அவளை ஹாக்கி விளையாட அனுமதித்தால் டீஷர்ட், குட்டைப்பாவாடை அணிவாள் உங்களுக்கு கெட்டபெயர் தான் வந்து சேரப்போகிறது என்று பெற்றோரிடம் சொன்ன அதே சொந்தக்காரர்கள் இன்று ராணி இந்தியாவின் பெருமை என சொல்கிறார்கள் அவர்களது குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள் – ராணி ராம்பால்
இந்தப்பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது [பிப்ரவரி 2020] இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருப்பவர்தான் ராணி ராம்பால். கூடுதலாக, 2019 ஆம் ஆண்டிற்க்கான கௌரவமிக்க உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதை (வோ்ல்ட் கேம்ஸ் அதலெட் ஆஃப் தி இயா்) தற்போது வென்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். உலக அளவில் இவ்விருதினை பெரும் முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமை ராணி ராம்பால் அவர்களையே சாரும். பல்வேறு போட்டிகளில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்ற ராணி ராம்பால் அவ்வளவு எளிதாக ஹாக்கி விளையாட வந்துவிடவில்லை, பல்வேறு தடைகளை தாண்டிதான் அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கைப்பதிவு பல பெண்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்தப்பதிவை எழுதுகிறேன்.
ராணி ராம்பால் – இளமைப்பருவம்
டிசம்பர் 04,1994 அன்று ஹரியானாவில் இருக்கும் ஷஹாபாத் மார்க்கண்டா எனும் சிறு நகரில் தான் ராணி ராம்பால் பிறந்தார். ராணி ராம்பால் அப்பா வண்டி இழுக்கும் கூலித்தொழிலாளி, அவருக்கு இரண்டு அண்ணன்கள் உண்டு. அவர்களும் மெக்கானிக் மற்றும் கார்பெண்டர் வேலைதான் பார்த்துவந்தனர். அந்தகாலகட்டத்தில் பெண் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது அரிது. ஆனால் அப்போது அங்கு ஒரு வசதி இருந்தது, பெண் குழந்தைகளுக்கு ஹாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்சிக்கூடம் அந்த நகரில் செயல்பட்டுவந்தது. அங்கிருந்துதான் பல பெண் ஹாக்கி வீராங்கனைகள் இந்தியாவிற்கு விளையாட வந்திருக்கிறார்கள்.
ஹாக்கி விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ராணிக்கு ஏற்பட்டது. ஆனால் பெற்றோரிடம் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் அவர்கள் ராணி ராம்பாலை விளையாடஅனுமதிக்கவில்லை . ஒருபக்கம் வறுமை இதற்கான காரணமாக இருந்தாலும் கூட பெண் குழந்தையை விளையாட அனுமதித்தால் சுற்றுப்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் தான் பெற்றோருக்கு இருந்தது. அதற்கு ஏற்றார் போலவே அடிக்கடி அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் “நீங்கள் மட்டும் உங்களது மகளை ஹாக்கி விளையாட அனுமதித்தால் அவள் டிஷர்ட், குட்டைப்பாவாடை அணிந்து விளையாடுவாள், உங்களது குடும்ப மரியாதையே போய்விடும்” என கூறிவந்தார்கள். ஆனாலும் ராணி ராம்பால் தனது குடும்பத்தாரிடம் வற்புறுத்திக்கொண்டே வந்தாள்.
சரி போய் விளையாடு என்று பெற்றோரை சொல்லவைக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு புரியவைக்க வேண்டியதாயிற்று என்று சொல்கிறார் ராணி ராம்பால். அது அவர்களுடைய தவறும் இல்லை. இப்போது பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை விளையாட தயங்காமல் அனுப்புகிறார்கள். அதற்கு காரணம் ராணி ராம்பால் போன்ற வீராங்கனைகள் விளையாட்டில் சாதித்தது தான்.
ஹாக்கி அணியில் ராணி ராம்பால்
பெண்களுக்கு மிகச்சிறப்பாக பயிற்சி அளிக்கும் அகாடமி என்று இன்று அறியப்படுகிற ஷாஹாபாத் ஹாக்கி அகாடமி தான் ராணி ராம்பால் ஹாக்கி நோக்கி நகரவும் காரணமாக அமைந்தது. ஆரம்பகாலகட்டத்தில் ராணி ராம்பாலுக்கு இருந்த ஒரே ஒரு கனவு எப்படியேனும் இந்திய அணிக்காக விளையாடிவிடவேண்டும் என்பதுதான். ஹாக்கி பேட்டை ராணி எடுத்தபோது அவருக்கு வயது 7. அதற்கடுத்து 8 ஆண்டுகள் கழித்து முதல் சர்வதேச போட்டியில் கலந்துகொண்டார். ரஷ்யாவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டிதான் அது. அந்தப்போட்டியில் இந்தியா வெற்றிபெறவில்லை. ஆகையால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்திருந்தது இந்தியா.
அந்தப்போட்டியில் நான் மூத்த வீராங்கனைகளுடன் விளையாடினேன். போட்டியில் தோல்வி அடைந்தபிறகு அவர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு வருத்தத்தோடு இருந்தார்கள். காரணம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போய்விட்டது என்பதனால். ஆனால் அப்போது ஒலிம்பிக் போட்டி குறித்தும் அதில் விளையாடுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆகவே தனது கனவான இந்தியாவிற்காக விளையாடிவிட்டோம் என்கிற மனநிறைவோடு தான் நான் இருந்தேன் – ராணி ராம்பால்
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியோடு நீண்ட பயணம் மேற்கொண்டிருந்த தருணம். மீண்டும் டெல்லியில் நடந்த ஒலிம்பிக் தகுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோது தனக்கு அந்த வலி ஏற்பட்டதாக நினைவு கூறுகிறார் ராணி ராம்பால். 2015 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் நடந்த போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறியதனால் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் தகுதியை இந்தியா பெற்றது. 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அப்போதுதான் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தது.
இந்திய அணியின் கேப்டன் – ராணி ராம்பால்
இந்திய அணியுடன் விளையாடுவது பெருங்கனவு என நினைத்துக்கொண்டிருந்த ராணி ராம்பாலுக்கு 2017 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியை வழிநடத்தும் பொறுப்பு தேடிவந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறப்பாக இந்திய அணியை வழிநடத்திச்சென்றார் ராணி.
தனது நாட்டின் அணியை வழிநடத்தி செல்வது என்பது பெருமைக்கு உரிய விசயம் – ராணி ராம்பால்
அவரது சிறப்பான செயல்பாட்டை பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவப்படுத்தியது. கூடுதலாக, 2019 ஆம் ஆண்டிற்க்கான கௌரவமிக்க உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதை (வோ்ல்ட் கேம்ஸ் அதலெட் ஆஃப் தி இயா்) தற்போது வென்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். உலக அளவில் இவ்விருதினை பெரும் முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமை ராணி ராம்பால் அவர்களையே சாரும்.
ராணி ராம்பால் ஒரு ரோல்மாடல்
இன்று பல பெண் குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்படுகிறாரகள். அப்படியொரு வாய்ப்பு கிடைக்காதபட்சத்திலும் தனது கனவை தனது பெற்றோருக்கு புரியவைத்து அவர்களின் அனுமதியுடனேயே கனவை நிறைவேற்றுவது எவ்வளவு பெரிய சாதனை. இதைத்தான் இன்றைய குழந்தைகள் ராணி ராம்பால் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். தடைகள் ஆயிரமிருப்பினும் உங்களுடைய கனவை விரட்டிடுங்கள். அந்தக்கனவு நிச்சயம் உங்களுக்கு வெற்றியையும் புகழையும் பெற்றுத்தரும். அதற்கு ராணி ராம்பால் வாழ்க்கையே சாட்சி.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!