Site icon பாமரன் கருத்து

நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? – பாமரன் கருத்து


மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி மக்களாட்சி என்போம். அந்த மக்களாட்சிக்கு மிகவும் முக்கியமானது “வாக்குரிமை”. இந்தியாவில் 18 வயது நிரம்பிய உடனையே அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால் பலருக்கு எப்படி வாக்களிப்பது? யாருக்கு வாக்களிப்பது? என்ற குழப்பத்தில் இருப்பதை அறிய முடிகிறது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வரக்கூடிய இந்த சூழலில் “நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?” என்ற இந்த கட்டுரை உங்களுக்கு ஓர் புரிதலை அளிக்கும் என நப்புகிறோம்.

 

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

 

பேராயுதம் – வாக்குரிமை 

 

ஓட்டு போடும் பலருக்கு “வாக்குரிமை” யின் வலிமை தெரிவது இல்லை. அரசு விடுமுறை அளிக்கும் அந்த நாளில் பரிசு பெற்றுக்கொண்டோ அல்லது காலம் காலமாக இவர்களுக்கு தான் வாக்களிப்பேன் என்ற மனநிலையிலோ வாக்களிப்பவர்கள் ஏராளம். இவர்களோடு சேர்த்து, நிற்போரில் எவரும் யோக்கியன் இல்லை, ஆகவே நான் வாக்களிக்க போவது இல்லை என ஒதுங்கி நிற்போரும் உண்டு. புதிதாக வாக்குரிமை பெற்ற இளைஞர்களுக்கோ “நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?” என்ற பதில் தெரியாத குழப்பத்திலேயே இரண்டு மூன்று முறை யாருக்கேனும் வாக்களித்து ஓய்ந்துபோகிறார்கள்.

 

vote for nation

 

ஆனால் நண்பர்களே, இந்தியா போன்றதொரு சுதந்திர நாட்டில் உங்களை ஆள்பவர்களை நீங்கள் இணைந்துதான் இன்றுவரை தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதுதான் இத்தனை ஆண்டுகளாக நடந்துகொண்டு இருக்கிறது. யார் அதிக வாக்குகளை பெருகிறாரோ அவர்தான் இன்றளவும் வெற்றியாளராக கருதப்படுகிறார்.

நீங்கள் அம்பானியின் மகனாக இருந்தாலும் சரி ஆண்டிபட்டி ராகவன் மகனாக இருந்தாலும் சரி, இருவருக்குமே 18 வயது நிரம்பிய உடன் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும். இருவரின் வாக்குரிமைக்கும் ஒரே விதமான மதிப்பே வழங்கப்படும். பணக்காரர், ஏழை, கற்றவர், கல்லாதவர், ஆண் , பெண் என எந்த வேற்றுமையும் பாராமல் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது. ஆனால் நாம் தான் இன்னும் அதன் சக்தியை உணராமல் இருக்கிறோம்.

 


 

நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

 

இந்த கேள்விக்கு விடை தெரிந்துவிட்டாலே சரியான நபர்களுக்கு நமது வாக்கினை செலுத்திவிட முடியும்.

 

பொதுவாக ஒரு நபர் அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றால் அவரிடம் நாம் கேட்கின்ற மிக முக்கிய கேள்வி “உங்களுடைய கொள்கை என்ன?” என்பதுதான். ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த கேள்வி அரசியல் கட்சி தொடங்குபவருக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்கும் உரிமை பெற்ற ஒவ்வொருவருக்குமே கேட்கப்பட வேண்டும்.

நண்பர்களே, எப்படி அரசியல் கட்சிகளுக்கு கொள்கை தேவை என்று கருதுகிறோமோ அதனை போலவே வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொள்கை என்ற ஒன்று இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு இப்போது வாக்குரிமை வந்திருக்கிறது எனில் நீங்கள் இதுவரை கண்டதில் எதனை மாற்றிட வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனையே உங்களது கொள்கையாக கொள்ளலாம். என்னுடைய கொள்கை மது விலக்கு எனில் எந்த கட்சி மதுவிலக்குக்கு ஆதரவாக இருக்கிறது, எந்த கட்சி அதனை கொள்கையாக வைத்திருக்கிறது என பார்ப்பேன். அந்த கட்சிக்கு என்னுடைய ஆதரவினை அளிப்பேன்.

நாம் ஒவ்வொருவரும் இப்படி செய்வோமாயின் ஒருநாள் சாதாரண மக்களின் கொள்கைகள் அரசின் கொள்கைகளாக மாறிப்போகும். நீங்கள் நினைப்பதை நிறைவேற்றிட தகுதியான கட்சி ஆட்சிக்கு வரும். ஆகவே வாக்காள பெருமக்களே! ஏதேனும் ஒரு சிறு மாற்றத்துக்கான விசயத்தை உங்களது கொள்கைகளாக இன்றே மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். வாக்களிக்க பணம், பரிசு வாங்காமல் உங்களது கொள்கைக்கு அடிபணியும் கட்சிக்கு உங்களது வாக்கினை செலுத்துங்கள்.

 

பின்வரும் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளுங்கள்

>> வாக்கு எனது உரிமை

>> எதற்காகவும் அதனை நிறைவேற்றாமல் தவறவிட மாட்டேன்

>> பரிசு பெற்றுக்கொண்டு வாக்களிக்க மாட்டேன்

>> என்னை சார்ந்தவர்களுக்கு வாக்குரிமையின் பலன் பற்றி எடுத்துரைப்பேன்

>> இன்றே எனக்கான கொள்கையை தேர்ந்தெடுப்பேன்

>> கொள்கைக்காக வாக்களிக்க தொடங்குவேன்


 

இந்த பதிவிட்டு உங்களுக்கு சிறு வெளிச்சத்தை காட்டியிருந்தால் பிறருக்கும் பகிருங்கள்.

 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version