முதலாளித்துவ சமூகத்தில் பணத்திற்கு மதிப்பிருக்கும் ஆனால் அதை நம்பியிருக்கும் மனிதர்களுக்கு மதிப்பிருக்காது. இந்த தத்துவத்திற்கு சொந்தக்காரரான கார்ல் மார்க்ஸ் சாதித்ததற்கு மிக முக்கிய காரணம் அவரது மனைவி ஜென்னி மற்றும் அவரது நண்பர் ஏங்கல்ஸ்.
வெற்றிகரமான காதல் ஜோடிகளுக்கு உதாரணமாக ஒரு ஜோடியை நீங்கள் குறிப்பிட வேண்டும் என்றால் நிச்சயமாக அது கார்ல் மார்க்ஸ் – ஜென்னி மார்க்ஸ் ஜோடியைத்தான் நான் குறிப்பிடுவேன், கார்ல் மார்க்ஸ் வரலாற்றை அறிந்தவர்கள் அப்படித்தான் செய்வார்கள். “மூலதனம்” என்ற அற்புதமான நூலை உலகிற்கு அளித்த மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி கார்ல் மார்க்ஸ் என்றால் அவர் அந்த சாதனையை படைக்க அவருக்கு பக்கபலமாக செயல்பட்டவர்கள் இருவர், ஒருவர் மனைவி ஜென்னி, இன்னொருவர் நண்பர் ஏங்கல்ஸ்.
கார்ல் மார்க்ஸ் ஏழை குடும்பத்தை சார்ந்தவராக இருந்த போதிலும் செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்த அழகிய ஜென்னி அவருக்கு மனைவியாக கிடைத்தது பெரும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜென்னி அழகில் மட்டும் சிறந்த பெண் அல்ல, 9 மொழிகளை எழுத படிக்க தெரிந்த மிகவும் அறிவார்ந்த பெண்ணாக இருந்தார் ஜென்னி. மிகவும் எளிமையாக நடந்த திருமணம் முடிந்த பிறகு ஜென்னியின் அப்பா கொடுத்தனுப்பிய பணத்தைக்கொண்டு இருவரும் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு தேனிலவு பயணம் சென்றார்கள். அந்த பயணத்திற்கு பெட்டி பெட்டியாக புத்தகங்களை அடுக்கிக்கொண்டு சென்றார் மார்க்ஸ். இதனைப்பார்த்த ஜென்னி, மார்க்சிடம் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? “இருவரும் இணைந்து படிக்கலாமா?” என்பதுதான். அங்கே இருவரும் புத்தகம் படித்ததை பார்த்த சக பயணிகள் இவர்களை கிண்டல் செய்தார்கள் என குறிப்பிடுகிறார்கள்.
தான் ஒரு செல்வந்த குடும்பத்தை சேர்ந்த பெண், அறிவார்ந்த பெண் என எதையுமே கணக்கில் கொள்ளாமல் கார்ல் மார்க்ஸ் திறமையானவர், அவரை இந்த உலகம் போற்றப்போகிறது, உலக மாற்றத்திற்காக அவர் எதையோ செய்யப்போகிறார் என ஜென்னி உறுதுணையாக நம்பினார். அந்த நம்பிக்கையை தனது இறுதிக்காலம் வரைக்கும் ஜென்னி கடைபிடித்தார்.
கார்ல் மார்க்ஸ் இன்று உலகம் போற்றும் நாயகராக இருக்கலாம். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மிகுந்த பண கஷ்டத்தில் தான் வாழ்ந்தார். தனது குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோய்க்கு மருத்துவம் பார்க்கக்கூட அவரிடத்தில் பணம் இல்லை. வாழ்க்கை முழுவதும் கார்ல் மார்க்ஸ் க்கு அவரது நண்பர் ஏங்கல்ஸ் தான் பண உதவி செய்துவந்துகொண்டே இருந்தார். இதனால் அவருடைய குழந்தைகளில் சிலவற்றை அவர்கள் இழக்கவும் நேரிட்டது.
மார்க்ஸ் அதிகார வர்க்கத்திற்கு எதிராக எழுதிய கருத்துக்களால் அவர் தொடர்ச்சியாக பல நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படும் சூழலுக்கு உள்ளானார்கள். இப்படி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தாலும் கார்ஸ் மார்க்ஸ் மீது ஜெனி கொண்டிருந்த காதல் குறையவில்லை, அதேபோல மார்க்ஸ் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் குறையவில்லை. ஜென்னி எப்போதுமே மார்க்ஸ் அவர்களை அவரது குறிக்கோளை நோக்கியே நகர்த்திக்கொண்டு இருந்தார். அவருக்கு அதுசார்ந்த உதவிகளை வழங்குவது, குடும்பத்தை ஒரு பாரமாக்காமல் ஒருவித சுதந்திரத்தை மார்க்ஸ் அவர்களுக்கு ஜென்னி கொடுத்தார். அதனால் தான் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் மார்க்ஸ் தொடர்ந்து படித்தார், எழுதினார், சாதித்தார்.
ஜென்னியின் இந்த அர்ப்பணிப்பை இப்படி குறிப்பிடுகிறார்கள், கார்ல் மார்க்ஸ்க்கு ஜென்னி “அறிவுசார் துணை” யாக இருந்தார். இன்று கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ ஒரு அறிவுசார் துணையாக இருப்பதில்லை. நான் வேலை செய்து பணம் கொண்டு வருகிறேன். ஆகையால் நீ தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் அல்லது நீயும் சம்பாதிக்கிறாய் நானும் சம்பாதிக்கிறேன் நான் ஒரு வேலை செய்தால் நீ ஒரு வேலை செய்துதான் ஆக வேண்டும் என புரிதலற்ற சண்டைகள் நம் குடும்ப கலாச்சாரத்தில் ஏராளம். ஒருவேளை அப்படி இல்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு சக துணையின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றபட்சத்தில் நிச்சயமாக அவர்கள் சாதிப்பார்கள். வெறுமனே உடலை பகிர்ந்துகொள்வது மட்டுமே அல்ல வாழ்க்கை, துணையின் எண்ணத்தை உணர்ந்து அதற்கு துணையாக இருப்பதே வாழ்க்கை. அதனை காதலோடு கலந்து செய்வித்த ஜென்னி என்றுமே மிகச்சிறந்த வாழ்க்கை துணைவி தான். நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள்?
கார்ல் மார்க்ஸ் – ஜென்னி இவர்களுடைய இறுதிக்காலம் மிகவும் துயரகரமானதாக இருந்தது. ஒரு அறையில் ஜென்னி நோய்வாய்ப்பட்டு இருந்தார், இன்னொரு அறையில் மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டு இருந்தார். இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார், இவர்களுக்கு சிகிச்சையை விட பணமே இப்போது முக்கிய தேவை. அத்தியாவசிய தேவைகளை செய்துகொள்வதற்கு போதுமான பணம் இவர்களுக்கு இருந்து இவர்களை பார்த்துக்கொண்டால் இவர்கள் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார்கள் என்றார். ஆனால் பணம் ஏது? மார்க்ஸ் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக ஜென்னி இறந்தார். ஜென்னி மரணத்திற்கு எழுதிய இறுதி அஞ்சலியில் மார்க்ஸ் இப்படி குறிப்பிடுகிறார் “அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்”
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!