திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், தென்னகத்தின் கதிரவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது கருணாநிதி எழுதிய இரங்கற்பா கவிதை,
பூவிதழின் மென்மையினும் மென்மையான
புனித உள்ளம்- – அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்! – அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும்
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-!
விழிமலர்கள் வேலாகும் – வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது
கைமலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை
அம் மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்
மக்களாட்சி மலர் குலுங்க
சமதர்மப்பூ மணக்க
தாய்மொழித் தமிழே வாழ்வுப் பொழிலாக
ஆடிவரும் தென்றல்
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே – தினம்,
பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்
உனைக் காக்க எனைத் துறப்பேன்-என், –
ஒரு கோடி தமிழ் இளைஞர்
பாடிநின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன்
முடுகிற் செறிந்த தமிழார்வம்
முதிரா இளைஞர் ஆருயிராய்ப்
பெருகச் செய்த செயல் மறவர்
சிறப்பைப் பாடக் கேண்மினோ!
தங்கு கண் வேல் செய்த புண்களை
அன்பெனும் வேது கொண்டொற்றியுஞ்
செங்கனி வாய் மருந்தூட்டுவார்
சீர்மையைப் பாடக் கேண்மினோ!
பொரு தடக்கை வாளெங்கே; மணிமார் பெங்கே;
போர் முகத்தின் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே யெங்கேயென்று
தம்பியரைக் கேட்டானைக் கேண்மின்! கேண்மின்!
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ என்று
மையல் கொண்ட மாதர் தமைத் துயில் எழுப்பச்
செயங்கொண்டார் பாடினார்,
களப்பரணி.. கலிங்கத்துப் பரணி –
அளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி — யான்
கவிப் பரணியேறி, காஞ்சிபுரப் பரணி பாடி நின்றேன்
அவலப் பரணி பாடுகின்றேன் இன்று…!
கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்
கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென
நிலவினில் குளிரென நிலமிசை வளமென
குலவிடும் அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையென
கலைமணங் கமழக் கூடிய கவிஞர்
தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ! வெள்ளம்! வெள்ளம்! மாபெரும் வெள்ளம்!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம்
தாயகத்தில் மொழிப்புரட்சி தோன்றுதற்கு
வித்திட்டார் சிலபேர் என்றால், ஈரோட்டு
நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்
எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சிபூண்டு!
இருமூன்று திங்கள் வரை சிறையில் வாடி,
தரும் ஊன்று கோலாகத் தமிழைத் தந்து
அருமூன்று எழுத்தாலே அண்ணா வானார்!
அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில்
சென்னையிலே சொன்னேனே நினைவுண்டா உங்களுக்கு?
மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு!
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முர சார்த்தவர் தமிழர் — அவர் வாழ்ந்த
தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து — அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..
அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து..
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து…
களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து அறிந்திடுவீர் எனச் சொன்னேன்!
திக்கெட்டும் தமிழ் முழக்கம்
திசையெங்கும் சொன் மாரி
வக்கற்றோர் வகையற்றோர்
வாழ்வதற்குத் திட்டம் கோரி
வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!
எழுதுகின்றார் அண்ணா ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ்
நாடெல்லாம்… புதுமை மணக்குதங்கே…
ஏடா தம்பி! எடுடா பேனா
எத்தனை உணர்ச்சி! எத்தனை எழுச்சி!
‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’
கருத்துப் பேழை–கற்பூரப் பெட்டகம்!
மரக்கிளையிலே பிணம் —
வெந்த புண்ணிலே வேல்!
மறந்திடப் போமோ; மனங்கவர் வாசகம்?
சாலை யோரத்திலே வேலையற்றதுகள் –
வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் –
வேந்தே! அதுதான் காலக்குறி!
அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை?
அறிவு நடை?
கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது
தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ?
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
தம்பியுடையான் படைக்கஞ்சான்
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்
மனோன்மணீயம் எனினும் — –நம்
மனதில் பதித்தவர் அண்ணா வன்றோ!
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அரசியல் பண்பினை போதிக்கும் அழகே!
மறப்போம் — மன்னிப்போம்
மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே!
எவர் கற்றுத் தந்தார் இதனை?
சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல்போல்
நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்
நன்றென்றார் அண்ணா -அதை மறுத்து
நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்
அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா – அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க
வயிறு தாங்காக் காரணத்தால்
தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே!
என அழைத்து கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டி
பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக்கொண்டார்;
சொலல் வல்லார் சேதுப்பிள்ளைதனை
சோமசுந்தர பாரதியைச் சொற் போரில்
சொக்க வைத்தார் — பாவம்; சிக்க வைத்தார்!
நீதிக் கட்சியென்று நெடியமதில் சுவருக்குள்ளே — பணச்
சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும் கொள்கையாலே அதனை
வீதிக்குக் கொண்டு வந்தார்;
வீசிடுக வெள்ளையர்கள் பட்டத்தையென்று
சேலத்து மாநாட்டில் தீர்மானம் போட்டுவிட்டார் —
– அண்ணாவின் போர்க்
கோலத்தை எதிர்க்க மாட்டாமல்,
கோலற்ற குருடர்போலக் கொள்கையற்றோர் வீழ்ந்துபோனார்!
தீரர் அண்ணா திராவிடர் கழகமெனும் பெயர் மாற்றத் தீர்மானம்
வீரர் கூடிய மாநாட்டில் கொண்டு வந்தார்
அண்ணல் காந்தியார் அறவழி கண்டு
ஆங்கில ஆட்சியை அகற்றிய போது
துன்ப நாளெனும் பெரியார் அறிக்கையை மறுத்துத்
தொடங்கினார் போரை!
இன்ப நாளிது! இனிய நாளிது!
என்பு தோலாய் ஆன இந்தியர்
அன்புறு காந்தியின் அருளால் இன்று
எழுந்தனர் அடிமைத் தளையினை அறுத்து
முழங்குவோம் விடுதலை முரசினை எடுத்து
என்றே அண்ணா, அன்றே சொன்னார்…
அன்று முதல் அண்ணன் – அய்யா – உறவினிலே கீறல் விழ
அது நாற்பத்தொன்பதாம் ஆண்டினிலே பிரிவாய் மாறி
முகில் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாய்
முன்னேற்றக்கழகத்தை முகிழ்க்கச் செய்தார்.
தலைவருடன் கூடி வாழ முடியாமல்
பெரும்பான்மைத் தோழருடன் வெளியே வந்தும்,
நிலைகுலையா நம் அண்ணன் அன்று சொன்னார்
அது, –
நேற்று சொன்னது போல் இருக்குதம்மா!
தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு – என்
தலைவர் இருந்த நாற்காலி காலியாக இருக்கும் அதில்
தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்
அதுவரையில் காத்திருப்பேன் என்றார்.
பூத்திருக்கும் மலர்த் தோட்டம்
காலைப் பனிநீர் வடிப்பது போல்
காத்திருந்து கூட்டம் கேட்டோர்
கண்ணீர் வடித்தார்
கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! என அழைத்துச்
செந்நீர் சிந்துதற்கு அணிவகுத்தார்.
யாரேனும் கேட்டதுண்டா?
யாரேனும் பகர்ந்ததுண்டா?
பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்
பதுங்கிப் பாயும் வேங்கையெனப் — -பாராள வந்த கதை?
ஈராண்டு முடியவில்லை எம் அண்ணா ஆட்சியேற்று –
சீரார்ந்த செயல் பலவும் செய்தலுற்றார்,
ஏராந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து
எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி
உலகத் தமிழ் மாநாடு துவக்க வந்த
ஓங்கு புகழ்க் குடியரசுத் தலைவரவர்
இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன்.
இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை யென
ஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி!
ஆந்திரத்துப் பிரும்மானந்த ரெட்டிகாரும்
ஆகா – -நீதானே அசல் காந்தீய வாதியென்று
ஆராதனை செய்திட்டார் — ஆண்டொன்று கழியவில்லை!
மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல
மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே!
மகாத்மாவின் தோன்றல் நீர்தான் என்று!
கிரியென்றால் மலையன்றோ — அந்த
மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா!
வி.வி. கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது.
பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் — அன்று
தென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர் அண்ணன் பற்றி
என்ன சொன்னார்?
பழந்தமிழ் வித்தகர் பல்லாவரத்தார் — அண்ணா,
பழந்தமிழ்ப் பேச்சால் மயங்கி நின்றார். – அந்த
மறைமலை தந்த புகழ்மொழி ஆயிரம்
பசுமலை பாரதி — பாண்டியன் தோற்றம் — அவரை
நாவலர் என்று நாடே அழைக்கும் — அவர்
சழக்கரால் வீழ்ந்த தமிழ்நிலம் காக்க — மன
அழுக்கில்லாத் தலைவன் கிடைத்தான் என்றே
அண்ணன் பெருமை சொன்னார் அன்று!
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரை தான்
மன்னன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறளே —எனப்போற்றும் அறப்பனுவல்
அளித்திட்டான் — மாந்தரெல்லாம் களித்திட்டார்!
விண்முட்டும் மலையோரம் — நம்
கண் பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம் போல
பண்பட்ட தமிழர் வாழ்வில் — முதுகில்
புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ
சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில் பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!
அறிவு மணங் கமழுகின்ற ஆலயங்கள் அற்றுப் போய் ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோவில்கள் கண்டுவிட்டார்.
மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் — தமிழ்
அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்
அறநெறியே குறிக் கோளாய்த் திகழ்ந்திட்ட பெரு நிலத்தில்
பிறநெறிகள் பயிர் செய்தார் பிழை குவித்தார்.
மழையற்றுப் போன வயல் போல மாறிற்றுத் தமிழர் மனம்;
அழுக்காறு — அவா — வெகுளி — இன்னாச் சொல் நான்குமின்றி
நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்;
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- — இன்று
இருள் கவிந்து வாட்டம் கோடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை — சோகப் பாட்டுப்
பாடினாள் தமிழன்னை – அடு நெருப்பில்
ஆடினாள் தமிழன்னை
ஓடினாள் – ஓடினாள் – ஒரு வழியும் கிடைக்கவில்லை!
புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்
கவியூரின் பெருவேந்தன் குறளாசான்
ஆண்டு சென்று, அருமை மகனே
வேண்டுகோள் ஒன்று விடுத்தேன் என்றாள்.
என்னம்மா? என்றான் குறளோன்.
தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமி[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]ழகத்தில்
மீண்டும் நீ பிறந்திட வேண்டுமென்றாள்.
தங்கம் எடுக்கவா என்றான்
தமிழர் மனம் வாழ்வெல்லாம்
தங்கமாக ஆக்க என்றாள்
இன்றென்ன ஆயிற் றென்றான்.
குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;
சென்றடையக் குடிலில்லை ஏழைக்கென்றாள்;
கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல் கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்
கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்.
அழுதகண்ணைத் துடைத்தவாறு
அமுதமொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்?
தொழுத மகன் உச்சி மோந்து – ஆல
விழுதனைய கைகளாலே.. அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக
பொதிகை மலைத் தென்றலாய் போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்ப் பழந்தமிழர் புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன் — கீழ்
வானுதித்த கதிர் போல
புரியாதார்க்கு ஒரு புதிர் போல –
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை. –
தலைவரென்பார், தத்துவ மேதை என்பார்,
நடிகரென்பார், நாடக வேந்தரென்பார்
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்.
அன்னையென்பார், அருள் மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் — அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் -நெஞ்சத்து அன்பாலே
அண்ணா என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே — அவர் அன்னை
பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஔவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடி பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல் போப்புக்கும் சிலை கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்துச் சிலை வைத்ததினால் — அண்ணன் தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா… இதயமன்னா…
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப்போய் விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற் கரையில் உறங்குதியோ?…
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?
- கருணாநிதி
அண்ணா பெரியாரின் மீது வைத்திருந்த பேரன்பையும் மதிப்பையும் அண்ணாவின் மீது கருணாநிதி உள்ளிட்ட அவரது தம்பிகள் வைத்திருந்த பாசத்தையும் கருணாநிதியின் இரங்கற்பாவின் மூலமாக அறிய முடிகிறது.
பாமரன் கருத்து