Site icon பாமரன் கருத்து

கீழடி அகழாய்வு – தமிழர்களுக்கு மிக முக்கியமான அகழாய்வு – ஏன்?

கீழடி அகழாய்வு புகைப்படம்

கீழடி அகழாய்வு புகைப்படம்

2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சிந்து நாகரிகம், கங்கை நாகரிகம் என்பதை போல விரைவில் வைகைக்கரை நாகரிகம் என்ற ஒரு வரலாறு எழுதப்படும் !
கீழடி அகழாய்வு புகைப்படம்

மத்திய அரசு கீழடியில் ஆய்வுகளை நிறுத்திய பிறகு தமிழக அரசு கீழடியில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தியது. 2017 முதல் 2018 ஆம் ஆண்டு நான்காம் கட்ட ஆய்வையும் 2018 – 2019 ஆம் ஆண்டு ஐந்தாம் கட்ட ஆய்வையும் நடத்தியது. இதில் நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த 5820 பொருள்களை மிகச்சிறந்த நிறுவனங்களுக்கு அனுப்பி அதன் அடிப்படையில் கிடைத்த தகவல்களை தொகுத்து ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ எனும் ஆய்வறிக்கையை கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கையில் தமிழர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கீழடி ஆய்வு தமிழர்களுக்கு மிக முக்கியமான அகழாய்வு.

முன்னர் முடக்கப்பட்ட கீழடி அகழாய்வு

சில மாதங்களுக்கு முன்னதாக “அசாமுக்கு மாற்றப்பட்டார் அமர்நாத்” என்ற செய்தியை அடிக்கடி நம்மால் பார்க்க முடிந்தது. இந்த அமர்நாத் ராமகிருஷ்ணா தான் கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பாக ஆய்வு நடத்தி அங்கு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னதாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என கூறியவர். அதோடு மேற்படி தீவிரமாக அகழாய்வு நடத்திட வேண்டும் எனக்கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தார் அமர்நாத். பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கட்டுமான தொடர்ச்சி இல்லை என அளித்த அறிக்கையின் அடிப்படையில் அகழாய்வை முடித்து வைத்தது இந்திய அரசு. 

 

பின்னர் எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழக தொல்லியல் துறை ஆய்வை தொடர்ந்தது. அதில் தான் தற்போது தமிழர்களின் நாகரிகம் கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து துவங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கிமு மூன்றாம் நூற்றாண்டில் துவங்கியதாக நினைத்திருந்தோம்.

ஏன் கீழடி ஆய்வு அவசியம்?

மொழிப்பிரச்சனை வெகுவாக எழுந்துவரக்கூடிய சூழலில் வெறுமனே வாயால் மட்டும் “எங்களது மொழி தான் மூத்த மொழி, நாங்கள் தான் மிகவும் தொன்மையானவர்கள்” என சொல்லிக்கொண்டு இருந்தால் போதுமானதாக இருக்காது. ஒருவேளை நமது மொழிக்கு மத்திய அரசு சரியான பங்களிப்பை செய்யாவிட்டால் நீதிமன்றம் கூட சென்று நமது தரப்பு நியாயத்தை சொல்ல முடியாது. ஆனால் இப்போது ஆதாரபூர்வமாக உலகின் மிகசிறந்த தொல்லியல் பொருள்களை ஆய்வு செய்கின்ற நிறுவனங்களின் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன – தமிழர்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று. 

 

நமது மக்களுக்கும் கூட மொழி பற்றையும் நமது தொன்மையையும் புரியவைப்பதற்கு கீழடி ஆய்வு என்பது உதவும்.

இன்னும் ஆய்வினை விரிவுபடுத்திட வேண்டும்

செயலர் திரு உதயசந்திரன் அவர்கள் இந்த ஆய்வு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார். கீழடிக்கு அருகே இருக்கக்கூடிய கொந்தகை, அகரம், மணலூர் போன்ற ஊர்களிலும் ஆதிச்சநல்லூரிலும் ஆய்வுகளை தொடரவிருப்பதாக கூறியிருக்கிறார். நாம் பல்வேறு திட்டங்களுக்கு பலகோடி ரூபாயை செலவிடுகிறோம். அப்படி இருக்கும் போது நமது அடையாளமாக இருக்கக்கூடிய நமது மொழி மற்றும் நமது நாகரிகம் இவற்றின் புகழை அறிவியல் பூர்வமாக நிறுவுவதற்கு பலகோடிகளை அரசு செலவு செய்ய முன்வர வேண்டும். 

 

அதேபோல அருங்காட்சியகம் அமைப்பதற்கும் போதுமான நிதியினை தமிழக அரசு கொடுத்திட வேண்டும். மேலும் இந்த தகவல்களை பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்க்க பாடநூல் உள்ளிட்டவற்றில் இந்த தகவல்களை சேர்க்க வேண்டும். ஏற்கனவே அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து கீழடி ஆய்வினை விரிவுபடுத்திட வேண்டும்.

நன்றி சொல்ல வேண்டியவர்கள்

இந்த ஆய்வு முடிவுகள் வெளிவருவதற்கு மிக முக்கிய பங்களிப்பு ஆற்றிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அதன் துறை செயலாளர் உதயசந்திரன் இருவருக்கும் தமிழக மக்கள் நன்றிக்கடமை பட்டவர்கள். அதேபோல கீழடி ஆய்வு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சு வெங்கடேசன் [தற்போதைய மதுரை MP ] அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்க்கு முன்னர் இந்த ஆய்வினை நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுக்கும் நன்றி.

2600 ஆண்டுகளுக்கு முன்னரே எழுத தெரிந்த தமிழர்கள்

இதற்கு முன்பு கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளின் படி தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு என கருதப்பட்டது. தற்போது கீழடியில் செய்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை ஆய்வு செய்ததில் தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு என அறியப்படுகிறது. இதனால் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதத்தெரிந்த நாகரிக மக்களாக தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

கீழடி ஆய்வில் பங்கேற்ற மிகப்பெரிய ஆய்வு நிறுவனங்கள்

கீழடி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் உண்மைதன்மையை அதிகரிக்கும் விதமாக உலகின் மிகச்சிறந்த ஆய்வு நிலையங்களில் கீழடியில் இருந்து பெறப்பட்ட பொருள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 2018-ல் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் மியாமியில் உள்ள, ‘பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த மாதிரிகளின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘கீழடி கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும்’ என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

 

கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 17 பானை ஓடுகள் மற்றும் அதில் இருக்கக்கூடிய கனிமங்கள் ஆகியவற்றை சோதனை செய்வதற்காக இத்தாலியில் இருக்கக்கூடிய பைசா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைக்கு அனுப்பப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்மூலமாக கீழடியில் பானை செய்திடும் கூடம் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

 

சிந்து நாகரிகம், கங்கை நாகரிகம் என்பதை போல விரைவில் வைகைக்கரை நாகரிகம் என்ற ஒரு வரலாறு எழுதப்படும் !

 

 

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version