Site icon பாமரன் கருத்து

கக்கன் எப்படி வாழ்ந்தார் தெரியுமா? | Kakkan biography in Tamil

கக்கன்

கக்கன்

தூய்மையான அரசியல்வாதிகளை தேடினால் அதில் முன்னிலையில் இன்றும் இருப்பவர் திரு கக்கன். அவர்கள் பெரும் பொருளை சேர்த்து வைத்துவிட்டு போகவில்லை, ஆனால் வரலாறு அவர்களுக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கிறது.
காமராஜருடன் கக்கன்
கட்டுரை எழுதியவர் : வினோத் குமார்

எத்தனையோ அரசியல்வாதிகளை இந்த தமிழகம் சந்தித்து இருக்கின்றது. ஆனால் வெகு சிலரை மட்டும் தான் நினைவில் வைத்துக்கொள்கிறது. எந்தவித வசீகரமும் இல்லாத அவர் தமிழக மக்கள் மனதில் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் அரசியல் வாழ்வில் அவர் கடைபிடித்த தூய்மை தான். காமராஜர் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரை இன்றுவரை ‘அரசியல் தூய்மை’க்கு உதாரணமாக கூறுகிறோம் என்றால் அவர் எப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்திருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறதல்லவா!. முன்னாள் அமைச்சர் திரு. கக்கன் அவர்கள் தான் அந்த மாபெரும் பெருமைக்கு உரியவர்.

இந்த தலைமுறை அறிந்துகொள்ளவே மீண்டும் கக்கன் அவர்களை பற்றி பார்க்க இருக்கிறோம். நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

கக்கனின் பிறப்பு

ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு, மதுரை மாவட்டத்திலுள்ள தும்பைபட்டி என்னும் கிராமத்தில், ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தார் கக்கன். இளமையிலேயே தன் தாயை இழந்ததால் தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப்பட்டார். தன் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படிக்க தொடர்ந்த அவரால் வெற்றிபெற முடியவில்லை. எனவே, மாணவப்பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மதுரை வைத்யநாத ஐயர் வீட்டில் ஊழியராக பணிபுரிந்து வந்த திரு.கக்கன் அவர்கள் வைத்தியநாத அய்யருடன் இணைந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

தீண்டாமையும் கக்கனும்

ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவன்மீது கீழ்சாதி என்னும் சாயம் பூசப்பட்டால் அவன் அதை சுமந்துதானே ஆகவேண்டும். தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தும்பைபட்டியில் உள்ள ஊரணியில் உயர்சாதி மக்கள் மட்டும் நீர் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு அசுத்தமான குளத்திற்குச் சென்று நீரெடுக்க வேண்டும் என்ற சாதிய அடக்குமுறை இருந்துவந்தது. அந்த அசுத்தமான குளத்துக்கு உயர்சாதி மக்கள் வைத்த பெயர் ‘பீ’க்குளம்.

மேலூர் தாலுகாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் கக்கன் இருந்தபோதிலும், அவரால் அந்தப்பகுதி மக்களுக்கு ஏதும் செய்ய இயலவில்லை. காரணம், காங்கிரஸ் கட்சியில் உயர்சாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. கக்கனின் வேதனையை புரிந்துகொண்ட தும்பைபட்டி அம்பலம் ஒருவரும் செட்டியார் ஒருவரும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப்பொதுக்குளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று பேசினார்கள். அதற்கு உயர்சாதி மக்கள் மறுக்கவே, பெரிய அடிதடி பிரச்சனைகளுக்கு பிறகு குளத்தின் ஒருபுறம் ஆதிக்கசாதி மக்களும் மறுபக்கம் தாழ்த்தப்பட்ட மக்களும் நீர் எடுக்கலாம் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது.

1927 ஆம் ஆண்டு, ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர் தொடங்கிய, ஆலய உள்நுழைவு (தாழ்த்தப்பட்ட மக்களும் கோவிலுக்குள் செல்லவேண்டும்) போராட்டத்தின் தொடர்ச்சியாக வைத்தியநாத அய்யர் துணையுடன் தாழ்த்தப்பட்ட மக்களுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலினுள் நுழைந்து போராட்டத்தை வெற்றிகரமாக முடித்தார் கக்கன். (குறிப்பு: முதலில் வைத்தியநாத அய்யர் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் சில அரசியல் காரணங்களால் ஆதரிக்க வேண்டியதாயிற்று).

தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை கல்வியால் மட்டுமே உயர்த்தமுடியும் என எண்ணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட “அரிசன சேவா சங்கத்தில்” தன்னை இணைத்துக்கொண்டு சேவையாற்றினார். மேலும், சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற அடிப்படையில் தனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை, வினோபா பாவேவின் ‘பூமிதான’ இயக்கத்துக்குத் தானமாகக் கொடுத்துவிட்டார் கக்கன்.

கக்கனும் அரசியலும்

1946-ல் நடைபெற்ற தேர்தலில் மத்திய சட்டமன்ற உறுப்பினராக கக்கன் தேர்வுசெய்யப்பட்டார். பின்னர், 1952-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1957-ல் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். அதனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. காமராஜர் ஆட்சியில் தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராக பதிவு வகித்தார். அதில், பொதுப்பணித்துறை, விவசாயத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் பதவி முதலியன அடங்கும். மேலும், 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்தில் மேட்டூர் மற்றும் வைகை அணைகள் கட்டப்பட்டன. விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் கக்கன்.

பசுந்தாளுரம் அறிமுகமானது கக்கனின் காலத்தில்தான். 1963-ல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் காமராஜர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அப்பொழுது கக்கனையே அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது காமராஜர் எண்ணம் ஆனால் சில அரசியல் காரணங்களால் பக்தவத்சலம் முதல்வரானார். தொடர்ந்து வெற்றியையே பார்த்துவந்த கக்கனுக்கு 1971-ல் நடைபெற்ற தேர்தல் முதல் தோல்வியை தந்தது. ஆம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன் தோல்வியடைந்தார். அத்துடன், அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்.

கக்கனின் இறுதிகாலம்

காமராஜரின் இறப்பிற்குப்பிறகு, அரசியலை விட்டு முழுவதும் வெளியேறிய கக்கன் அவர்கள் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவந்தார். அரசு பேரூந்துகளையே பயன்படுத்தி வந்தார். கடும் பொருளாதார நெருக்கடிக்குட்பட்டார். இதையறிந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ‘தங்கச்சங்கிலி’ ஒன்றை பொதுவெளியில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் நிரந்தர முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகையை ஒவ்வொரு மாதமும் கக்கனுக்குக் கிடைக்குமாறு வழிவகை செய்தார்.

1980-ஆம் ஆண்டு மதுரை முத்துவைக் காண இராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் சென்றார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள். அங்கு நலம் விசாரித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் உடனிருந்த காளிமுத்து ஏதோ கிசுகிசுக்க எம்.ஜி.ஆர் பதறிப்போனார். மருத்துவமணையின் சாதாரண வார்டுக்கு விரைந்து சென்றார். மக்களோடு மக்களாக படுக்கை வசதியின்றி கீழே படுத்திருக்கும் கக்கனைக் கண்டு கண்கலங்கினார். உடனடியாக எம்.ஜி.ஆர் “கக்கனை சிறப்பு வார்டுக்கு மாற்றக்கோரி உத்தரவிட்டார் ஆனால் கக்கனோ “சாதாரண வார்டே எனக்குப்போதும்” எனக்கூறி அதனை மறுத்துவிட்டார். சென்னை திரும்பிய திரு. எம்.ஜி.ஆர் அவர்கள், “முன்னாள் அமைச்சர்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச பேருந்து பயணம்” முதலிய உதவிகளை அரசு செய்யும் என அறிவித்தார். மேலும், கக்கனுக்கு ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்தார். இருப்பினும், கக்கனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் 1981- ஆம் ஆண்டு, டிசம்பர்-23 அன்று மரணம் அடைந்தார்

கக்கனின் நேர்மை

கக்கன் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்த சமயம். கக்கனின் தம்பி திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு காவல் துறையில் சேர விருப்பம். சிறந்த ஓட்டப்பந்தய வீரரும்கூட. அவருக்கு காவல்துறையில் சேர அழைப்பும் வந்தது. ஆனால் கக்கன் அவர்களோ விஸ்வநாதனிடம், ” காவல்துறை என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. நீ நேர்மையான முறையில் தேர்வாகியிருந்தாலும், என்னுடைய சிபாரிசில்தான் உனக்கு இந்த வேலை கிடைத்தது என்று கூறுவார்கள். அதனால் இந்த வேலை உனக்கு வேண்டாம்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். மேலும், ஐ.ஜி அருளை அழைத்து, “என் தம்பிக்கு 2 விரல்கள் சரியாக வேலை செய்யாது. அவனால் துப்பாக்கியெல்லாம் இயக்க முடியாது. நீங்கள் சரியாக தேர்வு செய்யவில்லை” என்றுகூறி அந்த ஆர்டரையே ரத்து செய்ய வைத்துவிட்டார். (தற்காலத்தில், கட்சியின் கடைசிநிலை பொறுப்பில் இருப்பவர்கள்கூட பொதுமக்களிடம் அதிகாரம் செய்கிறார்கள்).

ஒருமுறை கக்கன் அவர்கள் கட்சிப்பணியின் காரணமாக வெளியூர் சென்றிருந்தார். ஒருநாளில் கட்சிப்பணி முடிந்து வீடு திரும்பிவிடலாம் என்பதால் மாற்றுத்துணி ஏதும் எடுத்துவரவில்லை. காலையில் குளிக்கச் சென்ற கக்கன் வெகுநேரமாகியும் வெளியில் வராததால் அதிகாரிகள் உள்நுழைந்து பார்த்தனர். அங்கு கக்கனே தனது கிழிந்த அழுக்குபடிந்த வேஷ்டியை துவைத்து உலர்த்திக்கொண்டிருந்தார். துவைத்து கொடுக்க ஆட்களும் அங்கு உண்டு ஆனால் துவைக்க சொல்லவில்லை. புதிய வேஷ்டி வாங்கிவரச் சொன்னால் அதிகாரிகளே வாங்கிவந்து கொடுப்பார்கள். இருப்பினும் கக்கன் அந்த அழுக்குப்படிந்த வேஷ்டியை தானே துவைத்து உலர்த்தியபின் அதிகாரிகளுடன் வெளியில் சென்றார். கக்கனின் அரசியல் வாழ்க்கையில் கரை படிந்தது அவரின் உடையில் மட்டுமே.

கக்கன் அவர்களின் அரசியல் நற்பண்புகளை போற்றும் விதமாக இந்திய அரசு அவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999-ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது

இன்றைய இளைஞர்கள் இன்றைய அரசியல்வாதிகளின் அரசியலை பார்த்துக்கொண்டு, “அரசியல் என்றாலே ஊழல், மக்களை ஏமாற்றும் செயல். அதற்குள் நாம் செல்லக்கூடாது ” என்றெண்ணுகிறார்கள். அரசியலில் இப்படியும் சில தலைவர்கள் இருந்தார்கள் என்பதை அறியாமலேயே. “அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள் அதனால் அங்கு நான் செல்லமாட்டேன்” எனக்கூறுவது எவ்வகையில் நியாயமாகும். காமராஜரின் ஆட்சியில் கக்கன் மட்டுமே அமைச்சரில்லை. அவருடன் இன்னும் பல அமைச்சர்களும் இருந்தார்கள் ஆனால் இன்றளவும் கக்கனையே அரசியலின் நேர்மையாக கூறுகிறார்கள். எங்கு இருக்கிறோம் என்று பாராமல், எவ்வாறு தனித்து நிற்கிறோம் என்பதிலேயே நம் வெற்றி இருக்கிறது. கக்கன் அன்று ஒடுக்கப்பட்டிருந்தாலும் இன்று ஓங்கியே இருக்கிறார். நாமும் ஓங்கி நிற்க உழைத்து நிற்போம்.

கட்டுரை எழுதியவர் : வினோத் குமார் [kjvinoth9886@gmail.com]





Share with your friends !
Exit mobile version