முதல் முறையாக வாக்களிக்க போகிறீர்களா? தவறாமல் படிங்க
நாடாளுமன்ற தேர்தல் (ஏப்ரல் 18) நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அனைத்துக்கட்சிகளும் வாக்குகளை திரட்ட பரப்புரைகளை மேற்கொண்டிருக்கக்கூடிய சூழலில் பலருக்கு, நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எதனை அடிப்படையாக வைத்து வாக்களிக்க வேண்டும்? என்பது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. குறிப்பாக முதல் முறையாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவிருக்கிற இளைஞர்களுக்கு இந்த குழப்பம் நிச்சயமாக ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த பதிவு நிச்சயமாக உங்களுக்கு ஒரு தெளிவை தரும் என நம்புகிறேன்.
> உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள் >>
வாக்களிக்க தவறாதீர்கள்
யாருக்கு நீங்கள் வாக்களித்தாலும் பரவாயில்லை ஆனால் வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். இந்த தேசம் உங்களுக்கு அளித்திருக்கக்கூடிய உரிமை “வாக்குரிமை”. அதனை பதிவு செய்து ஜனநாயகத்தை காத்திடவேண்டியது உங்களது கடமை. நான் வாக்களித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது போன்ற உருப்படியில்லாத கேள்விகளை இன்றே விட்டுவிடுங்கள். இப்படி நினைத்து நினைத்தே தான் 30 சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகாமல் போய்விடுகின்றன. நன்றாக கவனியுங்கள் அந்த சதவிகிதம் தான் ஆட்சியை தீர்மானிக்கிற வாக்கு சதவிகிதம். ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது.
வாக்களிப்பதற்கு முன்னதாக கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?
> நீங்கள் வாக்களிக்கப்போகும் தேர்தல் சட்டமன்ற தேர்தலா அல்லது பாராளுமன்ற தேர்தலா என்பதை முதலில் கவனியுங்கள்.
பாராளுமன்ற தேர்தல் என்றால்,
>> யார் பிரதமர் வேட்பாளர்களாக இருக்கிறார்கள்? எந்த கட்சிகளுக்கு இடையே பிரதான போட்டி? இதனை கவனியுங்கள். யார் பிரதமர் என்பது மிக முக்கியமான ஒன்று. நீங்கள் உங்களது தொகுதியில் பெரிய அறிவுடை நம்பியை நிறுத்தினாலும் ஒட்டுமொத்த தேசத்திற்கு தேவையான திட்டங்களை வகுப்பதில் பெரிய அதிகாரம் படைத்தவர் பிரதமர் வேட்பாளரும், கட்சி தலைமைகளும் தான்.
>> அதற்க்கு அடுத்தபடியாக யாருடைய கடந்த கால செயல்பாடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒற்றுமைக்கு தேவைப்படும் என நினைக்கிறீர்கள்?
>> உங்களது மாநிலத்திற்கு தேவையான நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அதிகம் கொண்டிருக்கிற கட்சி எது?
>> வேலைவாய்ப்பு, நீர் மேலாண்மை , விவசாயம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படக்கூடிய கட்சி எது?
>> தற்போதைய தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையிலே தான் பிரதான போட்டி இருக்கிறது. ஆகவே உங்களது வாக்குகளை பெரும்பாலும் இந்த இரண்டில் ஒரு கட்சிக்காக வாக்காக செலுத்திட முயலுங்கள்.
>> இவர்கள் இருவரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. எங்களது மாநிலத்திற்கான உரிமையை கேட்டுப்பெற நான் இன்னொரு கட்சியை சேர்ந்த உறுப்பினரை அனுப்பிட விரும்புகிறேன் என நினைத்தால் அவர்களுக்கு கவலைப்படாமல் வாக்களியுங்கள்.
மாநில தேர்தல் என்றால்,
>> மாநில தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பாக, மிகப்பெரிய கட்சி முதல் அறிமுகமான சிறிய கட்சிகள் வரை என்னென்ன இருக்கின்றன என்பதனை தெரிந்துகொள்ளுங்கள். பாராளுமன்ற தேர்தலில் மற்ற மாநில மக்களின் வாக்குகளும் ஆட்சியை தீர்மானிக்கும் ஆகவே அதற்கேற்றவாறு நீங்கள் வாக்களிக்க வேண்டி இருக்கும், ஆனால் மாநில தேர்தலில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் நினைத்தால் கூட ஒரு புதிய கட்சிக்கு குறிப்பிட்ட அங்கீகாரத்தை கொடுக்க முடியும்.
>> மக்களின் உண்மையான பிரச்சனைகள் என்ன? அதற்காக கடந்த காலங்களில் களத்தில் நின்ற கட்சிகள் எவை? அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தங்களது தேர்தல் அறிக்கையில் கொண்டிருக்கிற கட்சிகள் எவை? என்பது போன்றவற்றை அறிந்துகொள்ளுங்கள்.
>> முதல்வர் வேட்பாளர்களாக நிற்கும் நபர்கள் யார்? அவர்களின் கடந்தகால செயல்பாடுகள் என்ன? குறிப்பாக ஊழலில் அவர்கள் எப்படி? என்பது போன்ற விசயங்களை கவனியுங்கள்
>> கட்சி, முதல்வர் வேட்பாளர், தொகுதி வேட்பாளர், வேட்பாளர்களின் சிறப்பு தகுதி, அவர்களால் மாற்றத்தை நிகழ்த்திட முடியும் என்ற நம்பிக்கை இவையே உங்களது வாக்கு யாருக்கு என்பதனை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கலாம்.
சிறப்பு வேட்பாளர்களை அடையாளப்படுத்துங்கள்
தமிழகத்தை பொறுத்தவரையில் இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இரண்டு கட்சிகளுக்கும் நிறை குறை இரண்டுமே இருக்கிறது. வரும்காலங்களிலும் இவர்களே ஆட்சி செய்திட வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. மக்கள் மனம் மாறினால் புதிய கட்சியை கூட ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துவிடுவார்கள் என்கிற அச்சம் பெரிய கட்சிகளுக்கு வர வேண்டும். அப்படி வந்துவிட்டாலே அவர்கள் தவறுகள் செய்யமாட்டார்கள்.
உங்களது தொகுதியில் பொது பிரச்சனைகளில் சிறப்பாக செயல்பட்டு உங்களுக்கு வெற்றியை தேடித்தந்த நபர்கள் போட்டியிடலாம். அப்படி உங்களுக்காக போராடிய நபர்கள் தேர்தலை சந்திக்க களமிறங்கினால் அவர்களை கைவிட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை கொடுக்க முயலுங்கள்.
நோட்டா வேண்டாம்
பல சிறிய கட்சிகளை விட நோட்டா அதிக வாக்குகளை வாங்கிய தேர்தல்களை கண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரையில் நோட்டாவிற்கு வாக்களிப்பது என்பது வீணானது என்றே சொல்லுவேன். குறிப்பிட்ட அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றாலும் கூட அதனால் பயன் எதுவும் ஏற்படப்போவது இல்லை. அப்படிப்பட்ட சூழலில் அதிகபட்சமாக வாக்கு வாங்கிய நபரே வெற்றி பெற்றவராக கருதப்படும் போது எதற்க்காக நோட்டா?
உங்களுக்கு எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லையெனில், நிச்சயமாக பல சுயேச்சை வேட்பாளர்கள் பங்கேற்று இருப்பார்கள். அவர்களில் யாருக்கேனும் உங்களது வாக்குகளை அளித்திடுங்கள். நமக்கும் வாக்களித்து இருக்கிறார்களே என்ற ஒரு சந்தோசத்தையாவது கொடுக்கும்.
ஒரு ஓட்டு போடுவதற்கு நாம் இவ்வளவு தெரிந்துவைத்திருக்க வேண்டுமா என எண்ணலாம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களது ஒவ்வொரு நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது அரசியலே. அப்படிப்பட்ட முக்கிய விசயத்திற்க்காக நீங்கள் குறிப்பிட்ட நேரம் செலவழிப்பது தேவையானதே. முதல்முறை மட்டுமே அதிக நேரம் எடுக்கும் பிறகு எளிமையான விசயமாக மாறிவிடும்.
வாக்குகளை விற்க வேண்டாம்
பணக்காரனும் ஏழையும் பட்டம் பெற்றவனும் பாமரனும் ஜனநாயகநாட்டில் சமம் என்பதனை வலியுறுத்தவே அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது . மகத்துவம் வாய்ந்த வாக்குரிமையின் பலத்தை அறிந்திடாமல் வெறும் 500 க்கும் 1000 க்கும் விற்கிறோம் என்பது கேவலமான செயல் . அதனை செய்யமாட்டோம் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் .
வாக்களிப்போம்! நல்ல தேசத்தை கட்டமைப்போம்!
Share pannunga 👍