Site icon பாமரன் கருத்து

சோபியா செய்தது சரியா? நடுநிலையோடு சிந்தியுங்கள் | How can you say Sophia was right?

கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் சோபியா அவர்கள் கடந்த திங்களன்று தூத்துக்குடி விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழிசை அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதிலும் பெரும் அரசியல்தலைவர்கள் முதல் சாதாரண மனிதன் வரை சோபியா மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறார். இந்த விசயத்தில் மிகப்பெரிய ஆதரவு சோபியா அவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பு தமிழிசை அவர்களுக்கும் பொதுவெளியில் கிளம்பின.

நடுநிலையோடு சிந்தித்து பார்த்தால், முதல் தவறை சோபியா அவர்களிடம் கண்டதனால் ‘ “சிந்தனையை தூங்கவைத்துவிட்டு பாஜகவை மட்டும் எதிர்த்தால் போதும் என சோபியாவின் பக்கம் நிற்கும்” உங்களின் வசவுகளை வாங்க தயாராகிக்கொண்டே இந்த பதிவினை எழுதுகிறேன்.


விமானம் போராடுவதற்கான களமா?

சோபியா தமிழிசை விவகாரத்தில் என்னை துளைத்தெடுக்கும் முதல் கேள்வி “விமான நிலையம் போராட்டக்களமா?” என்பதுதான். இந்த விவகாரம் தூத்துக்குடியில் நடந்ததனால் ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு” சம்பவத்தில் பெரும் துயரை சோபியா சந்தித்து இருக்கலாம், ஆகையால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் கோவத்தினாலும் ‘பாஜக தலைவர் தமிழிசை” அவர்களை கண்டவுடன் குரல் எழுப்பிவிட்டார் எனும் வாதத்தினை நான் ஏற்கிறேன். ஆனால் அதற்காக தேர்ந்தெடுத்த இடம் விமானம் என்பதனை தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

தமிழிசை மற்றும் சோபியா

மாற்றுக்கருத்து இருக்க வேண்டுமே தவிர ‘மோதல்’ இருக்க கூடாது என்பதனை தான் சிந்தனையாளர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால் விமானத்தில் சோபியா அவர்கள் செய்தது நிச்சயமாக மோதலுக்கு வழிவகுக்கின்ற செயலாகவே நான் கருதுகிறேன். மாற்றுக்கருத்து கொண்டவர்கள் எங்கு சென்றாலும் அங்கு இப்படித்தான் எதிர்க்குரல் கொடுப்போம் என்றால் இந்தியா முழுமைக்கும் எந்த தலைவராலும் வெளியில் செல்லவே முடியாது என்பதே உண்மை.


சோபியாவை பாராட்டுகிறேன் ஆனால் ….

சோபியா அவர்களின் செயலை விமர்சிக்கின்ற அதே நேரத்தில் யாரும் செய்யத்துணியாத செயலை சோபியா செய்திருக்கிறார். அந்த உணர்ச்சிமிகுந்த சோபியாவை நான் பாராட்ட தயங்கமாட்டேன். ஆனால் அவர் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய தேர்ந்தெடுத்த இடத்தை தான் நான் தவறென பார்க்கிறேன். நிச்சயம் இதனை சோபியா அவர்கள் உணர்வார்கள் என்றே நானும் நம்புகிறேன்.


போராட்டம், எதிர்ப்பு எப்படி இருக்க வேண்டும்?

மாற்றுக்கருத்து கொண்டவரது கருத்தினை நான் கேட்க விரும்பவில்லையெனில் அந்த இடத்தில் இருந்து செல்லும் வாய்ப்பு அடுத்தவருக்கு இருக்கின்ற பட்சத்தில் பிரச்சனை வர வாய்ப்பில்லை. விமானம் போன்ற பயணம் செய்யக்கூடிய இடங்களில் விரும்பாவிட்டாலும் வெளியில் சென்றுவிட முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாற்றுக்கருத்தை முன்வைப்பது மிக மிக தவறே.

மாற்றுக்கருத்து கொண்டவர்களால் நிரம்பி வழிகிறது இந்தியா. இப்படிப்பட்ட தேசம் இன்றும் பயணித்துக்கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களுக்குள் “கருத்து மோதல்” மட்டுமே நடைபெறுகிறது என்பது தான். ஒருவேளை என்றாவது அந்த மோதல் ‘நேரடியானதாக’ இருந்தால் இந்தியா பயணிப்பதை நிறுத்திவிடும்.

டெல்லியில் உள்ள தலைவர்களை போல தமிழகத்தில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள் நம் மக்கள். டெல்லியில் இருக்கும் தலைவர்களிடையே ‘கருத்து மோதல்’ மட்டுமே இருப்பதனால் தான் அவர்களால் இணைய முடிகிறது. ‘நேரடி மோதல்’ இருப்பதனால் தான் தமிழகத்தில் இருக்க முடிவதில்லை. இதுதான் உண்மை.

சோபியா போன்றவர்கள் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக நிற்கின்ற பட்சத்தில் அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் போராட்டத்தை முன்னெடுக்கலாம். அதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுக்கொடுக்கும் பாடமாக கருதுகிறேன்.


தமிழிசை அவர்கள் செய்தது சரியா?

தமிழிசை போன்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு பொறுமை இருக்க வேண்டும் என கூறுகிறார்கள். உண்மைதான் அரசியல் கட்சி தலைமைகளுக்கு இருக்க வேண்டிய பண்பு தான். ஆனால் போலீசாரிடம் வழக்கு கொடுப்பது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றே கருதுகிறேன்.. தற்போது தமிழகத்தில் ஒரு கலாச்சாரம் பெருகி வருகிறது, அது என்னவென்றால் ‘எவ்வளவு பெரிய தலைவரையும் அறியாமல் கண்டமேனிக்கு விமர்சிப்பது, திட்டுவது, மீம்ஸ் போடுவது”. எவ்வளவு சிறிய கட்சியாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே, அதற்கான மரியாதையை கூட நாம் கொடுக்க வேண்டாமா? இதனை நாம் செய்கிறோமா?


சமூக வலைத்தளத்தில் வந்த கேள்விகளும் என்னுடைய பதில்களும்,

பாஜகவை எதிர்ப்பவருக்கு ஏதாவது பின்னனி புகுத்துவதுதான் கேவலமான நிலைப்பாடு?

சிலர் அப்படியும் செய்யத்தான் செய்கிறார்கள். ஆனால் பொதுமக்களும் யார் என்ன சொன்னாலும் நம்பி விடுகிறோமே? அதனை யாரிடம் போய் சொல்லுவது? கொஞ்சம் பொறுமையாக, நிதானமாக சிந்திக்கும் மனநிலைக்கு பொதுமக்கள் வராவிட்டால் பின்னனி முன்னனி என அனைத்தையுமே புகுத்துவார்கள். சோபியா பின்னனி கொண்டவரோ இல்லையோ அவர் போராட்டக்களமாக விமானத்தை தேர்ந்தெடுத்தது தவரிக்கப்பட வேண்டியது.


இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்த பகத்சிங்கின் குரல் சரியென்றால் இதுவும் சரியே?

பகத்சிங் அந்நிய நாட்டின் அடிமை தனத்தில் இருந்து விடுபட செய்த ‘மிகப்பெரிய தைரியமான செயலை’ சோபியா அவர்களின் செயலோடு ஒப்பிடுவது சரியாகாது.


தமிழசை வாழ்க, பாஜக வாழ்க என விமான நிலையத்தில் கோசம் போடுவது தவறில்லையா?

பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதிக்கப்படாத எதனை யார் செய்தாலும் தவறுதான். ஆனால் இன்று ஒன்றினை தவறென்று சொன்னால் அப்போ அது தவறில்லையா என அடுத்த தவறை துணைக்கு அழைக்கிறோமே தவிர, தவறை தவறென்று சொல்ல மறுக்கிறோம்.


ஸ்டாலின், பாரதிராஜா போன்ற பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?

ஆமாம் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்லும் வழிகளில் யாரேனும் இப்படி கோஷமிட்டாலோ அல்லது கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்தாலோ ஆதரிப்பார்களா? என்பதுதான் கேள்வி.


உங்களுக்கு முரண்பாடு இருந்தால் வரவேற்கிறேன். உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள், அதனை விடுத்து நாளை நான் செல்லும் இடங்களில் கேள்வி கேட்காதீர்கள். இப்போது என் கருத்து புரியுமென்று நம்புகிறேன்.


பாமரன் கருத்து

பாமரன் கருத்து
Exit mobile version