போதிய கல்வி பெறாமல் வாழ்க்கையில் ஜெயித்த பலர் “வாழ்க்கையில் ஜெயிக்க கல்வி அவசியமில்லை” என்ற கருத்தை விதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து பேசலாம்.
“சாதிக்க படிப்பு அவசியமில்லை” என்கிற பரவலான வாசகத்தை கேட்கும் பல பள்ளி மாணவ மாணவியரும் இளைஞர்களும் “சாதிக்க, வாழ்க்கையில் முன்னேற நன்றாக படிக்க வேண்டிய அவசியமில்லை” என புரிந்துகொள்கிறார்கள். ஆனால், சாதிக்க படிப்பு அவசியமில்லை என்பது கல்வி பயிலும் வாய்ப்புள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது அல்ல என்பதையும் அது போதிய கல்வி அறிவு பெற முடியாதவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதையும் மாணவ மாணவியர் உணர வேண்டும்.
கட்டாயம் படிக்க வேண்டுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் ” நிச்சயமாக ” என்பதாகவே இருக்கும்.
வாழ்க்கையில் சாதிக்க கல்வி அவசியமில்லை என்ற கருத்தை பரவலாக சிலர் விதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாகவும் பணக்காரர்களாகவும் இருப்பதால் அவர்கள் சொல்வதை நம்பிக்கொண்டு வாதடும் சில இளையோரும் இருக்கவே செய்கிறார்கள். உண்மைதான், அவர்கள் பெரிதாக படிக்காமலேயே கூட சாதித்து இருக்கலாம். ஆனால் ஒன்றை உணர்ந்துகொள்ளுங்கள் வெகு வெகு சிலர் தான் கல்வி அறிவு இல்லாமலேயே சாதித்தவர்கள். ஆனால், நன்றாக படித்து கல்வி அறிவை வளர்த்துக்கொண்ட எண்ணற்ற நபர்கள் வாழ்க்கையில் பெரிதாக சாதித்துகொண்டே இருக்கிறார்கள். நீங்கள் வெகு சிலரின் அறிவுரையை ஏற்க போகிறீர்களா அல்லது பலரின் வெற்றியை ஏற்க போகிறீர்களா?
நமக்கு முந்தைய சில தலைமுறைகளில் பிறந்த குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனி. ஆனால், இப்போது அப்படி அல்ல, நீங்கள் கல்வி கற்க பல வாய்ப்புகள் உண்டு. இந்தத் தலைமுறை பெற்றோர்கள் வீட்டு வேலை செய்தேனும் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். இந்தத்தலைமுறை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தங்களது வருமானத்தில் பெரும்பகுதியை விருப்பத்தோடு செலவு செய்கிறார்கள். இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு, தூங்க நல்ல வீடு, சாப்பிட நல்ல உணவு, புதிய ஆடைகள் என சகலமும் கிடைக்கிறது. அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு நாம் நமது பெற்றோர்களுக்கு செய்ய வேண்டியது ” நன்றாக படிப்பது மட்டுமே “.
சிபிஎஸ்இ பள்ளியில் படித்தால் தான் வெற்றி பெற முடியும், மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தால் தான் பெரும் பதவிகளுக்கு செல்ல முடியும் என்ற வெற்று பிதற்றல்களை எல்லாம் தூர தூக்கி வீசிவிடுங்கள். உங்களது பெற்றோரால் எந்த பள்ளியில் சேர்க்க முடிகிறதோ அங்கே சேர்ந்து படியுங்கள். அங்கிருக்கும் மாணவ மாணவியரில் முதன்மையானவர் என பெயர் எடுக்க முயற்சி செய்யுங்கள். எந்தப்பள்ளி என்பது அடுத்த விசயம் தான், நீங்கள் எந்த அளவு முயற்சி செய்து படிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். இன்று முக்கியமான பதவிகளை அலங்கரித்துகொண்டு இருக்கும் பலர் அப்படி படித்தவர்கள் தான்.
ஆகவே, கல்வி தேவையில்லை என சொல்வோரை நம்பாதீர்கள். நன்றாக படியுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்!
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!