இந்த உலகின் வரலாற்றில் நீங்கள் இடம்பெற அழகாகவோ அல்லது உயரமாகவோ இருந்தால் போதுமானது கிடையாது. அவற்றால் உங்களால் அத்தகைய இடத்தை பெற முடியாது. ஆனால் உங்களது செய்கையால் முயற்சியால் அந்த இடத்தை பிடித்துவிட முடியும்.
யார் உயரம்?
மனிதனின் உயரத்தைப்பற்றி
பேசும் மானிடர்களே!
மனதின் உயரத்தைப்
பற்றி பேசுங்கள்
தரையிலிருந்து அளந்து பார்த்து
உயரம் பற்றி பேசும் மாக்களே
வானில் இருந்து அளந்து பாருங்கள்
நான்தான் அதிக உயரம்
இந்தக் கவிதை அப்பா திரைப்படத்தில் வரக்கூடிய ஒரு கதாபாத்திரம் எழுதிய கவிதை. ஒதுக்கப்பட்ட இந்த கதாபாத்திரம் ஒருவரின் அரவணைப்பும் உந்துதலும் கிடைக்கும் போது வெற்றி பெற்று மேடையில் கர்ஜித்த கவிதை தான் இது. இதுவொரு திரைப்படம் ஆகவே திரைப்படங்களில் மட்டுமே தான் இப்படியான சம்பவங்கள் நடைபெறும் நிஜத்தில் நடைபெறாது என நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் இதோ நிஜத்தில் வென்ற ஆர்த்தியின் கதையை கேளுங்கள்.
நாம் எத்தகைய தோற்றத்தோடு பிறக்கவேண்டும் என்பதை நாமோ நமது பெற்றோர்களோ தீர்மானிப்பது கிடையாது. ஆனால் விளம்பரங்களின் சூழ்ச்சியாலோ அல்லது சினிமாவின் தாக்கத்தினாலோ அழகு என்றவொரு விசயம் நம்மில் இயல்பாகவே கலந்துவிட்டது. இப்படி இருப்பது தான் அழகு என்ற கருத்து நம்மில் விதைக்கப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக பிறக்கும் பெரும்பாலானவர்கள் அதனை நினைத்தே தங்களது வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்கி வருகிறார்கள். ஆனால் நீங்கள் உங்களது தோற்றதால் நிலைத்து நிற்பது கிடையாது, உங்களது திறமையால் தான் நிலைத்து நிற்க முடியும் என அவ்வப்போது சிலர் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அப்படி நம்மிடையே ஒரு சாதனையாளர் வாழ்ந்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த ஆர்த்தி டோக்ரா தான் அத்தகைய சாதனையாளர். 3 அடி 3 இன்ச் உயரமுள்ள ஆர்த்தி டோக்ரா தற்போது IAS அதிகாரியாக இருக்கிறார். அவருடைய சாதனைப்பயணத்தை நாம் இங்கே பார்க்க இருக்கிறோம்.
நீங்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா? திறமைக்கா? கமெண்ட் செய்திடுங்கள்
ஆர்த்தி உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் டெஹ்ராடூன் எனும் இடத்தில் ஓரளவு வசதியான குடும்பத்தில் தான் பிறந்தார். அவரது அப்பா ராஜேந்திர டோக்ரா இந்திய ராணுவத்தில் கர்னல் ஆகவும் அவரது அம்மா கும்கும் டோக்ரா பள்ளியின் தாளாளராகவும் இருந்தார். இவர்களுக்கு ஆர்த்தி எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தபோது கூடவே ஒரு சங்கடமான செய்தியும் வந்து சேர்ந்தது. குழந்தை போதுமான ஆரோக்கியத்துடன் பிறக்கவில்லை என்று தெரிவித்தார்கள். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தாலும் கூட ஒரு முக்கியமான முடிவை அந்த தருணத்தில் எடுத்தார்கள். ஆர்த்தி மட்டும் போதுமென முடிவெடுத்த அவர்கள் ஆர்த்தியின் முன்னேற்றத்திற்க்காக தங்களது வாழ்க்கையை அர்பணிப்பது என முடிவு செய்தார்கள்.
குறைபாடுள்ள குழந்தைகளை அன்போடு அரவணைக்கும் பெற்றோர் தான் கடவுள்
டெஹ்ராடூன் பகுதியில் இருக்கும் வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார். பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவருக்கு மனிஷா பன்வர் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மனிஷா தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து தேர்வான முதல் IAS அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பிற்கு பிறகு தான் தானும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் ஆர்த்தி.
கடுமையாக படித்த ஆர்த்தி தான் சந்தித்த முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். இந்திய ஆட்சிப்பணியில் 2006 முதல் இணைந்து பணியாற்றிடத் துவங்கினார் ஆர்த்தி.
இவர் தனது பணிக்காலத்தில் ‘Bunko Bikano’ எனும் திட்டத்தின் மூலமாக வெளிப்புறங்களில் இயற்கை உபாதைகளை கழிப்போரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கழிப்பறைகளை கட்டுவதற்கு பொதுமக்களை தூண்டினார். கிட்டத்தட்ட 195 கிராம பஞ்சாயத்துகளில் இவர் இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார். இதற்காக இவருக்கு பிரதமர் மோடி விருது வழங்கி பாராட்டினார். தற்போது பல்வேறு பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
உயரம் குறைவாக இருந்தபடியால் ஏகப்பட்ட எதிர்மறை கருத்துக்களை இவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் இவை நிகழக்கூடியவை தான் என்ற புரிந்துணர்வு இருந்தபடியால் இவர் எதற்கும் செவிசாய்க்கவில்லை. இவருக்கு இத்தகைய தைரியமும் ஊக்கமும் கிடைத்ததற்கு எப்போதும்
உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் தான் காரணம்.
தற்போது வெற்றியடைந்த இவர் பின்னால் பல உயரமான மனிதர்கள் நடந்து செல்கிறார்கள். இவரது உத்தரவுப்படி நடப்பதற்கு பலர் காத்துக்கிடக்கிறார்கள். பின்தங்கிய நிலையில் இருந்து வரும் பல மாணவர்கள் இவர் காட்டும் வழியில் பயணித்து வெற்றியடைய பயணிக்கிறார்கள்.
உயரம் எப்போதும் வரலாற்றில் இடத்தை பெற்றுத்தருவது இல்லை, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் வரலாற்றில் இடத்தை பெற்றுத்தருகிறது.
ஆர்த்தி IAS இப்போது எனக்கு உயரமாக தெரிகிறார். உங்களுக்கு?
கடினமான சூழலில் IAS அதிகாரிகளாக ஆனவர்கள் வெற்றிக்கதையை இங்கே படிக்கலாம்
தொழில்நுட்ப ஜாம்பவான்களின் வெற்றிக்கதைகளை படிக்க இங்கே கிளிக் செய்திடுங்கள்