கடல் கடந்து இருக்கும் எனது பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை திருடிவிட்டீர்கள்
எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் போகும் பலர், எது நடந்தாலும் குறைந்தபட்சம் கவனித்துவிட்டு கவலைப்பட்டுவிட்டு போகும் பலர், அது ஏன் நடந்தது என கேள்வி கேட்கும் சிலர். இந்த சிலரில் ஒருவர் தான் கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றத்தினால் உலகிற்கு மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது என்பதனை தெரிந்துகொண்ட கிரேட்டா அது குறித்து மிகவும் கவலைப்படுகிறார். பருவநிலை மாற்றம் குறித்த கவனத்தை அதிகரிப்பதற்காக தன் நாட்டு (ஸ்வீடன்) நாடாளுமன்றம் முன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் போராட்டம் நடத்துவதில் துவங்கி அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் “How Dare You?” என ஒட்டுமொத்த உலகத்தலைவர்களை நோக்கியும் மிகப்பெரிய கேள்வியை வைத்தார். இது உலக அரங்கில் மிகப்பெரிய கவனத்தையும் விவாதத்தையும் உருவாக்கியது.
மறுபக்கம் கிரேட்டா தன்பெர்க் இன் மனநிலையை சம்பந்தப்படுத்தி அவரை இழிவு செய்திடும் விதமாக கருத்துக்களை பலர் தெரிவித்தார்கள். இதில் அமெரிக்க அதிபரும் ஒருவர்.
கிரேட்டா தன்பெர்க் பேசியது என்ன?
நாங்கள் உங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். இங்கு நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளன. நான் இப்போது இங்கு இருக்கக் கூடாது, கடல் கடந்து இருக்கும் எனது பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை.
இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை திருடிவிட்டீர்கள், எனது குழந்தைப் பருவத்தை திருடிவிட்டீர்கள் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், மக்கள் இறக்கிறார்கள். ஒட்டுமொத்த சூழலியலும் பாதிப்படைந்து இருக்கிறது. மிகப்பெரிய அழிவின் துவக்கத்தில் நாம் இருக்கிறோம் ஆனால் நீங்கள் பணம், பொருளாதாரம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என காட்டமாக பேசினார்.
உணர்ச்சிவசப்பட்ட கிரேட்டா தன்பெர்க்
வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ஏன் பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிவிட்டுப்போகும் தலைவர்களை கண்ட தேசத்தில் தன் மனதில் தோன்றிய குமுறல்களை அப்படியே வெளிப்படுத்திய கிரேட்டா தன்பெர்க் மனநலம் பாதிக்கப்பட்டவளாக காட்சி அளிக்கிறார், இப்படிப்பட்ட சிலரும் இந்த தேசத்தில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் கிரேட்டா தன்பெர்க் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் திட்டமிட்டு வைக்கப்படுவதாகவும் பரப்படுவதாகவும் கூறப்படுகிறது. எங்கே பொதுமக்கள் விழிப்படைந்து கேள்வி கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் கூட இப்படி கிளப்பிவிட்டிருக்கலாம்.
கிரேட்டா தன்பெர்க் உணர்ச்சிவசப்பட்டதில் ஆச்சர்யமே இல்லை. ஒரு சிறுமியால் தன்னந்தனியாக தனது நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு சென்று போராடுகிறார் என்றால் அவரது மனது எவ்வளவு தூய்மையானதாக இருந்திருக்க வேண்டும். தவறு நடப்பதை நினைத்து பொறுத்துக்கொள்ளாத மனம் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். அதனை சிந்தித்து பாருங்கள் மக்களே.
நம்ம ஊரிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்
7 ஆம் வகுப்பு படிக்கும் நதியா தனது தந்தையிடம் 8 மாதங்கள் பேசாமல் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இதனால் மனமுடைந்த தந்தை தன் மகளிடம் சென்று நான் என்ன செய்தால் பேசுவாய் என கேட்கிறார். அதற்க்கு தனது பள்ளிக்கு அருகே இருக்கும் குளத்தை சுத்தம் செய்து தந்தால் பேசுகிறேன் என கூறியிருக்கிறார். இதனைக்கேட்ட தந்தை சிவக்குமார் தன்னந்தனியாக குளத்தை சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார்.
இதில் தின்பண்டங்கள், ஆடைகள் போற்றவற்றிற்கு ஆசைப்படும் வயதில் குளத்தை சுத்தம் செய்யச்சொன்ன சிறுமியின் மனதை, குழந்தை சொல்லவிட்டாலே என யோசிக்காமல் குளத்தை சுத்தம் செய்த அப்பாவின் மனதை நாம் கேள்விக்கு உட்படுத்திட முடியுமா? முடியாது
சாலையில் வைத்திருக்கும் பேனர்களால் யாரோ தானே பாதிப்படைகிறார்கள் நமக்கு என்ன என கொஞ்சமும் யோசிக்காமல் இறங்கி அந்த இடத்திலேயே பேனரை கிழிப்பது, வழக்கு தொடருவது என தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளாரே அதற்காக பலரது எதிர்ப்பையும் சில சமயங்களில் அதனை விடவும் மோசமான நிலையையும் சந்தித்து இருக்கிறாரே திரு ட்ராபிக் ராமசாமி அவரது மனநிலையை கேள்வி எழுப்ப முடியுமா? முடியாது.
அதுபோலவே தான் கிரேட்டா தன்பெர்க் அவர்களின் மனநிலை பற்றியும் கேள்வி எழுப்பிடக்கூடாது. அப்படி கேள்வி எழுப்பினால் முதலில் சோதனை செய்திடவேண்டியது உங்களது மனநிலையைத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!