Site icon பாமரன் கருத்து

உங்கள் காருக்குள் எலி அட்டகாசம் செய்கிறதா? இதை செய்து பாருங்கள்

கார் வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய எதிரி எலி தான். நாம் பார்த்து பார்த்து ஆசையாக வாங்கிய காரை கடித்து இந்த எலிகள் நாசம் செய்து விடுகின்றன. புகையிலை கட்டினாலும் எலிகள் தொல்லை நீங்கவில்லை என புலம்புவோருக்கு இந்தப்பதிவு உபயோகமாக இருக்கும்.

நாம் சில நாட்கள் காரை எடுக்காமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் எலிகள் காருக்குள் [Rat Problem] சென்று கார் சீட், இன்ஜின் ஒயர் உள்ளிட்டவற்றை கடித்து சேதமாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருமுறை காருக்குள் எலி இருப்பதை நீங்கள் பார்த்துவிட்டால் கொஞ்சமும் அலட்சியம் செய்திடாமல் அடுத்தமுறை எலி வராமல் இருக்க செய்திட வேண்டியவற்றை செய்திடுங்கள். எலிகள் ஒருமுறை வந்து போய்விட்டால் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு வர அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகவே உஷாராக இருப்பது நன்று.

எலிகள் ஏன் காருக்குள் வருகின்றன?

காரில் பயணம் செய்திடும் போது நாம் சாப்பிட்ட பிஸ்கட், பழங்கள் போன்றவை காருக்குள் சிதறிக்கிடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது எலிகளை காரை நோக்கி ஈர்க்கலாம். காருக்குள் வந்து இவைகளை ஒருமுறை தின்று பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் காருக்குள் வர அதிக வாய்ப்பு உண்டு. 

இரண்டாவதாக, நாம் காரை சில நாட்கள் எடுக்க மாட்டோம் என்பதனால் கார் கவர் மூலமாக காரை மூடி வைப்போம். இதனால் காருக்குள் எப்போதும் இருட்டாகவும் வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். இது எலிகளுக்கு மிகவும் பிடித்தமான சூழல். ஆகவே எலிகள் காருக்குள் சென்று நாட்கணக்கில் செட்டில் ஆகிவிட அதிக வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை நீங்கள் இதனை கவனிக்காமல் போனால் நீங்கள் காரைத் திறக்கும் போது உங்களது கார் அலங்கோலமாக இருக்கும். 

எலிகள் காருக்குள் சென்றால் உடனடியாக அதனை தடுக்க நடவெடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இல்லையேல் உங்களுக்கு பெரும் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. கார் சீட் கவரை எலிகள் அதிகமாக கடித்து விடும். அதேபோல, இன்ஜின் பகுதியில் உள்ள ஒயர்களை கடித்து சேதமாக்கிட அதிக வாய்ப்பு உண்டு. அப்படி நடந்தால் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரைக்கும் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

எலிகள் காருக்குள் புகுவதை எப்படி தடுக்கலாம்?

புகையிலை

எலிகள் காருக்குள் வருகிறது என்றவுடன் பலர் சொல்லக்கூடிய யோசனை புகையிலை கட்டுவது தான். இது தற்காலிகமாக உங்கள் பிரச்சனையை தடுத்தாலும் கூட ஓரிரண்டு நாட்களுக்குத் தான் உங்களுக்கு இது உதவும். புகையிலை வாசம் அடிக்கிற வரைக்கும் தான் அதன் தாக்கம் இருக்கும். அதன் பிறகு எலிகள் வந்துவிடும்.

புதினா

புகையிலை மாதிரியே புதினா இலைகளை காருக்குள் போடுவதன் மூலமாக எலிகளை விரட்ட முடியும். புதினாவின் வாசம் எலிகளுக்கு பிடிக்காது என்பதனால் எலிகள் வராது. ஆனால், புதினா இலைகளின் வாசம் ஓரிரு நாள் தான் இருக்கும். அதன் பின்னர் அது எலிகளை தடுக்காது.

Rat Repellent Spray For Car

தற்போது பலரும் இதையே பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் இந்த ஸ்ப்ரே யை வாங்கி என்ஜின் பகுதியில் உள்ள ஒயர்களில் படும் விதத்தில் அடிக்க வேண்டும். பொதுவாக எலிகள் காரில் ஏறியவுடன் காரில் உள்ள ஒயர்கள் உள்ளிட்டவைகளை தான் கடிக்க ஆரம்பிக்கும். ஆகவே அந்த இடங்களில் இந்த ஸ்ப்ரே அடிக்கும்பட்சதில் கார் பெருமளவு சேதம் அடைவதை தடுக்கலாம். இந்த ஸ்ப்ரே அடிக்கும் போது ஒரு தடிமனான கெமிக்கல்ஸ் ஒயர்களில் ஒட்டிக்கொள்ளும். எலிகள் கடிக்கும் போது கசப்பான உணர்வு அவைகளுக்கு ஏற்படும். இதனால் அவை கடிக்காது. இதை நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயமாக என்ஜின் பகுதியை எலி தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.

இந்த ஸ்பிரேயை நீங்கள் கார் சீட்களில் அடிக்க முடியாது. ஆகவே, அவற்றை எலிகள் கடிக்க வாய்ப்பு உண்டு.

Rodent Repellent Devices

இப்போது சந்தையில் இந்த கருவிகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றை காரிலோ அல்லது கார் நிறுத்தும் இடத்திலோ ஆன் செய்து வைத்திருப்பதன் மூலமாக எலி உள்ளிட்டவற்றை அந்த இடத்திற்கு வராமல் செய்திட முடியும் என்கிறார்கள். இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் சத்தத்தை எலிகள் உள்ளிட்டவற்றால் மட்டுமே கேட்க முடியும். அவற்றுக்கு அது தொந்தரவாக இருக்கும் என்பதனால் அவை அங்கே வராது.

ஆனால், இதுவும் சரியாக வேலை செய்வது இல்லை அல்லது சில மாதங்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது என்பது இதுபோன்ற கருவிகளை பயன்படுத்துவோரின் கருத்தாக உள்ளது.

எலிகளை விரட்ட நிரந்தர தீர்வு இல்லையா?

மேலே சொன்ன அனைத்து தீர்வுகளும் தற்காலிக தீர்வுகள் தான். நீங்கள் எலிகளை விரட்ட வேண்டுமானால், சில முறைகளை பின்பற்றினாலே எலி தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

காரை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். பிஸ்கட் உள்ளிட்டவை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

வெளிச்சம் உள்ளே புகுமாறு வைத்துக்கொள்ளுங்கள். கார் கவர் பயன்படுத்தும் பட்சத்தில் ஜன்னல் உள்ளிட்ட இடங்களில் சிறு துளைகள் இட்டு அதிலே வெளிச்சம் உள்ளே போகுமாறு செய்து கொள்ளுங்கள். இல்லையேல் அடிக்கடி திறந்து பாருங்கள்.

காரை அடிக்கடி ஆன் செய்திடுங்கள். நீங்கள் வெளியூரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிந்தவர்களை காரை சிறிது நேரம் ஆன் செய்திட சொல்லுங்கள்.

Rat Repellent Spray ஐ வாங்கி காரின் என்ஜின் பகுதியில் உள்ள ஒயர்களில் அடித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வேறு யுக்திகளை பயன்படுத்தியிருந்தால் அதை கமெண்டில் பதிவிடுங்கள்

Share with your friends !
Exit mobile version