மெரினா பீச், சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, எம்ஜிஆர் சமாதி, அண்ணா நூற்றாண்டு நூலகம், கேன்சர் இன்ஸ்டிடியூட், டைடல் பார்க், வண்டலூர் பூங்கா என அடையாளங்களோடு கோடிக்கணக்கான மக்களை முன்னேற்ற துடித்துக்கொண்டு இருக்கிறது நம்ம சென்னை
இன்று ஆகஸ்ட் 22,2019 சென்னைக்கு 380 வது பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. நான் சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலில் சென்னை பல மாறுதல்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிலையில் இருப்பவருக்கும் ஏதுவாக சென்னை தன்னை வேறுபடுத்திக்கொண்டு காட்டுவதில் வல்லமை கொண்டதாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். இங்கே அன்றாடம் 100 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் பெருகிறவர் வாழ்வதற்கான சூழலும் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 கோடி சம்பாதிப்பவர் வாழ்வதற்கான சூழலும் இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து தர மக்களையும் தன்னகத்தே கொண்டு மிகவும் வெற்றிகரமாக தனது சுற்றளவை வெற்றிகரமாக சென்னை விரிவுபடுத்திக்கொண்டே செல்வதாகத்தான் நான் பார்க்கிறேன்.
செயின்ட் சார்ஜ் கோட்டை முதல்…
சென்னையின் பிறந்தநாளாக ஆகஸ்ட் 22,1639 கருதப்படுகிறது. அன்றுதான் மாற்று இடம் தேடி அலைந்த பிரான்சிஸ் டே சென்னை கடற்கரையின் மேட்டுப்பகுதியை விலைக்கு வாங்கினார். அதற்க்கு முன்னர் அந்த இடம் ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்தது. விலைக்கு வாங்கிய இடத்தில் கட்டப்பட்டது தான் செயின்ட் சார்ஜ் கோட்டை. பின்னர் அருகருகே குடியிருப்புகள் வரத்துவங்கின. பின்னர் மதராஸ் பட்டணம் என அந்தப்பகுதி அழைக்கப்பட துவங்கியது.
சென்னை மாகாணத்தில் அன்று திருவெல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்றவை கூட மிகச்சிறிய கிராமங்களாகத்தான் இணைய துவங்கின ஆனால் இன்று வியப்பாக இருக்கிறது, எது வரைக்கும் சென்னை என்ற வித்தியாசம் கூட தெரியாமல் இன்று ECR , OMR , வண்டலூர் என பல பக்கமும் சாலைகள் விரிந்து கிடக்கின்றன, உயர உயர கட்டடங்கள் முளைத்திருக்கின்றன.
ஆண்டுக்கு ஆண்டு சென்னை தனது எல்லையை உயர்திக்கொண்டே போகும் என்பதில் ஐயமில்லை, காரணம் சென்னையை மக்கள் மாற்றம் தருகிற இடமாக பார்க்கிறார்கள்.
ஏழையும் பணக்காரரும் ஒரே சென்னையில்…
ஆரம்பகாலத்தில் மிகக்குறைவான சம்பளம் வாங்கக்கூடிய சூழலில் அதற்கேற்றவாறு தங்குவதற்கு, மூன்றுவேளையும் உணவு உண்பதற்கு, ஆடைகள் எடுப்பதற்கு என கடைகள், விடுதிகள் இருந்தன. இப்போதும் அந்த சூழலில் கஷ்டப்படுகிறவர்களுக்காக அவை அப்படியே இருக்கின்றன. மாத சம்பளம் உயர்ந்த பிறகு அதற்கேற்றவாறு வாழுவதற்கு வேறு நிலையிலான கடைகள், வீடுகள் இருக்கின்றன. பல கோடிகளை சம்பாதிப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற சூழலும் இங்கே இருக்கின்றன.
சென்னையின் மிக அறிய சிறப்பம்சமே, இவர்களுக்குள் எங்கேயும் பிரச்சனை எழுவது இல்லை. அவரவர் தான் முன்னேற வேண்டும் என்ற முனைப்பிலேயே செயல்படுவதனால் ஆரோக்கியமான போட்டியுடன் கூட வாழ்க்கை தான் சென்னையில் நடந்துகொண்டு இருப்பதாக நான் பார்க்கிறேன்.
சென்னைக்கு நாம் செய்யவேண்டிய தொண்டு
380 வயதானாலும் மிகவும் சுறுசுறுப்பாக ஓடிக்கொன்டு இருக்கிறது சென்னை. தன்னை நம்பி வந்தவர்களை எப்படியேனும் வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என துடிக்கிறது சென்னை. எனது அப்பா சென்னையில்இருந்தார்கள் , நான் சென்னையில் இருக்கிறேன், எனது பிள்ளை சென்னைக்கு வருவான். இப்படி நமக்காகவே சென்னை இருக்கிறது.
நாம் சென்னைக்காக என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். தூய்மையான சென்னையை, அடுத்த தலைமுறைக்கு பயன்படும் விதத்திலான சென்னையை விட்டுச்செல்வது நமது முதல் கடமையாக நான் பார்க்கிறேன்.
செய்வோமா?
உங்களுடைய வாழ்க்கையில் சென்னை ஏற்படுத்திய தாக்கம், மாற்றம் என்ன? கமெண்டில் பதிவிடுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!