Site icon பாமரன் கருத்து

ஆண்மகனே நீ தொடுவது ஆயிரம் கம்பளி பூச்சிகள் ஊர்வதை போன்றது | அவள் பேசுகிறாள் கேளுங்கள்

மௌன ராகம் திரைப்படத்தில் கார்த்திக் இறந்த பிறகு ரேவதிக்கு மோகன் உடன் திருமணம் நடக்கும். இருவருக்கும் விருப்பமில்லாத திருமணம் அது. சில நாட்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே விவாதம் ஒன்று நடக்கும் போது ரேவதியின் கைகளை தொடுவார் மோகன்…அப்போது நடைபெறும் உரையாடலின் சுருக்கம்,

மௌன ராகம் திரைப்படத்தில் ரேவதி

 

ரேவதி : தயவு செஞ்சு கைய விட்டுட்டு பேசுங்க

மோகன் : ஏன் நான் தொடுறது புடிக்கலையா?

ரேவதி : நீங்க தொடுறது “கம்பளி பூச்சி ஊர்றது மாதிரி இருக்கு

பிறகு நடந்தவை உங்களுக்கே தெரிந்திருக்கும்.

தொடுவது தாலி கட்டிய கணவனாக இருந்த போதும் பிடிக்கவில்லை எனும் போது ஒரு பெண்ணுடைய உணர்வு “கம்பளி பூச்சி ஊர்வதை போன்றது” என்பது தான் இந்த சீனில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது.

நிகழ்காலத்தில் நடப்பது என்ன?

அனைத்து ஆண்களையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் கூட்டமான பேருந்தில் ஏறினால் பெண்களை இடிக்கலாம் என என்னும் ஆண்களும் முன்னிருக்கையில் பெண் அமர்ந்திருந்தால் பின்னால் இருந்து தொட முயற்சிக்கும் ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணின் உணர்வினை உணர்ந்துகொள்ள வேண்டும். கட்டிய கணவன் அனுமதியின்றி தொடுவதே கம்பளி பூச்சி ஊர்வதை போன்று இருக்கின்றது என்றால் எவரென்றே அறியாத ஒருவர் அனுமதியின்றி தொடும்போது எவ்வளவு கம்பளி பூச்சிகள் ஊறுவது போன்ற ஒரு கொடுமையான உணர்வு பெண்களுக்கு ஏற்படும் என்பதனை நிச்சயமாக ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அனுமதியின்றி தொடுவது ஆயிரம் கம்பளி பூச்சிகள் ஊர்வதை போன்றது

அப்படிப்பட்ட உணர்வுகளை ஆண்களால் புரிந்துகொள்வது இயலாத காரியம். அந்த புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்ததை அவளது குரலிலேயே பதிவு செய்திருக்கிறேன். இது உண்மையில் நடந்த சம்பவம், இதுபோன்று பல பெண்களுக்கு நடந்தும் இருக்கலாம்….

கூட்டமான பேருந்தில் ஏறும் பெண்கள்

குடும்ப சூழல் பிரச்சினை எல்லாம் சுமந்து கொண்டு கனத்த இதயத்தோடு சென்னைக்கு பேருந்தில் ஏறினேன். SETC அரசுப்பேருந்துதான், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். ஜில்லென்று வீசும் காற்று சுகமாய் இருந்தாலும் அம்மாவின் பிரிவு கண்ணீரை வரவழைத்தது. பேருந்து பயணத்தின் போது பெரும்பாலும் நான் தூங்குவது இல்லை. ஜன்னலோரத்தில் சிறுவர்களைப்போல வேடிக்கை பார்ப்பதில் அலாதி பிரியம். அருகில் ஒரு அக்கா அமர்ந்திருந்தார்கள்.

பின்னால் ஆண்கள் சிலர் அமர்ந்திருந்தார்கள். சாய்வு இருக்கை தான் ஆனால் செய்துகொள்ளவில்லை. பெரும்பாலும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் இருக்கையை சாய்ப்பதே கிடையாது. அது ஒருவித பாதுகாப்பென்று நினைத்துக்கொள்வோம். அப்படித்தான் நானும் அமர்ந்திருந்தேன்.

பேருந்தில் விளக்கினை அணைத்தவுடனும் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். பிறகு நான் எப்படி உறங்கினேன் என்றே தெரியவில்லை. தூங்கி ஒரு பத்து நிமிடம் இருக்கும் பின்னாளில் இருக்கும் நபரின் கை எனது மார்பின் மேல்…உயிர் போகும் நிலை. கதறி அழுவதை தவிர வேறேதும் புரியவில்லை. சடாரென்று கையை தட்டி விட்டு அருகில் இருக்கும் அக்கா விடம் சொன்னேன்.

அவ்வளவு நடந்தும் எதுவும் நடக்காதது மாதிரி நடந்துகொண்டான் அந்த அரக்கன். இப்படி நடந்துகொள்ள அவனுக்கு எவ்வளவு அனுபவம் வேண்டும். ச்சீய்… எந்த ஒரு பெண்ணும் வெளியில் சொல்ல மாட்டாள் என்ற மன கூற்று தானே இவர்களை இப்படி செய்ய வைக்கிறது. நாமும் அப்படிப்பட்ட ஒருத்தியாக இருக்க போகிறோமா? என்றெண்ணினேன். அதை உடைத்தெறியவே அடித்து காலில் கிடக்கும் செருப்பை கழட்டி பளார் பளார் என்று ஆத்திரம் தீர அடித்து விட்டேன். பிறகு பேருந்தில் இருந்து நடு வழி பாதியில் இறக்கி விடப்பட்டான்.

அவன் இறங்கிவிட்டான் ஆனால் அந்த நினைவுகள் என்னை உலுக்கி எடுத்துக்கொண்டே இருந்தன. தூக்கம் என்னை அண்டவே இல்லை. அவன் கை வாய்த்த இடத்தை வெட்டி விடலாம் என்ற மன நிலை கூட வந்தது. எனக்கு தோழிகளை காட்டிலும் தோழர்கள் தான் அதிகம்.ஆனால் நான் அப்படிப்பட்ட சூழ்நிலையை அதுவரை சந்தித்ததே கிடையாது. அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா வின் அழைப்பை கூட ஏற்க முடியவில்லை .என் தோழனின் கண்ணை பார்த்து பேச முடியவில்லை .அந்த பொறுக்கி யின் முகத்தை தவிர வேறேதும் நினைவில் இல்லை.

மீண்டும் சுட்டி தனமான பெண்ணாக மாற ரொம்ப காலம் ஆனது. இன்றும் இந்த பதிவை எழுதும் போது கண்களில் கண்ணீர் கசிகிறது. பெண் குழந்தை என்றால் கொள்ளை ஆசை. ஆனால் நான் பட்ட இன்னல்கள் தானே எனக்கு பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கும் ஏற்படும் என்பதற்காகவே பெண் குழந்தை வேண்டாம் என வேண்டுகிறேன் இறைவன . இப்படிப்பட்ட கசப்பான நிகழ்வுகளை அனுபவித்தபின்னர் எனக்கு ஆண்களின் மீது அதிக வெறுப்பே உண்டாகிறது. திருமணம் குறித்து வீட்டில் பேசும்போதும் எனக்கு ஏதோ பய உணர்வு ஏற்பட்டு எனக்குள்ளே ஏதும் பிரச்சனை இருக்கா என்ற கேள்விக்குறியுடன் இருக்கிறேன். பெண்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டாம் மகா பாவம் செய்திருந்தால் போதும் என்ற கண்ணீர் துளிகளோடு பெயர் சொல்ல விரும்பாமல் இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

இந்த பதிவு ஒரு பெண் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை அனுபவிக்கும்போது எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்கிறாள் என்பதை ஆண்கள் அறிந்துகொண்டால் அதுபோன்று செயல்பட மாட்டார்கள் என்கிற உன்னத நோக்கில் எழுதப்பட்டுள்ளது

மாற்றம் உங்களில் இருந்து துவங்கட்டும்…

இப்படிக்கு..
மலர்விழி

பெண்களுக்கான சிறப்பு பதிவுகளை படிக்க கிளிக் பண்ணுங்க

Share with your friends !
Exit mobile version