Site icon பாமரன் கருத்து

How does NEET exam work? | மருத்துவ சேர்க்கையில் நீட் எப்படி செயல்படுகிறது?

Neet Exam Procedure in Tamil, neet exam admission in tamil, neet exam cutoff marks, neet exam, neet exam details, neet

All about neet exam in tamil | Video

நீட் தேர்வு என்பது தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. நீட் தேர்வுமுறை குறித்து பலருக்கும் சரியான தகவல் சென்று சேராத நிலையில் “மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வின் பங்கு என்ன?” என்பது குறித்து தான் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவில் பிறந்த ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை பெற்று இருப்பது அவசியம். முன்பெல்லாம் இங்கு இடம் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து வந்தார்கள். ஆனால் தற்போது, வெளிநாடுகளில் இந்தியர் ஒருவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் கூட அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை பெற்று இருக்க வேண்டும்.

நாம் இந்தக் கட்டுரையில் பார்க்க இருப்பவை,

>> நீட் தேர்வு ஒரு அறிமுகம்

>> நீட் தேர்வு முடிந்த பிறகு நடக்கும் கலந்தாய்வு

>> மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் இடங்கள்

>> என்னென்ன சான்றிதழ்கள் அவசியம்

>> நீட் தேர்விலும் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது?

>> தமிழகத்தில் ஏன் இந்த எதிர்ப்பு?

நீட் தேர்வு ஒரு அறிமுகம்

நான் ஏற்கனவே தெரிவித்தது போல இந்தியர் ஒருவர் MBBS, BDS, ஆயுர்வேத மருத்துவம் [BAMS/BUMS/BYMS/BSMS/BHMS] படிக்க வேண்டுமெனில் அவர் நீட் தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்ணை வாங்கியிருப்பது அவசியமாகிறது. ஒரு மாணவர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் கூட நீட் தேர்வு அவசியமாகிறது.

நீட் தேர்வில் பொது பிரிவு மாணவர்களுக்கு 50% மதிப்பெண், SC/ST/OBC மாணவர்களுக்கு 40% மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக வைக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வு மொத்தமாக 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது.


நீட் தேர்வு முடிந்த பிறகு நடக்கும் கலந்தாய்வு

நீட் தேர்வு முடிந்த சில வாரங்களுக்கு பிறகு விடையை தேர்வு நடத்தும் அமைப்பு வெளியிடும். அதனை வைத்துக்கொண்டே மாணவர்கள் தாங்கள் எவ்வளவு மதிப்பெண் பெறுவோம் என்பதை கண்டறிந்துவிடுவார்கள். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட முடிவுகளைக்கொண்டு இந்திய அளவில் தங்களது நிலை குறித்தும் அவர்களால் அறிந்துகொள்ள முடியும். அதனை வைத்துக்கொண்டே பல மாணவர்கள் எந்த கல்லூரியில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்துவிடுவார்கள். நீட் தேர்வு முடிந்த பிறகு தகுதி மதிப்பெண்ணை ஒரு மாணவர் பெற்றுவிட்டால் அவரால் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

>> தகுதி மதிப்பெண்ணை பெறுதல்

>> விண்ணப்பித்தல்

>> கலந்தாய்வில் கலந்துகொண்டு இடத்தினை பிடித்தல்

மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் இடங்கள்

அரசு மருத்துவ கல்லூரிகளில் 15% இடங்கள் “இந்திய அளவிற்கும்” ஆங்கிலத்தில் இதனை All India Quota என சொல்லுவார்கள், மீதமுள்ள இடங்களை [85%] அந்தந்த மாநில மாணவர்களுக்கும் கொடுப்பார்கள். அதேபோல மத்திய அரசு நடத்தக்கூடிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் All India Quota விற்கு செல்லும். All India Quota இடங்களுக்கான கலந்தாய்வை சுகாதார சேவைகள் இயக்குநரகம் [Directorate General of Health Services] நடத்தும். மாநில அரசுகளுக்கு இருக்கும் 85% இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்தும்.

[ஆந்திராவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15% இடங்கள் மத்திய அரசுக்கு கொடுக்கப்படுவதில்லை என சொல்லப்படுவது உண்டு. தற்சமயம் மாற்றம் வந்திருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் ஒரு மாநில அரசு அப்படி செய்தால், அந்த மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யாது. அதேபோல அந்த மாநில மாணவர்களால் All India Quota விற்கு விண்ணப்பிக்க முடியாது]

ஜூலை 2019 வாக்கில் மட்டும் தமிழக்தில் இருக்கும் மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 7150. இதில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் 3400 இடங்கள், 23 தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் 3750 இடங்களும் அடங்கும். இதுதவிர 9 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டால் கூடுதலாக 1350 இடங்கள் கூடும் பட்சத்தில் 8500+ இடங்களுக்கு மேல் மருத்துவ இருக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கும்.

என்னென்ன சான்றிதழ்கள் அவசியம்

ஒரு மாணவர் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்ணை பெற்றுவிட்டால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். அப்படி அழைக்கப்படும் போது பின்வரும் சான்றிதழ்களை கொண்டு செல்வது அவசியம், NEET admit card 2020 [நீட் அழைப்பு கடிதம்] NEET rank letter [நீட் ராங்க்] Class 10 or 12 certificate and mark sheet ID Proof Domicile Proof (only for state quota seats) [குடியேற்ற சான்று]

நீட் தேர்விலும் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது?

நீங்கள் மருத்துவம் படிக்க விரும்பினால் நிச்சயமாக நீட் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை நீங்கள் அதிக மதிப்பெண்ணை பெற்றும் உங்களைவிட அதிக மதிப்பெண் பலர் பெற்று இருப்பதனால் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும் போது மாணவர்கள் கவலைப்பட கூடாது என அறிவுறுத்துகிறார்கள் வல்லுநர்கள். இந்த ஆண்டு சரியான மதிப்பெண்ணை பெற முடியாத மாணவர்கள் அடுத்த ஆண்டு தேர்வில் கலந்துகொள்ளலாம். உங்களுக்கு தேவைப்படுகிற ஒரு இடத்திற்கு இங்கே 60,000 இடங்கள் இருக்கின்றன.

ஆகவே விட்டுக்கொடுக்காமல் போட்டி போடுங்கள் என்பதே பலரின் கருத்து. நீட் தேர்வு தேவைப்படாத மருத்துவம் சார்ந்த படிப்புகள் இங்கே இருக்கின்றன, மருந்தகம், நர்சிங், பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங், தடய அறிவியல், மருத்துவ உளவியல், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர், ஆப்டோமெட்ரி ஆகவே இவற்றில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

சில கேள்விகளும் பதில்களும்

நீட் தேர்வை ஒருவர் எத்தனை முறை எழுதலாம்?

இதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதலாம்

நீட் தேர்வை தமிழகம் ஏன் எதிர்க்கிறது?

மருத்துவத்தின் தரத்தை மேம்படுத்திட நீட் போன்ற தேர்வுகள் அவசியமானது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் ஒரு ஏழை மாணவர் நீட் தேர்வு எழுதும் போது வேறு பாடத்திட்டங்களில் [உதாரணத்திற்கு CBSE] இருந்து கேள்விகள் கேட்கப்படுவது நியாயமா? என்பதும் அப்படி கேட்கப்படுவதனால் ஏழை மாணவர்களால் தனியாக பயிற்சி மையங்களுக்கு சென்று லட்சங்களில் பணம் கட்டி படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதே, இது ஏழை மாணவர்களால் முடியுமா? என்பதும் தான் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்ப்பதற்கு மிக முக்கியக்காரணம்.

மாநிலக்கல்லூரிகளில் 85% இடங்கள் அந்த மாநில மாணவர்களுக்கு தானே வழங்கப்படுகிறது, பிறகு ஏன் எதிர்ப்பு?

இது சரியான கேள்வி, நல்ல முன்னேறிய நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவரால் தனியாக கோச்சிங் சென்று படித்து நல்ல மதிப்பெண்ணை வாங்கிட முடியும். சாமானிய மக்களால் அது முடியாது. சாமானிய மக்களின் பிள்ளைகள் கடினமாக படித்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணை பெற்றாலும் கூட அவர்களால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்ணை பெற முடியாது. ஆகவே அவர்களால் மருத்துவம் படிக்க முடியாது. இதுவே எதிர்க்க காரணம்.

நீட் தேர்வையே நீக்கி விடலாமா?

நீட் தேர்வையே நீக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக, ஏழை மாணவர்களும் படிக்க முடிகின்ற ஒரு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகளை கேளுங்கள். மாற்று பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகளை கேட்காதீர்கள் என்பது தான் இங்கே முக்கியக்கோரிக்கை. மாநில அரசு ஒரு தேர்வை நடத்தி மதிப்பெண்ணை வழங்கிய பிறகு இன்னொரு தேர்வு அவசியமா என்றதொரு கேள்வியும் எழவே செய்கிறது.

இதுபோன்ற பதிவுகளை தவறாமல் படிக்க எங்களுடைய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்திடுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version