காந்தி அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான மாறுதல்களை கடைபிடிக்க காரணமாக விளங்கியது தூங்கா நகரமாகிய மதுரை. 5 முறை மதுரைக்கு வந்திருக்கிறார் காந்தி. மேலாடை துறப்பு, ஆலய நுழைவு போராட்டத்திற்கு வித்திட்டது என பல மாற்றங்கள் தந்தது மதுரை.
அகிம்சை என்ற பேராயுதத்தை போராட்டத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து அதனாலேயே உலகம் முழுமைக்கும் போற்றப்படுகிறவர் மஹாத்மா காந்தி. காந்தி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மூக்குக்கண்ணாடி, இடுப்பில் சிறிய வேட்டி, கைத்தடி இவைதான். வழக்கறிஞர் பயின்றவர் காந்தி. அப்படி இருக்கும் போது அவர் மேலாடை உடுத்தும் வழக்கம் கொண்டவர் என்பதனை நம்மால் யூகிக்க முடிகிறது. பிறகு ஏன் காந்தி அவர்கள் மேல் சட்டை அணிவதை தவிர்த்தார் என்ற கேள்வி இயல்பாகவே அனைவரது மனதிலும் எழும் கேள்விதான்.
இந்தக் கேள்விக்கான பதிலுக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் தூங்கா நகரமாகிய மதுரைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆம், செப்டம்பர் 22, 1921 ஆம் நாள் தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக மதுரைக்கு வந்திருந்த போது, பல இந்தியக் குடிமக்கள் மேலாடை அணியக்கூட வழியில்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதனைக்கண்டு மனம் வருந்தினார் காந்தி. உடனடியாக தனது மேலாடையை கலைந்த அவர் அரை ஆடைக்கு மாறினார். இந்திய மக்கள் அனைவரும் எப்போது மேலாடை அணியும் நிலைக்கு முன்னேறுகிறார்களோ அப்போது தான் நானும் மேலாடை அணிவேன் என உறுதிபூண்டார். அன்று துவங்கி தன் இறுதிநாள் வரைக்கும் அரை ஆடையுடனேயே வாழ்ந்தார் மஹாத்மா.
1934 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரைக்கு வந்திருந்த போது மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முற்படும் போது உடன் வந்த அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கக்கன் தான் ஒரு தலித் என்பதனால் தன்னால் கோவிலுக்குள் வர இயலாது என காந்தியிடம் தெரிவித்தார். இதனை அடுத்து காந்தி அவர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லாமல் வாசலோடு திரும்பிவிட்டார். இதனை அடுத்து தான்வைத்தியநாத ஐயர், கிருஷ்ணசாமி பாரதி உள்ளிட்ட பலரால் கோவிலுக்குள் நுழையும் போராட்டம் துவங்கிற்று. பின்னாளில் அனைத்து மக்களும் உள்ளே நுழையும் போராட்டம் வெற்றி பெற்றது.
பொதுவாக சிலை வழிபாட்டை விரும்பாதவர் காந்தி என்றபோதிலும் கூட அவர் 1946 ஆம் வருடம் பிப்ரவரி 7 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தபோது முழுமையான தெய்வீகத்தை உணர்ந்ததாக தெரிவித்ததாக தமிழ்நாட்டில் காந்தி எனும் புத்தகத்தில் ராமசாமி என்ற எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார்.
மஹாத்மா காந்தி அவர்கள் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது பெருவாரியான மக்கள் கூட்டம் திரளுமாம், ஒருசமயம் ஒழுங்கற்று இருந்த கூட்டத்தை பார்த்து கோவப்பட்டு பேச மறுத்துவிட்டார் காந்தி. ஆனால் அடுத்த நாளே ‘நான் ஒரு பொறுமையற்ற குழந்தையைப் போல நடந்து கொண்டேன், அதற்காக நான் வருந்துகிறேன்’ என வருத்தம் தெரிவித்தார்.
மஹாத்மா காந்தி அவர்கள் மறைவுக்கு பிறகு இந்தியா முழுமைக்கும் காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் 7 இடங்களில் துவங்கப்பட்டது. தென்னிந்தியாவில் மதுரையில் மட்டுமே அத்தகைய நினைவு அருங்காட்சியகம் அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக மஹாத்மா காந்தி அவர்கள் சுடப்பட்டபோது அவரது ரத்தம் படிந்த வேட்டி மதுரை அருங்காட்சியகத்தில் தான் இருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங், தலாய்லாமா உள்ளிட்ட புகழ்பெற்ற தலைவர்கள் இங்கே வருகை புரிந்து புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
இதுதவிர காந்தியின் வழியில் நின்று விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால் என்.எம்.ஆர். சுப்பராமன் அவர்கள் மதுரை காந்தி என்று மதுரை மக்களால் அழைக்கப்பட்டார்.
இன்னும் பல வரலாற்று கட்டுரைகள் இங்கே படிக்கலாம்
மார்ட்டின் லூதர் கிங்கும் பேருந்து புறக்கணிப்பு போராட்டமும்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!