவோம் என உழைக்கும் வர்க்கத்தினர் சொல்லுகிற நிலை தற்போது நிலவுகிறது. காரணம், கல்வி வேலைவாய்ப்பு பல்கி கிடக்கிறது.
ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்னதாக நிலைமை அப்படி இல்லை. உயிர்வாழ்வதற்கு அவசியம் சோறு. அதனை விளைவிக்கின்ற பெரும்பான்மையான நிலங்களை குறிப்பிட்ட ஒரு சாராரிடம் மட்டுமே இருந்தபோது அவர்களை எதிர்த்து சம்பள உயர்வு கேட்க இயலாது. தராவிட்டால் நான் வேறெங்கும் போய்விடுவேன் என சொல்லி சென்றாலும் அங்கேயும் அதே நிலைமை தான். உங்கள் எஜமானரை பார்த்து கேள்வி கேட்டுவிட்டு உயிரோடு வாழ்வதே சிரமம். அதற்கு இன்றளவும் சாட்சியாக நிற்கிறது கீழவெண்மணி. அந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்.
தஞ்சை , நம்மை பொறுத்தவரைக்கும் நெற்களஞ்சியம் . பச்சை பசேலென்று ஜொலிக்கும் ஊர் . 1960 களில் இப்போதிருப்பதைவிட பலமடங்கு செழித்து விளங்கியது . அந்த பசுமைக்கு பின்னால் எண்ணற்ற கூலித்தொழிலாளிகளின் வியர்வையும் ரத்தமும் அடங்கியிருந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது . காரணம், அந்தப்பசுமை அவ்வளவு வீரியமாக இருந்தது. மிராசுதாரர்களும் பெரும் நிலத்துடன் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடமே நிலம் இருக்கும். உழைக்கும் திறன் உடம்பில் இருக்கிறவரைக்கும் உழைக்கலாம். அவர்கள் ஊதியமென்று எதை கொடுக்கிறார்களோ அதை மறுபேச்சு பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் அன்றைய நிலைமை. பெரும்பாலானவர்களுக்கு ஒருபடி நெல் , ஒரு கோப்பை கூழ் தான் ஊதியம் . கிட்டத்தட்ட அடிமையாகவே அவர்கள் நடத்தப்பட்டார்கள் . [Kilvenmani massacre]
பஞ்சம் போன்ற காரணங்களினால் கீழவெண்மணியை சேர்ந்த விவசாயமக்கள் அப்போது வழங்கப்பட்டு வந்த கூலியான 2 மரக்கால் நெல்லொடு ஒரு படி சேர்த்து வழங்குமாறு கேட்டனர். இதேகாலகட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தையும் நிறுவுகிறார்கள். நில உரிமையாளர்கள் அவர்களுக்கென்று ஒரு சங்கத்தையும் நிறுவுகிறார்கள். சம்பள உயர்வு குறித்து இரு தரப்பிற்கும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. முடிவில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைகிறது.
சம்பள உயர்வு கூட நில உரிமையாளர்களுக்கு பிரச்சனையாக இல்லை, இவ்வளவு நாட்கள் அடிமையாக கூனிக்குறுகி தாங்கள் கொடுத்ததை பெற்றுக்கொண்டு அடிமைபோல இருந்தவர்கள் இன்று நமக்கு சமமாக அமர்ந்து நம்மிடமே கூலி உயர்வு கேட்கிறார்களே என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதன் பின்னர் வன்முறைகள் நடைபெறத்துவங்கின.
தி இந்து நாளிதழில் இருந்து …. பிறகு நடந்ததைச் சொல்கிறார் கொடிய நிகழ்வுகளின் சாட்சியாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் 87 வயதான முனியன். “டிராக்டர்ல இருந்து இறங்கிய இருக்கை பக்கிரிசாமி, ராமுப்பிள்ளை உள்ளிட்ட அடியாட்கள் எங்கள கடுமையா தாக்கினாங்க. சீனிவாசனுக்கு மண்டை உடைஞ்சுது. என்னையும், முத்துச்சாமியையும் அடிச்சு இழுத்துக்கிட்டுபோய் ராமானுஜ நாயுடு வீட்டில் தள்ளிப் பூட்டினாங்க. ஊர்ல இருந்த எல்லாரும் திரண்டுவந்து பூட்டை உடைத்து எங்களை மீட்டாங்க.
அப்போது எழுந்த மோதலில் அடியாட்களில் ஒருவரான இருக்கை பக்கிரிசாமி இறந்தார். இந்தத் தகவல் பண்ணையார்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோனது. அதுக்கப்புறம்தான் அந்தக் கொடூரத்தை நடத்தினாங்க” என்று சொல்லும்போது கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது. அந்தக் கொடூரச் சம்பவத்தை அப்படியே நினைவில் உறைய வைத்திருக்கிறார் 80 வயதான பழனிவேல். “ராத்திரி ஒன்பது மணி இருக்கும்.
மூணு பக்கமும் அடியாட்கள் சூழ்ந்துகிட்டாங்க. அவங்க வருவாங்கன்னு எதிர்பார்த்து நாங்க கல்லைப் பொறுக்கிவைச்சுகிட்டு காத்திருந்தோம். ஆனால் முதலாளிங்களோட ஆளுங்க துப்பாக்கியோட வந்தாங்க, நாங்க வெறும் கல்லை எறிய நாங்க இருக்கிற இடம் கண்டுபிடிச்சு துப்பாக்கியால சுட ஆரம்பிச்சுட்டாங்க. பயத்துல எல்லோரும் ஓட ஆரம்பிச்சுட்டாங்க.
நாங்க இருக்கிற இடத்துகிட்ட வந்ததும் கண்ல பட்டவங்கள அரிவாளால் வெட்டினாங்க. எனக்குக் கழுத்து, கால்னு துப்பாக்கி ரவ பாஞ்சதோட கால்லயும் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில கீழ விழுந்து மயங்கிட்டேன். என்கூட நின்னு போராடின பெரியசாமிக்கு முதுகு, கழுத்தில வெட்டு விழுந்ததும் அவரு தப்பிச்சு போயிட்டாரு, ஒரு பக்கம் முனியன் விழுந்து வயலோரம் கிடந்தாரு. அவ்வளவுதான் தெரியும், அதுக்கப்புறம் நாகப்பட்டினம் ஆஸ்பத்திரில கண் முழிச்சபோதுதான் நடந்த பயங்கரத்தை தெரிஞ்சுகிட்டேன்” என்று அந்தச் சம்பவத்தைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.
ஆண்கள் குண்டு காயங்களோடும் வெட்டுக்காயங்களோடும் ஓடி தப்பித்துவிட பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் அவர்களிடமிருந்து ஓடித் தப்பிக்க முடியாது என்பதால் நடுத்தெருவில் இருந்த பண்டரி ராமையாவின் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். எதிர்த்தவர்கள் அனைவரும் சரிந்தும் ஓடியும் விட்டதால் தென்னை மட்டையை கொளுத்திக்கொண்டு அதை வைத்து அங்கிருந்த ஒவ்வொரு வீடாக தீவைத்தது கலவரக் கும்பல்.
ராமையாவின் வீடு கொஞ்சம் பெரியது. மண்சுவர் பாதுகாப்பாக இருந்ததால்தான் அங்கே 20 பெண்களும், 19 குழந்தைகளும் பதுங்கியிருந்தார்கள். கொலைவெறித் தாக்குதலில் தப்பித்து ஓடிய ஐந்து ஆண்களும் அங்கேயிருந்தார்கள். அந்தக் குடிசைக்குத் தீவைத்த கும்பல், உள்ளே ஆட்கள் இருப்பதைக் கண்டதும் அதிலிருந்து யாரும் தப்பித்து விடாமல் குடிசையைச் சுற்றிக் கொண்டது. வெளியே வரும் வழிகளை அடைத்துக்கொண்டது. அதனால் உள்ளேயிருந்த 44 பேரும் வெந்து மடிந்தனர்.
வரலாறு முக்கியம் நண்பர்களே!
இன்றும் எங்கோ ஒரு மூலையில் குறைந்த ஊதியத்திற்கு மக்களின் உழைப்புகள் அதிகாரவர்க்கத்தால் திருடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. உழைப்பாளி ஒருநாள் முதலாளியானால் அவரும் அதேபாணியில் இன்னொரு உழைப்பாளியின் உழைப்பை திருடவே செய்வார். இதுதான் வழக்கமாக நடைபெறுகிற தவிர்க்கப்படவேண்டிய விசயம்.
இன்று இருப்பது போல நிலைமை அன்று இல்லை. நாம் மிகவும் நிம்மதியான ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதனை கீழவெண்மணி கொடூரம் நினைவுபடுத்துகிறது. இன்று நமக்கு போராடாமல் கிடைக்கின்ற ஊதிய உயர்வுக்கு ஏதோ ஒருவகையில் கீழவெண்மணியை சேர்ந்த உயிர்நீத்த தியாகிகளும் ஒரு காரணம் என்றால் அதை மறுக்கவே முடியாது.
உழைப்பாளிகளின் போராட்டம் முடிவுக்கு வரவே வராது!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!