Site icon பாமரன் கருத்து

ஈரான் – அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? | Iran – US Problem Explained in tamil

ஈரான் - அமெரிக்கா தலைவர்கள்

ஈரான் - அமெரிக்கா தலைவர்கள்

நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது ஈரான், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க போர் நிலைகளின் மீது வான்வெளி ஏவுகனை தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தாக்குதல் ஈரான் போர்த்தளபதி காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி என சொல்லப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா தலைவர்கள்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சிக்கல் இருந்து வருவதனை அனைவருமே அறிந்திருப்போம். இந்த சிக்கல்களும் மோதல்களும் இன்று நேற்று அல்ல, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. ஈரான் அமெரிக்கா இடையிலான இந்த போர்ப்பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு இட்டுச்செல்லுமா என உலகமே அச்சத்தில் இருந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. காரணம், அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற நாடுகளில் ஈரானும் ஒன்று. அந்த நாடு தாக்கப்பட்டால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு ஏற்படும், பொருளாதாரம் பாதிக்கப்படும் .

 

இந்தப்பதிவில் இயன்றவரையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எங்கு பிரச்சனை துவங்கியது முதற்கொண்டு பல தகவல்களை கொடுத்திருக்கிறேன்.

பிரச்சனை துவக்கம் : முகமது மொசாதேக் ஆட்சி கவிழ்ப்பு

 

1951 முதல் 1953 வரை ஈரானின் பிரதமராக முகமது மொசாதேக் பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானது எண்ணெய் தொழில் துறையை முழுவதுமாக தேசியமயமாக்குவது [அரசுடமை ஆக்குவது] என்பதாகும். அப்போது அமெரிக்க புலனாய்வுத்துறை மற்றும் பிரிட்டன் புலனாய்வுத்துறை உந்துதலின் அடிப்படையில்  ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் கிளப்பி விடப்பட்டன. இதனால் முகமது மொசாதேக் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இப்போதே ஈரான் – அமெரிக்கா இடையே கசப்பான உறவு துவங்க ஆரம்பித்துவிட்டது. 

ஈரான் இஸ்லாமிய குடியரசு

மொசாதேக் ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு அமெரிக்க ஆதரவு முகமது ரெசா பஹ்லேவி ஆட்சி செய்தார். ஆனால் 1979 களின் துவக்கத்தில் ஆட்சிக்கு எதிராக நடந்த பெரும் வன்முறைகளும் போராட்டங்களும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றின. இது நடந்து சில வாரங்களில் அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்ட முஸ்லீம் மத தலைவராக இருந்த அயதுல்லா கோமெய்னி ஈரான் திரும்பினார். ஏப்ரல் 01, 1979 அன்று ஈரான் இஸ்லாமிய குடியரசு உருவானது.


அமெரிக்க பிணைக்கைதிகள்

 

1979 ஆம் ஆண்டு தெஹ்ரானில் இருக்கும் அமெரிக்க தூதரகம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டு அங்கிருந்தவர்கள் ஈரானில்  பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர், இது 444 நாட்களுக்கு நீடித்தது. இவர்களை விடுவிக்க அமெரிக்கா ஈரானை வலியுறுத்தி வந்தது. இதற்காக ஈரான் நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட பயணிகளோடு சென்ற ஈரான் பயணிகள் விமானத்தை அமெரிக்கா போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்கா சார்பில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஹோர்முஸ் ஜலசந்தி மூடல்

கடல் வழியாக நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதியில் 90% ஹோர்முஸ் ஜலசந்தி எனும் பகுதியின் வாயிலாகவே நடைபெறுகிறது. ஈரான் ஆதிக்கம் செலுத்துகிற ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் பல்வேறு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்காவின் நிர்பந்தப்படி ஈரான் நாட்டு எண்ணெய்யை பிற நாடுகள் வாங்காமல் போனால் மற்ற நாடுகளின் எண்ணெய் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் அந்த வழியை மூடி விடுவோம் என அச்சுறுத்துகிறது ஈரான். ஈராக், குவைத், சௌதி அரேபியா, பக்ரைன் , கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் இந்த வழியை பயன்படுத்துகின்றன. 

 

அப்படி ஹோர்முஸ் ஜலசந்தி வழியை மூடினால் தாக்குதல் தொடுப்போம் என அமெரிக்காவும் கூறி வந்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் பிரச்சனைக்கு மிக முக்கியக்காரணம் “எண்ணெய்” “எண்ணெய்” “எண்ணெய்” .


ஒபாமா – ட்ரெம்ப்

2013, ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருக்கும் போது ஹசன் ரூஹானி ஈரானின் புதிய அதிபராக பதவியேற்றார். அதன் பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ரூஹானி இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். பெரிய வரலாற்று நிகழ்வுபோல இந்த உரையாடல் கருதப்பட்டது. காரணம், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மேல்மட்ட தலைவர்கள் பேசிகொண்டுள்ளனர். 

 

இந்த உரையாடலுக்கு பிறகு ஈரான் சில விசயங்களுக்கு ஒப்புக்கொண்டது. அணுஆயுத தயாரிப்பு பணிகளை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் , சீனா , ரஷ்யா , ஜெர்மனி ஆகிய பெரும் நாடுகளுடன் இணைந்து பயணிக்க ஒப்புக்கொண்டது. அதேபோல பணிகளை குறைத்துக்கொள்வதோடு வெளிநாட்டு பார்வையாளர்கள் பார்வையிடவும் அனுமதி அளித்தது. 

 

2018 ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக வந்த பிறகு பிரச்சனை மீண்டும் ஆரம்பித்துவிட்டது. பொருளாதார தடைகள் நீக்கப்படுவதில் பின்னடைவு ஏற்பட்டது. ஈரானுடன் மேற்கொண்டிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தையும் டிரம்ப் நீக்கிவிட்டார். மேலும் பிற நாடுகளும் ஈரானிடமிருந்து எண்ணெய்யை வாங்க கூடாது என கட்டளையிட்டார். அதற்கு ஒப்புக்கொள்ளாத நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். விளைவு, ஈரான் நாணய மதிப்பு வெகுவாக சரிந்தது. 

 

2019 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஓமன் வளைகுடாவில் சென்ற கப்பல்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா கூறியது, ஈரான் மறுத்தது. 

 

2019 ஜூனில், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பறந்ததாக அமெரிக்க ட்ரோன் ஒன்றினை சுட்டு வீழ்த்தியது ஈரான். ஆனால் சர்வதேச கடல் பகுதியில் மட்டுமே பறந்ததாக அமெரிக்கா கூறியது. 

ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை

 

ஈரான் ராணுவத்தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். பின்னர் இதற்கு பதிலடியாக ஈரான், ஈராக் நாட்டில் இருக்கும் அமெரிக்க படைகள் இருப்பிடத்தை நோக்கி ஏவுகணைகளைக்கொண்டு தாக்குதல் நடத்தியது . பிறகு இனி தான் நடக்கும்….

எண்ணெய்க்காக நடத்தப்படும் அரசியல்

ஈராக் நாட்டில் அமெரிக்கா நடத்திய போராக இருக்கட்டும் தற்போது ஈரான் மீது போர் நடத்திட முயல்வதாக இருக்கட்டும் அனைத்துமே எண்ணெய் என்ற ஒரு பொருளுக்காகத்தான். தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் , அணு ஆயுதத்திற்கு எதிராக நடவெடிக்கைகளை எடுக்கிறோம் என எத்தனை காரணங்களை கூறினாலும் முதன்மையான காரணம் என்னவோ எண்ணெய் தான்.


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version