மனித இனம் இக்கட்டான சூழலில் நிற்பது உண்மைதான். ஆனால் அதன் கூடவே நம்பிக்கையின்மையும் சேர்ந்துகொண்டால் என்னாவது ஆகவே உங்களிடம் பேசுகிறவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளால் பேசுங்கள்.
அவ்வளவு தான், முடிய போகுது, எல்லாரும் சாகப்போறோம் இதுபோன்ற வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை.
ஆனால் சில வாரங்களாக நாம் இப்படித்தான் பேசி வருகிறோம். உதாரணத்திற்கு, சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் பரவரலாக பரவியது. இரண்டு நண்பர்கள் மிகுந்த சமூக அக்கறையுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு வெளியிட்ட அந்த ஆடியோவின் முக்கிய அம்சம், அமெரிக்காவை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்தியாவில் அமெரிக்காவை விட பல மடங்கு இறப்பு ஏற்படப்போகிறது, நமக்கு நெருக்கமானவர்களை நாம் இழக்கப்போகிறோம், தற்போது நமக்காக வெளியில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளே இறக்கும் சூழல் உண்டாகும் என பேசப்பட்டிருந்தது. நேரடியாக பேசி ஒரு ஆடியோ பதிவை போட்டால் மக்கள் பகிர்வார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்தில் போன் உரையாடல் போன்று வெளியிட்டு இருந்தார்கள்.
இது ஒரு உதாரணம் தான். இதுதவிர தினமும் லட்சக்கணக்கில் கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கப்படுகின்றன. நாங்கள் இதனை விழிப்புணர்வுக்காகத்தான் செய்கிறோம் என்று சொன்னாலும் கூட மக்களின் மனதில் தேவையற்ற ஒரு அச்ச உணர்வை கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கின்றன. தொடர்ச்சியான அச்ச உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும்.
நம்பிக்கையான வார்த்தைகளை பேசுங்கள்
தங்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடுமா என்ற அச்சம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக குழந்தைகளை வைத்திருக்கும் வீடுகளில் இந்தப்பயம் அதிகம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களிடம் நாம் பேசும்போது அவர்களுடைய முதல் கேள்வியாக இருப்பது “குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகவே அவர்களை கரோனா வைரஸ் தாக்கி விடும் என்கிறார்களே என் பிள்ளைக்கும் ஏதாவது நடந்துவிடுமா?” என கேட்பார்கள். அவர்களுக்கு எப்படி பொய் சொல்லாமல் நம்பிக்கை ஊட்டுவது. செய்ய முடியும் நண்பர்களே “கவலைப்படாதீர்கள் உலக அளவில் இறந்தவர்களின் வயதை எடுத்துப்பார்த்தால் அதில் குழந்தைகள் எவருமே இல்லை, வயதானவர்களும் ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ளவர்களையும் காப்பாற்றுவதில் தான் பிரச்சனை இருக்கிறது” என்று கூறலாம். இது உண்மை. இந்த உண்மை நிச்சயமாக அவர்களுக்கு ஓர் நம்பிக்கையை நிம்மதியை கொடுக்கும் அல்லவா.
சரி, ஒரு வயதானவர் வந்து கேட்டால் என்ன சொல்வது? “ஐயா கவலைப்படாதீர்கள், உங்களை போன்ற பெரியவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது உண்மை தான். ஆனால் நீங்கள் வீட்டிற்குள் சுத்தமாக இருந்தால் உங்களை இந்த வைரஸ் அண்டாது. அப்படியே அண்டினாலும் நீங்கள் 100% இறந்து தான் போவீர்கள் என்று இல்லை. 101 வயதில் இருந்த முதியவரையும் காப்பாற்றி இருக்கிறார்கள். ஆகவே உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது” எப்படி சொல்லலாமே.
எப்போதும் போலவே இருங்கள்
வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம், பிறருடன் நெருங்கி இருக்க வேண்டாம். இந்த இரண்டு கட்டுப்பாடுகளை தவிர நமது முந்தைய வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. பல்வேறு நோய்களால், விபத்துகளால் மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூட லட்சக்கணக்கில் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இப்போதைய பிரச்சனை என்னவென்றால் இந்த கொரோனா வைரஸ் சாதாரண பொதுமக்களையும் சம்பந்தம் இல்லாதவர்களையும் கூட தாக்கிவருகிறது. வெகுவிரைவில் இந்த பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆகவே நாம் பேரழிவிற்கு மத்தியில் நின்றுகொண்டு இருப்பதைப்போல என்ன வேண்டாம். இது மனித இனத்திற்கு வைக்கப்பட்டுள்ள ஒரு சோதனை. அப்படியே நாம் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக போராடினால் நிச்சயமாக இந்த நோயை வென்று முன்னேறுவோம்.
நம்பிக்கை அது தானே எல்லாம்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!