Site icon பாமரன் கருத்து

நாம் தவறவிட்ட மூன்று சுதந்திரம் | Independence Day Message 2018

 

“பல ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டோம். இந்த நள்ளிரவில் உலகமே உறங்கிக்கொண்டிருக்கிறது , இந்தியா புதிய சுதந்திர வாழ்வில் விழிக்க போகிறது”
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த ஆகஸ்டு 14 , 1947 நள்ளிரவு பாரத பிரதமர் நேரு அவர்கள் மிகுந்த உணர்ச்சியோடு பேசிய வார்த்தைகள் அவை .
அந்த வார்த்தைகளை இப்போது படிக்கும்போது மிகச்சாதாரணமாக தோன்றலாம் . ஆனால் அந்த வார்த்தையின் ஒவ்வொரு எழுத்துக்கு பின்னாலும் எண்ணற்ற இந்திய முன்னோடிகளின் ரத்தமும் உயிர் தியாகமும் காய வடுக்களும் அடங்கி இருக்கின்றன .
அந்த வலியை அப்போது பேசிய நேரு உணர்ந்திருந்தார் . அவருடைய பேச்சைகேட்டுக்கொண்டிருந்த இந்திய மக்களும் உணர்ந்திருந்தனர் . காரணம் அடிமைகளாக அடிகளையும் அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கண்டவர்கள் , அனுபவித்தவர்கள் அவர்கள். ஆகையால் தான் வலியோடு நேருவின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தனர் . அந்த வலிகளின் நினைவுகளோடு  சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
72 வது சுதந்திர தினம்
ஆனால் நாம் இன்று அந்த சுதந்திரத்தை பேணிக்காக்கிறோமா ? அதன் முக்கியத்துவத்தினை உணர்த்திருக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை .

வாக்களிக்க சளிப்படையும் மக்கள் இருக்கிறார்கள்

ஒரு ஐனநாயக நாட்டின் அடித்தளமே தேர்தலில் செலுத்துகின்ற வாக்கு தான் . ஆகையால் தான் சட்டமியற்றிய மாமேதைகள் அம்பானி போன்ற கோடிஸ்வரனுக்கும் தெருவோரம் குடிசையில் குடியிருக்கும் பாட்டிக்கும் ஒரே மதிப்புள்ள ஓட்டுரிமையை வழங்கினார்கள் .
ஆனால் செலவு செய்து போகவேண்டும் , அலைச்சல் என எத்தனையோ காரணங்களை கூறி வாக்கு செலுத்துவதைக்கூட இப்போதுள்ளவர்களால் செய்ய முடிவதில்லை . வெயிலை காரணம் சொல்லி வாக்களிக்க போகாமல் இருப்பவர்கள் கூட இருக்கிறார்கள் .
சுதந்திரத்தின் உயிர்ப்பை , பலனை இவர்கள் உணர்த்திருப்பின் இவ்வாறு செய்வார்களா ?

பலாத்காரம் செய்யப்படும் பெண்களும்  குழந்தைகளும்

ஒருபக்கம் மாண்புமிகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சுதந்திரதின உரையினை ஆற்றுகிறார் . மறுபக்கம் உச்சநீதிமன்றத்தில் காப்பகங்களில்  பெண் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக அழுத்தமான பல கேள்விகளை அரசிடம் வைத்தது .
நள்ளிரவில் முழுமையாக பெண் ஒருவர் தனியே பத்திரமாக நடந்துசெல்லும் நாள் தான் உண்மையான சுதந்திர நாள்
இது நாம் சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலங்களில் காந்தியார் சொன்னது . ஆனால் சுதந்திரம் வாங்கி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளை கடந்துவிட்டோம் . ஆனால் பெண்களின் பாதுகாப்பு இன்றும் ஆபத்தானாகவே இருக்கின்றதே . நமக்கான சட்டங்களை நாமே இயற்றிட உரிமையை பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் எந்த அளவிலே பயன்படுத்தியிருக்கிறோம் பார்த்தீர்களா ? பெண் குழந்தைகளுக்கான சுதந்திரத்தை கொடுத்திருக்கிறோமா ? இல்லை என்பதே உண்மை.
கூண்டில் இருந்து
வானில் பறக்கும்
சுதந்திர புறா
உணர்ந்த அளவிற்கு கூட  சுதந்திரத்தை நாம் உணர்ந்திடவில்லை .

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்கள்

நமது நாட்டு சுதந்திரத்தின் பெருமையே பேச்சு , எழுத்து , கருத்து சுதந்திரம் தான் . ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அவர்களால் முடிந்தவரையில் இந்த அடிப்படை சுதந்திரங்களை அழித்துக்கொண்டே வந்திருக்கின்றனர் .
அதிலும் குறிப்பாக பத்திரிகையாளர்களின் மீதான தாக்குதல்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன . மக்களின் ஜனநாயகத்தை காத்திடுவதில் மிக முக்கிய பங்காற்றுவது பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் தான் . அதனை இனியாவது ஆட்சியாளர்கள் காத்திட வேண்டும் .
இனியாவது மக்களும் ஆட்சியாளர்களும் சுதந்திரத்தின் பலனை அனுபவிக்க வேண்டும்
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version