Site icon பாமரன் கருத்து

திமுக கொள்கைகளை இழந்தால் அழிவு தான்

எந்தவொரு பொருளாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் அதனால் தேவை இருக்கின்றபட்சத்தில்தான் மக்களால் அது விரும்பப்படும் , மக்களின் ஆதரவு கிட்டும் . ஒருவேளை பயனில்லை என மக்கள் உணர்ந்துவிட்டால் ஆதரவை விலக்கிக்கொள்வார்கள் , சமரசம் எதுவும் செய்திட மாட்டார்கள் .அதற்கு திமுகவும் விதிவிலக்கல்ல .

 

தேவைதான் இருப்பிற்கான அவசியத்தை நிர்ணயிக்கிறது

 

திராவிட கழகத்திலிருந்து திமுக பிறந்தபோது அதற்கு வெறுமனே பெரியார் திருமண விசயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினை மட்டும் கூற இயலாது . அண்ணா பெரியார் இருவரது கொள்கைகளிலும் கருத்துக்களிலும் ஏற்பட்ட மாறுபாட்டின் விளைவு பெரியார் மணியம்மை திருமணத்தை பயன்படுத்திக்கொண்டு வெளிவந்தது  என்றாகவே நான் பார்க்கின்றேன் . அதுவும் நன்மையாகத்தான் முடிந்திருக்கிறது .

 

karunanidhi and anna

 

திமுக பிறந்தபோது அண்ணாவை நம்பியோ கருணாநிதி போன்றவர்களை நம்பியோ மக்கள் அந்த இயக்கத்தின்பின்னால் போகவில்லை . கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டுதான் மக்கள் அதன்பின்னால் சென்றார்கள் . அந்த கொள்கைகளை திமுக கொண்டிராமல் வெறும் அண்ணா என்கிற ஆளுமையை மட்டுமே கொண்டிருந்து உருவாகியிருந்தால் அண்ணா மறைந்தபோதே அக்கட்சியும் சிதறிப்போயிருக்கும் , ஜெயலலிதாவிற்கு பிறகான அதிமுக போல .

 

ஆனால் தமிழுக்கும் தமிழர்களுக்கான  அடையாளத்தை காக்கின்ற கட்சியாகவும் , சாதிய கட்டமைப்புகளை உடைத்தெறிந்து கீழேயுள்ள மக்களை முன்னேற செய்கின்ற கட்சியாகவும் , மாநில சுயாட்சியை காக்கின்ற கட்சியாகவும் சமூக சமத்துவத்தை கொடுக்கவல்ல கட்சியாகவும் தன்னை கொள்கை ரீதியாக நிறுத்திக்கொண்டபடியால்தான் அண்ணாவுக்கு பிறகும் அக்கட்சிக்கான தேவை தமிழகத்தில் தேவைப்பட்டது .

 

அண்ணா மற்றும் பெரியார்

 

பெரியாரை பின்பற்றிய அண்ணா அவர்களும் அண்ணாவை பின்பற்றிய கருணாநிதி அவர்களும் கட்சியின் கொள்கைகளை உயிர்ப்போடு  வைத்துக்கொண்டு அதனை நொக்கியே தங்களது பயணங்களை தொடர்ந்தார்கள்.

 

திமுக தனது கொள்கைப்பிடிப்புகளில் இருந்து வலுவிழந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழவே செய்கின்றது . ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டுவதை மட்டுமே தான் உருப்படியாக செய்து வருகின்றது . திமுகவின் அடித்தளமான “படிப்பகங்கள்” எங்கே போனதென எவருக்கும் தெரியவில்லை , அதை ஒருவரும் யோசிக்கவும் இல்லை , நடத்திட எவரும் முன்வரவும்  முயலவில்லை . சாதிய கட்டுமானங்களை உடைக்க இப்போது திமுக என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை .

 

சாதிய கட்டுமானங்களை தகர்க்க திராவிட கழகம் செய்கின்ற கருத்தரங்கு , போராட்டம் போன்றவற்றினை கூட திமுக தற்போது செய்வதில்லை . வெறுமனே அன்றாட பிரச்சனைகளுக்கு மட்டுமே அடையாளமாக சில போராட்டங்களை நடத்துகிறார்கள் . இதனை நேற்று பிறந்த புதிய கட்சியினரும் தான் செய்கிறார்கள் . இவற்றிலிருந்து மாறுபட்டு மாற்றில்லாத கட்சியாக திமுக உயர்வது எப்படி என்பதே அடுத்த தலைமுறைக்கு திமுகவை கொண்டு சேர்க்கும் .

 

இதில் தற்போது குடும்ப சண்டைகள் வேறு ….திமுக குடும்ப உறுப்பினர்களை இழப்பதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை . கொள்கைகளை இழக்காமல் போனால் கருணாநிதி அவர்களின் குடும்பத்தை சாராத ஒருவரால் கூட திமுகவை வழிநடத்தி சென்றிட முடியும் .

 

தன்னுடைய இருப்பிற்கான அவசியத்தை உணர்த்தி பல ஆண்டு நீளுமா திமுகவின் பயணம் ?
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version