Site icon பாமரன் கருத்து

பிரம்மானந்தம் : வறுமை முதல் கின்னஸ் சாதனை வரை எழுச்சியூட்டும் வாழ்க்கை வரலாறு

பிரம்மானந்தம் வாழ்க்கை வரலாறு

நம்மையெல்லாம் இன்று நகைச்சுவையால் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் பிரம்மானந்தம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வந்தவர், இன்று கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு மாபெரும் நடிகராக உயர்ந்துள்ளார்.

பிரம்மானந்தம் மிகவும் பிரபலமான தெலுங்கு நகைச்சுவை நடிகர். தமிழ் திரைப்பட உலகிலும் கூட இவரது நகைச்சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக நடிக்கக்கூடியவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு பெரிய நடிகராக வளம் வந்துகொண்டிருக்கும் பிரம்மானந்தம் அவர்களின் வெற்றிக்கதை அனைவரையும் உற்சாகமாக வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும்.

கன்னேகண்டி பிரம்மானந்தம் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளிக்கு அருகிலுள்ள முப்பல்லாவில் உள்ள சகந்தி வாரி பாலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதில் வறுமையில் வாடினார். பிரம்மானந்தத்தின் தந்தை, மறைந்த நாகலிங்கச்சாரி, தச்சுத் தொழிலாளியாகவும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவராகவும் இருந்தார். இவரது தாயார் லட்சுமிநரசம்மா. பிரம்மானந்தத்திற்கு ஏழு உடன்பிறப்புகள், ஐந்து சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். இவர் இரண்டாவது இளைய சகோதரர்.

வாட்டிய வறுமை

தந்தையின் சொற்ப வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை. அதனால், பிரம்மானந்தம் தனது குழந்தைப் பருவத்தில் வறுமையுடன் போராடினார். ஒருமுறை, தீபாவளியின் போது, அவரது தந்தை தனது குழந்தைகளுக்கு பட்டாசுகளை வாங்க முடியவில்லை. ஆனால் பிரம்மானந்தம் மற்றும் அவரது உடன்பிறப்புகள் பட்டாசுக்காக விடாப்பிடியாக இருந்ததால், அவரது தந்தை தனது முதலாளியிடம் பணம் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதலாளியிடம் பணம் கேட்க தனது அப்பா போகும் போது அவருடன் பிரம்மானந்தமும் சென்றார்.முதலாளியிடம் பணம் கேட்பதில் தனது அப்பா பட்ட கஷ்டத்தையும் போராட்டத்தையும் தயக்கத்தையும் கவனித்தார் பிரம்மானந்தம். அந்த தருணத்தில் தான், அவர் வறுமையின் அர்த்தத்தையும் பணத்தின் உண்மையான மதிப்பையும் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வெறும் வயது 8.

விரிவுரையாளரில் துவங்கி சினிமா வரை


பிரம்மானந்தம் சட்டெனப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார், 1968 இல், அவர் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை (PUC) படித்தார். ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் உள்ள தந்துலூரி நாராயண ராஜு கல்லூரியில் (டிஎன்ஆர்) பட்டம் பெற்றார். பின்னர், பிரம்மானந்தம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்ஏ) படித்தார். கல்வியை முடித்துவிட்டு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அத்திலி என்ற கிராமத்தில் தெலுங்கு விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பிரம்மானந்தம் விரிவுரையாளராக பணியாற்றினாரா என ஆச்சர்யமாக இருக்கிறதா?

சிறுவயதில் இருந்தே பிரம்மானந்தமுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. அதிலே பல மெடல்களையும் வாங்கியிருந்தார். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சமயத்திலும் கூட தனது நகைச்சுவையால் பலரை சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தார்.

பிரம்மானந்தம் பிப்ரவரி 1, 1985 இல் ஸ்ரீ தடவதாரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். சத்யநாராயணா வெஜெல்லா இயக்கிய இந்தப் படம் 1988 இல் வெளியானது. இந்த படத்தில் நடித்த பிறகு, பிரம்மானந்தம் தனது நடிப்பு வாழ்க்கை குறித்து உறுதியாக தெரியாததால், தனது நடிப்பு வாழ்க்கையை கைவிட்டு மீண்டும் தெலுங்கு விரிவுரையாளராக பணியாற்ற நினைத்தார்.

ஆனால் நல்ல வேளையாக இவருடைய திறமையை அடையாளம் கண்டு தனது படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ஜந்தியாலா. அதேபோல், பிரம்மானந்தம் தனது இரண்டாவது படமான சத்தியாகிரகத்தில் நடித்தார், அவர் ஜந்தியாலாவின் சிஷ்யரானார்.

சாந்தப்பாய் படத்தின் படப்பிடிப்பின் போது, பிரபல நடிகரான சிரஞ்சீவியுடன் பிரம்மானந்தம் அறிமுகமானார். அவர் தனது மிமிக்ரி திறமையை அவரிடம் வெளிப்படுத்தினார், இதனால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே, சிரஞ்சீவி பிரம்மானந்தத்தை சென்னைக்கு வரவழைத்து, அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகளைப் பெற உதவுவதாக உறுதியளித்தார்.ஜந்தியாலா, சிரஞ்சீவி மற்றும் டி. ராமாநாயுடு ஆகிய மூன்று பேர் அவரது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்க அவருக்கு உதவினார்கள்.

கின்னஸ் உலக சாதனை

பிரம்மானந்தம் தனது முதல் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வம்சி பெர்க்லியிடம் இருந்து அஹா நா-பெல்லன்டாவில் [Aha Naa-Pellanta] நடித்ததற்காக பெற்றார். அவருக்கு இந்த விருதை திலீப்குமார் வழங்கினார். பின்னர் பிரம்மானந்தம் பல விருதுகளை வென்றார். ஜனவரி 2009 இல், அவர் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

பிரம்மானந்தம் ஆறு மாநில நந்தி மற்றும் ஆறு சினிமா விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது மற்றும் மூன்று தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றார்.

24 ஜூன் 2010 அன்று, அதிக திரைப்படங்களில் நடித்த வாழும் நடிகர் என்ற கின்னஸ் சாதனையை பிரம்மானந்தம் படைத்தார்.அப்போது அவர் 857 படங்களில் நடித்திருந்தார். டிசம்பர் 2021 நிலவரப்படி, பிரம்மானந்தம் மொத்தம் 1154க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனது 35 ஆம் வயதுகளில் நடிப்பின் உச்சத்தில் இருந்தார். இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளவது என அதிக வேலைப்பளுவில் இருந்தார். இதனால் இவருக்கு சில உடல் குறைபாடுகள் ஏற்பட்டது. 2019 இல் பெரிய அளவில் உடல் குறைபாடுகள் ஏற்பட்டதன் விளைவாக இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்கிறார்.

பிரம்மானந்தம் அவர்களின் மனைவி லட்சுமி கண்ணேகண்டி, இந்த தம்பதியருக்கு ராஜா கௌதம் கன்னேகண்டி மற்றும் சித்தார்த் என இரண்டு மகன்கள் உள்ளனர்.கௌதமும் ஒரு நடிகர்தான்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம், நரேந்திர மோடி, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் பிரம்மானந்தத்தின் தூண்டுதலாக உள்ளனர். பென்சில் ஓவியங்கள் வரைவது, கார்ட்டூன்கள் வரைவது, களிமண் பொம்மைகள் செய்வது மற்றும் பேரக்குழந்தையுடன் விளையாடுவது இவரது பொழுதுபோக்கு. 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Exit mobile version