மக்கள் நீதி மய்யம் கட்சி – திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. திமுகவின் சார்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல் அவர்களும் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. சிலமுறை நடந்த பேச்சுவார்த்தையில் கமல் 40 தொகுதிகள் கேட்டதாகவும் உதயநிதி அவர்கள் 25 தொகுதி வரை கொடுக்க முன்வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கமல் – திமுக கூட்டணி நடக்குமா? அப்படி நடந்தால் சரியாகுமா என்பது குறித்து பார்ப்போம்.
கமல் – திமுக கூட்டணி நடக்குமா?
கமல் ஹாசன் – உதயநிதி இருவருக்கும் பேச்சுவார்த்தை நடந்ததா என்பது பற்றிய உறுதியான தகவல் இல்லை. ஆனால் நடந்திருக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அதில் தவறும் இல்லை. கடந்த முறை விஜயகாந்த் அவர்களை கூட்டணியில் வெற்றிகரமாக இணைத்திருந்தால் இப்போதே ஆளும் கட்சியாக வளம் வந்திருக்கும் திமுக. ஆகவே இம்முறை கமல் ஹாசன் மூலமாக தங்களுக்கு வர வேண்டிய வாக்குகள் சிதறி அது தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என திமுக நினைப்பது எதார்த்தமான ஒன்று தான். ரஜினி அவர்கள் வெளிப்படையாக தேர்தலுக்கு வரவில்லை என அறிவித்த பின்பு அவர் எந்தக்கட்சிக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவும் மாட்டார். நாகரிகமாக தொண்டர்கள் அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ளுங்கள் என்றே கூறுவார். ஆகவே மய்யம் – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
கமல் – திமுக கூட்டணி நடக்குமா என்ற கேள்வி எழும் பட்சத்தில் ‘நடக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது’ என்பதே எதார்த்தமான பதிலாக இருக்க முடியும். அண்மையில் மய்யமும் திராவிட கட்சி தான் என கூறியும் இருக்கிறார். கமல் முன்வைக்கும் குற்றசாட்டுகள் பலவும் ஆளும் கட்சியை மையமாக வைத்தே இருக்கிறது. ஆகவே அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. இன்றைய கள நிலவரப்படி கமல் கட்சி தனித்து போட்டியிட்டால் நாகரிகமான சதவிகித வாக்குகளை பெற முடியும். ஆனால் வெல்ல முடியுமா என்றால் அது சாத்தியமில்லாத ஒன்று தான். நன்றாக அரசியல் செய்தால் அடுத்த தேர்தலில் மய்யம் தொகுதிகளை கைப்பற்றலாம். ஆனால் இன்னொரு 5 ஆண்டுகாலம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் கட்சியை நகர்த்திக்கொண்டு செல்வதென்பது சிரமமான பணி. இதனை கமல் உணர்ந்திருப்பார், அவருக்கு கீழே இருப்பவர்களும் உணர்ந்திருப்பார்கள். ஆகவே கூட்டணி சாத்தியம் இருக்கவே செய்கிறது.
கமல் – திமுக கூட்டணி நடந்தால் என்னவாகும்?
கமல் – திமுக கூட்டணி நடந்தால் திமுகவின் கடந்த கால செயல்பாடுகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய சூழல் கமல் அவர்களுக்கு ஏற்படும். ஏற்கனவே ஊழல், லஞ்சம் ஆகியவைகளை ஒழிக்கவே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் கமலுக்கு அது சங்கடமான விசயமாக இருக்கும். ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் கமல் அதனை சாமர்த்தியமாக கையாள்வார்.
யார் முதல்வர் என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டிய அவசியமும் இந்த கூட்டணியால் ஏற்படும். ஸ்டாலின் அவர்கள் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அதில் எந்தவித சமரசமும் நடக்காது என்ற போதிலும் கூட கமல் அந்த கூட்டணிக்குள் நுழையும் போது நிச்சயமாக பெரிய பதவி ஒன்றை தனது கட்சிக்காக கேட்கவே செய்வார். அது துணை முதல்வர் பதவி வரைக்கும் கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தக்கூட்டணி அரங்கேறும் பட்சத்தில் கமல் அவர்களின் கட்சிக்கு சில வெற்றிகள் சாத்தியமாகலாம். மாற்றத்தை கொண்டுவருவேன் என்று கூறி அரசியலுக்கு வந்த அவர் மைய நீரோடையில் கலந்துவிடுவார். தனித்த சக்தி என அவரை மக்கள் நம்புவதில் சில சறுக்கல்கள் உண்டாகலாம்.
உங்கள் கருத்து என்ன? கமெண்டில் பதிவிடுங்கள்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!