தமிழக மக்கள் கூட கர்நாடகா தேர்தல் குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் . அதற்கு ஏற்றாற்போல கர்நாடகாவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன . இந்த சூழ்நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்திருக்கிறார் ஆளுநர் .தற்போது எடியூரப்பா முதல்வர் பதவியிலும் அமர்ந்துவிட்டார் .
மாநிலத்தில் அதிக இடங்களை பெற்றிருந்தாலும் ஆள்வதற்கு போதுமான பெரும்பான்மை அக்கட்சிக்கு இல்லை என்பது ஊரறிந்த உண்மை . மறுபக்கம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு ஆதரவு அளித்தது ஆகையால் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை பெரும் தகுதி இருந்தது .
இந்த சூழ்நிலையில் ஆளுநர் எடுத்த முடிவு சரியானதா என்பதனை ஆராய இருக்கின்றோம் .
பொதுவாக ஆளுநரின் பொறுப்பு மாநிலத்தில் நிலைத்தன்மை கொண்ட ஆட்சியை அமைக்க கோருவது . அதற்காக அரசியல் சாசனம் அவருக்கு சில உரிமைகளை வழங்கியிருக்கின்றன .
அதன்படி ஒரு ஆளுநர் இவ்வாறு செய்யலாம் ,
அறுதி பெரும்பான்மை பெறாத கட்சியாக இருந்தாலும் தனியாக அதிக இடங்களை வென்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம் (தற்போது நடந்திருக்கிறது )
தனியாக அதிக தொகுதிகளை வென்றவர்களால் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஆளுநர் அவர்களே ஆராய்ந்து கூட்டணி மூலமாக அதிக உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற , தனியாக குறைந்த இடங்களை வென்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது
இதற்கு உதாரணம் 2014 டெல்லியில் பாஜக வென்ற இடம் 31 ஆம் ஆத்மீ கட்சி வென்ற இடம் 28 , இருந்தாலும் AAP கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது .
அதுபோன்றுதான் மற்ற மாநிலங்களிலும் கோவா ,மணிப்பூர் போன்ற இடங்களில் நடந்திருக்கின்றன .
ஆகவே இந்த முடிவுகளை ஆளுநர் அவரது விருப்பப்படி ஆராய்ந்து எடுக்க அரசியல் சாசனம் உரிமை கொடுத்துள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள் .
ஆளுநரின் முடிவு சரியா ? பாமரன் கருத்து
மிகப்பெரிய அரசியல் சாசனம் இருக்கக்கூடிய இந்த நாட்டில் இன்னும் சில பழக்க வழக்கங்கள் தனி நபர் உரிமைக்கு விடப்பட்டுள்ளது ஐனநாயக பேராபத்து .
இந்த மாதிரி நடந்தால் இந்த மாதிரிதான் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநருக்கு விதிகளை வகுத்துவிட்டால் நாளை ஆளுநர் யாருக்குமே சாதகமாக முடிவெடுக்க முடியாதல்லவா ? அதனை நோக்கி நாம் நகர வேண்டும் .
கர்நாடகாவில் ஆளுநர் எடுத்த முடிவு அவருக்கான உரிமை சார்ந்த விஷயமாகவும் ஏற்கனவே முன்னுதாரணம் கொண்ட விசயமாகவும் இருந்தாலும் 15 நாட்கள் அவகாசம் என்பது சரியானது அல்ல .
தனக்கு பெரும்பான்மை இருக்கின்றது என உரிமை கோரும் எடியூரப்பாவை மறுநாளே சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லியிருக்க வேண்டும் . அவரால் முடியவில்லையென்றால் அடுத்தநாளே அடுத்தவர்களுக்கு வாய்ப்பினை கொடுத்திருக்க வேண்டும் .
தற்போது செய்திருக்கக்கூடிய ஆளுநரின் செயலானது குதிரைபேரத்திற்கு தான் வழிவகுக்கும் .
PAMARAN KARUTHU