தற்போதைய உலகம் மிக மிக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்தது அதை செய்ய வேண்டும் அதை முடித்த பிறகு அதை செய்ய வேண்டும் என ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட உலகத்தில் அமைதியான மனநிலையில் இருப்பது என்பது மிகச் சவாலானது. ஆனால் உங்களை நீங்களே கேள்வி கேட்டுப்பாருங்கள் “ஓடிக்கொண்டே இருப்பதற்காகத்தான் நாம் பிறந்தோமா?” “நம்மை சுற்றிய அழகான உலகத்தை கவனித்து ரசித்து இருக்கிறோமா?” . இதற்கு பெரும்பாலானவர்களின் பதில் “இல்லை” என்பதாகத்தான் இருக்கும்.
அப்படிப்பட்டவர்களை குற்றம் சொல்லவில்லை, வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்ற உலகில் நாம் “நிதானமாக நின்று கொண்டு இருந்தால் பிறர் நம்மை விட முன்னேறிவிடுவார்கள்” என்பது ஓரளவிற்கு உண்மையும் கூட. ஆனால் அப்படி செயல்படும்போது நாம் சந்திக்கின்ற பல்வேறு விதமான சூழல்கள் நம் கவனத்தை சிதறடிக்கின்றன, மனதை அமைதியற்ற சூழலுக்கு தள்ளி விடுகின்றன. இறுதியாக பணம் சேர்ந்தும் அதனை நிம்மதியாக அனுபவிக்க முடியாத சூழலுக்கு நம்மை கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
இப்படிப்பட்ட உலகில் “அமைதியான மனநிலையில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?” என்பதற்கான எளிய முறைகளை இப்போது காணலாம்.
பழைய தோல்விகளை மறக்க பழகுங்கள்
வாழ்க்கை என்பது ஒரு நாள் நடக்கின்ற போட்டியல்ல என்பதை உணருங்கள். ஒவ்வொரு நாளுமே புது புது போட்டிகள் உருவாகிக்கொண்டே இருக்கும். நேற்றைய போட்டியில் தோற்றுவிட்டோம் என்று விரக்தியில் அதனையே நினைத்துக்கொண்டு இருந்தால் இன்றைய போட்டியில் ஜெயிக்க முடியாது. உதாரணத்திற்கு பள்ளி தேர்வில் சரியான மதிப்பெண்ணை பெற முடியவில்லையென நினைத்து புலம்பிக்கொண்டே இருப்பதைவிட, அதனை மறந்துவிட்டு கல்லூரிப்படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெறுவதே புத்திசாலித்தனம். அதற்காக பழைய தோல்விகளை மறக்க பழகுங்கள்.
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் நேற்று பயன்படுத்திய தொழில்நுட்பம் இன்று மாறியிருக்கலாம். சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். உங்களை சுற்றி நடப்பது அனைத்துமே மாறிக்கொண்டே தான் இருக்கும். தற்போது அந்த மாற்றம் மிக வேகமாக நடக்கிறது. உங்களுக்கு அது பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அந்த மாற்றங்களை உங்களால் தடுக்க முடியாது என்பதை உணருங்கள். நம்மால் தடுக்க இயலாத மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழகுவதே சிறந்தது.
எதிர்மறை சிந்தனைகளை விரட்டுங்கள்
சாக்கடைக்குள் நின்றுகொண்டு நாற்றத்தை போக்குவதற்கு முயன்றால் முடியுமா? அதனைப் போலவே தான் உங்களை சுற்றி எதிர்மறை சிந்தனையாளர்களும் சிந்தனைகளும் இருக்கின்ற போது அமைதியான மனநிலையை பெற முடியாது. ஆகவே அப்படிப்பட்ட நபர்களையும் சிந்தனைகளையும் விரட்டியடியுங்கள்.
நன்றாக ஓய்வெடுங்கள்
மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி செல்லும் போது குறிப்பிட்ட இடைவெளியில் மாடுகளை வண்டியில் இருந்து கழற்றிவிட்டு இளைப்பாற வைப்பார்கள். அப்போதுதான் மாடுகள் மீதமுள்ள தூரத்தை எளிமையாக கடக்கும். மனிதர்களுக்கும் அந்த விதி பொருந்தும். ஒவ்வொரு வேலையும் முடிந்த பிறகு குறிப்பிட்ட இடைவெளியை ஓய்வெடுக்க ஒதுக்கி வையுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள்.
பிடித்ததை செய்திடுங்கள்
பாட்டு கேட்பது பிடிக்குமா? கேளுங்கள். ஆடுவது பிடிக்குமா? ஆடுங்கள். ஊர் சுற்றுவது பிடிக்குமா? சுற்றுங்கள். இப்படி உங்களுக்கு பிடித்தமான செயல்களை செய்ய தவறாதீர்கள். வேலைகளுக்கு இடையே உங்களுக்கு பிடித்தமான விசயங்களை செய்திட நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். மனது சந்தோசப்படும்.