Site icon பாமரன் கருத்து

இவ்வளவு தான் வாழ்க்கை – புரிந்துகொள்வோம்

விடியலை தேடி - ஒரு இளைஞனின் பயணம் - மதன் சிறுகதை

விடியலை தேடி - ஒரு இளைஞனின் பயணம் - மதன் சிறுகதை

செல்வம் கோடி சேர்த்து வைத்தவர்கள் தனி விமானங்கள் வைத்திருப்பவர்கள் இன்று அஞ்சி முடங்கி கிடக்கிறார்கள் – இவ்வளவுதான் வாழ்க்கை

ஆரம்பகாலத்தில் இங்கு ஒருவர் நிம்மதியாக வாழ்வதற்கு ஒழுகாத வீடு, வயிறு காயாமல் கிடைக்கும் உணவு இவை மட்டுமே போதுமானதாக இருந்தது. பொருளாதாரம் என்றவொன்றினை மனிதன் தெரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகு இங்கு ஒருவர் நிம்மதியாக வாழ்வதற்கு எவையெல்லாம் தேவை என்கிற பட்டியல் திட்டமிட்டு சிலரால் உருவாக்கப்பட்டது. அதை அனைத்து மனிதர்களும் நம்பும் விதமான விசயங்கள் அவர்களிடத்தில் புகுத்தப்பட்டது. இன்று நாம் அத்தகைய பொருளாதார உலகத்தில் புழுக்களாக வாழுகிறோம்.

இந்த பொருளாதார உலகத்தின் சூழ்ச்சி என்ன தெரியுமா? இதுதான் எல்லை என நீங்கள் ஒரு இடத்தை கஷ்டப்பட்டு அடைந்தால், தம்பி இது கடைசி எல்லை இல்லை, நீ அடைய வேண்டிய எல்லை அங்கே இருக்கிறது பார் வேகமாக ஓடு என ஓய்வே எடுக்கவிடாமல் சாகும் வரை மனிதனை ஓட வைக்கும் அளவிற்கு நீளமானது அந்தப்பட்டியல். சிலர் இதை உணர்ந்திருந்தாலும் கூட உலகின் பெரும்பகுதி இந்தப்பாதையில் ஓடும் போது அவர்களால் இதைவிட்டு விலக முடியவில்லை. துணிந்து விலகினாலும் அவர்கள் ஏமாளிகளாக கோமாளிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

இதுதான் கொடுமையென்றால், நானே மிகப்பெரியவன் எனக்கூறி வளங்கள் இருக்கும் நாடுகளை சுரண்டி சின்னாபின்னமாக்கி வெறும் எலும்புக்கூட்டினை அங்கிருக்கும் ஏழைகளுக்கு விட்டுச்செல்கின்றன வல்லரசு நாடுகள். தனி மனிதன் அவனால் இயன்றவரை பிறரை ஏமாற்றியோ மிரட்டியோ சூறையாடுகிறான். பெரிய நாடுகளோ அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவது, மிரட்டுவது என செய்து சூறையாடுகின்றன. இதெல்லாம் தவறில்லையா என கேட்டால் அனைவரும் ஒரு பதிலை வைத்திருப்பார்கள். “சக்தி மிக்கவர்கள் வாழுவதற்கு அனைத்து உரிமையும் உண்டு” அதாவது காட்டில் புலியானது மானை வேட்டையாடுவது தவறல்ல, அதுபோலவே வலிமை மிக்க மனிதன் இன்னொரு மனிதனை ஏமாற்றுவதோ மிரட்டுவதோ தவறில்லை என்பதுதான். ஆனால் மிருகங்களுக்கு சிந்திக்க தெரியாதே, மனிதன் சிந்திப்பானே என்றால் …காதுகள் மூடிக்கொள்ளும்.

ஆனால் இயற்கை ஒவ்வொரு முறையும் மனிதர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டு தான் இருக்கிறது. நாம் அதை இயற்கை சீற்றங்கள் என ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் அவை வெறுமனே இயற்கை சீற்றங்கள் அல்ல, மனிதத்துவதை உணர்ந்துகொள்ளவும் எதுவும் நிரந்தரமில்லை என்பதனை புரிந்துகொள்ளவும் இயற்கை நமக்கு எடுக்கிற பாடம் தான் அந்த இயற்கை சீற்றங்கள். இயற்கை சீற்றங்கள் வந்தபோது நாம் அழிவினை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் எத்தனை பேருக்கு இவ்வளவு தான் வாழ்க்கையா என்ற பேருண்மையை உணர்த்தி இருக்கிறது என்பதை நாம் பார்ப்பதில்லை.

எத்தனை தொண்டு செய்யும் உள்ளங்களை ஒவ்வொரு இயற்கை சீற்றமும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் பார்ப்பதில்லை. நமக்கு தான் ஓடவே நேரம் சரியாக இருக்கிறதே. கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஒன்று உலகத்தை முடக்கிவைத்திருக்கிறது. இப்படியொன்று நடக்குமா என எவரும் கணித்திருக்கவே முடியாது, ஆனால் நடக்கிறது. பெரும் பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினர் என எந்தவித பாகுபாடும் இல்லை. ஏழைக்கு எட்டாத கேளிக்கை விடுதிகள், சினிமா தியேட்டர்கள் போன்றவை இன்று மூடப்பட்டு இருக்கின்றன. இன்னும் சில மாதங்கள் நீடித்தால் இன்று பணக்காரர் என நம்பிக்கொண்டிருக்கும் பலர் ஏழைகளாக மாறிப்போவார்கள்.

இந்தப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2 லட்சத்து 44 ஆயிரத்து 780 பேர் இறந்திருக்கிறார்கள். எண்ணிக்கையாக பார்க்கும் போது இதன் வலிகளை பெரிதாக உணராமல் நம்மால் கடந்துபோக முடிகிறது. ஆனால் இறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களுக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அவை மட்டும் நமக்கு தெரிந்தால் நாம் அனைவருமே மன நோயாளிகளாக மாறிப்போவோம். இதில் எவருமே இப்படியொரு நிலை வந்து இறந்துபோவோம் என நினைத்திருக்கவே மாட்டார்கள். ஆனால் நிச்சயம் இல்லாதது தானே வாழ்க்கை, அதைத்தான் இந்தப்பதிவில் நான் கூற விரும்புகிறேன்.

நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வோம். ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. எத்தனை பங்களாக்களில் சோகங்களோடு இரவில் தூங்குகிறார்கள், மிகப்பெரிய கார்களில் எத்தனை பணம் படைத்தோர் மன அழுத்தத்தோடு பயணிக்கிறார்கள் என அவர்களுக்கே தெரியும். ஆனால் உண்மையை நாம் உணராமல் அங்கே செல்ல முயற்சிப்போம். போதும், ஓடியது போதும். நிம்மதியாக வாழுவதற்கு இதுபோதும் என உங்களுக்கு தோன்றுகிறவரை ஓடுங்கள். பிறகு நின்றுவிடுங்கள், இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ பழகுங்கள்.

இங்கே பத்தாயிரம் சம்பாதிப்பவர்களும் வாழுகிறார்கள், பத்து லட்சம் சம்பாதிப்பவர்களும் வாழுகிறார்கள். ஆகவே பணம் எப்போதுமே பொருட்டல…காலம் அதுவே மிக முக்கியம். இவ்வளவு தான் வாழ்க்கை – புரிந்துகொள்வோம். 


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version