பயிற்சி பெற்ற தேசிய குத்துச்சண்டை வீரர், குத்துச்சண்டைக்கு பயிற்சி அளிக்கவும் டிப்ளமோ படிப்பை முடித்தவர் என்ற பல தகுதிகள் இருந்தாலும் கூட அபித் கான் ஆட்டோ ஓட்டியே தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என அபித் கான் பற்றிய வீடியோ வெளியாக, ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் இருக்கும் இணையவாசிகள் அபித் கானுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அவரது தகுதிக்கு சரியான வேலை அவருக்கு கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர். வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அவருக்கு பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் என்றால் பொதுவாக நம் நினைவுக்கு வருகிறவர்கள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே. அது தவிர பிற விளையாட்டு வீரர்களை நமக்கு பெரிதாக தெரிவது கிடையாது. உதாரணத்திற்கு, அண்மையில் பிரபல்யமடைந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை தெரிந்தவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களை தெரிந்து இருப்பது இல்லை. இதனால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே பெரிதும் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் பல விதங்களில் வருமானம் வருகிறது. அதன்படி வருமானம் என்பது போட்டிகளில் பங்கேற்பதனால் கிடைக்கும், பதக்கம் வெல்வதனால் கிடைக்கும். இதுதவிர பெரிய வருமானம் கிடைப்பதென்பது விளம்பரம் மூலமாகத்தான்.
கிரிக்கெட் விளையாட்டிலோ அல்லது மிக சொற்பமான வீரர்களுக்கோ மட்டும் தான் விளையாடி ஓய்வு பெற்ற பின்னரும் கூட விளம்பர வாய்ப்புகள் மற்றும் பயிற்சியாளர் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆகவே அவர்களால் ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையை நடத்துவது என்பது எளிதான காரியமே. ஆனால் பிற வீரர்களுக்கு வாழ்க்கை சிம்ம சொப்பனமாக மாறிவிடுகிறது. அவர்கள் எந்த அளவிற்கு விளையாட்டை ரசித்து விளையாடினார்களோ அந்த அளவிற்கு அந்த விளையாட்டை ஏன் விளையாடினோம், இதற்குப்பதிலாக வேறு விளையாட்டையோ அல்லது படித்திருந்தாலோ நல்ல விதமாக வாழ்க்கை அமைந்திருக்குமோ என நினைக்கும் சூழலுக்கு போய் விடுகிறார்கள்.
அபித் கான் வீடியோ
அப்படியொரு கதை தான் அபித் கான் என்ற தேசிய குத்துசண்டை வீரரின் கதை. பஞ்சாபை சேர்ந்தவரான அபித் கான் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர், அதேபோல 1988 – 1989 காலகட்டங்களில் பயிற்சியாளர் ஆவதற்கும் டிப்ளமோ படித்துள்ளார். அதற்கடுத்து 5 ஆண்டுகள் ராணுவ அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இருந்தும் அவர் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை விரிவாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு மட்டுமல்ல தன்னைப்போன்ற பலருக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் கான், பிற இளைஞர்கள் விளையாட்டை முதன்மையான விசயமாக எடுத்துக்கொள்வதை தான் ஊக்குவிப்பது இல்லை என குறிப்பிடுகிறார்.
இணையத்தில் கான் வீடியோவை கண்ட பலரும் அவருக்காக மனம் வருந்தி கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். அவருக்கு தகுதியான வேலை கிடைக்க வேண்டும் என்றும் அவரைப்போன்ற பலரும் அடையாளம் காணப்பட்டு யாரேனும் உதவிட வேண்டும் எனவும் கான் அவர்களுக்கு பண உதவி செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டார்கள். இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் தெரிவிக்கும் போது பிறரின் பணத்தை கான் ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டார்.உதவ விருப்பமுள்ளவர்கள் அவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவலாம் என குறிப்பிட்டார்கள்.
கிடைத்த உதவி
இணையம் எப்போதுமே சாமானியர்களின் பக்கமே நின்றுள்ளது, அதனை சரியாக பயன்படுத்தும் தருவாயில். ஆமாம், அபித் கான் அவர்களின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனதைத் தொடர்ந்து அவர் மீதான கவனம் அதிகரிக்கத்துவங்கியது. அவருக்கு உதவ பலர் முன்வந்தார்கள். குத்துச்சண்டை பிரிவில் ஈடுபட்டு வரும் நபர்கள், இளம் குத்துச்சண்டை வீரர்கள், குறிப்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜயேந்த்ர சிங், மனோஜ் மற்றும் பல நல்ல உள்ளங்கள் இணைந்து அபித் கானை மீண்டும் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆக்கியுள்ளார்.
அதே யூடியூப் சேனனில் இந்த வீடியோ அடுத்ததாக பகிரப்பட்டுள்ளது. திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் :
திறமை துறைக்கு ஏற்றவாறு கையாளப்படக்கூடாது. ஒருவேளை அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவினால் அதனை தவிர்ப்பதற்கு ஆன முயற்சிகளை அரசாங்கம் மற்றும் உதவிடும் எண்ணம் உள்ள நல்லவர்கள் இணைந்து உருவாக்கிட வேண்டும். உதாரணத்திற்கு, கபடி, கால்பந்து, கைப்பந்து, நீச்சல், தடகளம் உள்ளிட்ட பல பிரிவுகளில் உள்ள ஏராளமானவர்கள் அடையாளம் காணப்பட்டு வாழ்வாதாரம் செழிக்க உதவி செய்திட வேண்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!