Site icon பாமரன் கருத்து

உன் ரத்தத்தை கொடு, சுதந்திரத்தை தருகிறேன் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

nethaji subash chandra boss

nethaji subash chandra boss

“இளைஞர்களே உங்கள் ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்” என உணர்ச்சி பொங்க முழங்கிய முழக்கம் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்”. ஜனவரி 23, 1897 நாள் பிறந்த நேதாஜிக்கு இது 122 ஆம் பிறந்ததினம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த முடிவு செய்திட்ட நேதாஜி அவர்கள் “இளைஞர்களே உங்கள் ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்” என உணர்ச்சி பொங்க முழங்கிய முழக்கம் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது.

இன்றும் மிகப்பெரிய இளைஞர் கூட்டத்திற்கு நேதாஜி மிகவும் பிடித்த நபராக இருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

ஒரிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் பிறந்தார், சுபாஷ் சந்திர போஸ். நல்ல மாணவராக இருந்த சுபாஷ் நாட்டின் மீது அக்கறை கொண்டவராக திகழ்ந்தார். இதனை கவனித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தந்தையார் ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு அனுப்பி வைத்தார். இப்போதைய ஆட்சியருக்கு இணையான படிப்பான அந்த தேர்வில் நான்காவது மாணவராக இந்தியாவில் இருந்து தேர்ச்சி பெற்று இருந்தாலும் அந்நியரின் கீழ் வேலை செய்வதா என எண்ணி “பணி துறப்பு” செய்துவிட்டு இந்தியா வந்தார்.

ஏற்கனவே ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று இருந்த சி. ஆர். தாஸ் நேதாஜிக்கு ஆதரவு அளித்தார். தான் நிறுவிய “தேசியக் கல்லூரியின்” தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார். இளைஞர்களை தன் பக்கம் ஈர்க்க இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

ஜான்சி ராணிப் படை

ஒருபக்கம் மகாத்மா காந்தி அமைதியான முறையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் மறுபக்கம் நேதாஜி அவர்கள் ஆயுதம் தாங்கிய படை இயக்கத்தின் மூலமாக ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அப்படி அமைந்த படைகளில் மிக முக்கியமானது ஜான்சி ராணிப் படை.  18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படைப்பிரிவில் வயது அதிகமுள்ள பெண்களும் தங்களின் விருப்பத்தின் பேரில் உண்மையை மறைத்து இணைந்ததாக கூறப்படுகிறது. ஒருசமயம், பெண்கள் படை கூடாரத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த நேதாஜியை தடுத்த பெண் அதிகாரி கோவிந்தம்மாளுக்கு, அப்படையின் உயரிய விருதான “லாண்ட்சு நாயக்” விருது வழங்கி கௌரவித்தார். இது பெண்களுக்கும் வீரத்திற்கும் அவர் கொடுத்த மரியாதைக்கு சான்று.

நேதாஜி ஒரு ரியல் ஹீரோ

அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிய காந்தி அவர்கள் இந்தியாவை நேசித்ததற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இந்தியாவை நேசித்தவர் நேதாஜி. காந்தி அமைதி பேர்வழி என்றால் நேதாஜி அதிரடி பேர்வழி. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய டயர் எனும் ஆங்கிலேயனை உத்தம் சிங் சுட்டுக்கொல்லப்பட்டபோது காந்தி உத்தம் சிங்கை கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் மறுபக்கம் உத்தம் சிங்கை பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி.

இன்றும் துடிப்பான ஒரு இளைஞருக்கு “நேதாஜி” அவர்கள் உதாரணமாக திகழ்வதற்கு காரணம் அவருடைய துணிச்சலான செயல்களே காரணம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தி அவர்களுக்கு எந்தவிதத்திலும் குறையாத பங்கு நேதாஜி அவர்களுக்கும் உண்டு.

நேதாஜி மர்ம மரணம் விளக்கப்பட வேண்டும்

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிர் இழந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை, அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்றது தைவான் அரசு. நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.

நேரு ஆட்சியில் அமைக்கப்பட்ட 3 நபர்கள் ஆணையம், இந்திராகாந்தி ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், வாஜ்பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட முகர்ஜி ஆணையம் என ஆணையங்கள் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டே போனாலும் இதுவரை நேதாஜி போன்ற மகத்தான தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது இந்திய மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. வருத்தத்திற்கு உரிய செய்தியும் கூட.

வரலாறு, அரசியல் காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக மறைக்கப்பட்டாலும் கூட நேதாஜி பூமி உள்ளவரை இந்திய இளைஞர்களின் மனதில் எழுச்சி தீயாக இருந்துகொண்டே இருப்பார்.

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version