Site icon பாமரன் கருத்து

கோதாவரி – காவிரி நீர் இணைப்பு சாத்தியமா? | இதில் இருக்கும் சவால்கள் என்ன?

கோதாவரி - காவேரி நீர் இணைப்பு

கோதாவரி - காவேரி நீர் இணைப்பு

தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட கோதாவரி நதியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என நிதின் கட்கரி அறிவித்தார். நதிநீர் இணைப்பு சாத்தியமா? அதில் இருக்கக்கூடிய பல சவால்கள் என்னென்ன என்பதைத்தான் பார்க்க இருக்கிறோம்.
கோதாவரி - காவேரி நீர் இணைப்பு

2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தவுடன் தற்போது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய நிதின் கட்கரி அவர்கள் “என்னுடைய முதல் பணி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிநீரை தமிழகத்திற்கு கொண்டுவருவது தான்” என உறுதி அளித்தார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கூட கொடுக்காவிட்டாலும் முதலில் தமிழகத்திற்கு திட்டத்தை கொண்டுவர அமைச்சர் உறுதி அளித்திருப்பது குறித்த செய்திகள் வரவேற்பை பெற்றன. இந்த சூழலில் கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதிநீர் இணைப்பு சாத்தியமா என்ற கேள்வியும் இந்த நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய விசயங்களையும் தான் பார்க்க இருக்கிறோம்.

[இந்த கட்டுரையில் இருக்கும் செய்திகளில் தவறு இருப்பின் அதனை குறிப்பிடுங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்]

முதலில் நன்றி

நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியினை பாஜக கூட்டணி பெற்று இருந்தாலும் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியையே பெற முடிந்தது. இதனை தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர்கள் உட்பட அனைவருமே இனி தமிழகத்திற்கு ஒரு நல்ல திட்டமும் வராது, பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒன்றும் செய்யாது என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் அந்த கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக நிதின் கட்கரி அவர்கள் கோதாவரி கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு கொண்டுவருவேன் அதுவே எனது முதல் பணி என அறிவித்தார். சாத்தியமா இல்லையா வருமா வராதா நல்லதா கெட்டதா என்பதை தாண்டி இந்த சூழலில் இந்த அறிவிப்பை வரவேற்கலாம்.

கோதாவரி நீர் காவிரிக்கு எப்படி வரும்

தெலுங்கானா மற்றும் ஆந்திரா பகுதிகளில் ஓடக்கூடியது தான் கோதாவரி நதி. இந்த நதியினை கிருஷ்ணா நதியுடன் இணைத்து பின்னர் கிருஷ்ணா நதியினை பெண்ணாறுடன் இணைத்து பின்னர் பெண்ணாற்றின் கிளை நதியான பொன்னையாரை காவிரியுடன் இணைத்தால் கோதாவரி நீர் காவிரிக்கு வந்து சேரும்.  வேறு இணைப்புகளை அரசு தீர்மானித்து வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம்.

கோதாவரி – காவிரி நீர் இணைப்பு சாத்தியமா?

 

இக்காலத்தில் எதுவும் சாத்தியமே. அந்தவகையில் கோதாவரி நீரை காவிரிக்கு கொண்டுவருவதும் சாத்தியமே. ஆனால் அதற்காக நாம் இழக்கவேண்டியவை பல இருக்கின்றன. அவையே மிக முக்கிய சவாலை இந்த திட்டத்திற்கு தரும்.

பல ஆண்டுகளாகவே தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நதிநீர் இணைப்புதான் ஒரே வழி என பலரும் பேசிவந்தனர். ஆனால் மிகப்பெரிய அளவில் பணம் மற்றும் பிற இழப்புகள் ஏற்படும் என்பதனால் நதிநீர் இணைப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அத்தனை சவால்களையும் தாண்டி கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கக்கூடிய மிகப்பெரிய நதிநீர் இணைப்புத்திட்டமான போலவரம் நதிநீர் இணைப்புத்திட்டம் துவங்கப்பட்டது.  2004 ஆம் ஆண்டு இதற்கான முதல் கட்டுமானப்பணி துவங்கி இன்றுவரை தொடர்கிறது, இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த திட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

போலவரம் திட்டம் முடிவடையப்போகிறது என்பதனை எண்ணத்தில் கொண்டுதான் நிதின் கட்கரி தமிழகத்திற்கு கோதாவரி நதிநீர் கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியினை அளித்திருந்தார் எனில் கால்வாசி வேலை முடிந்துவிட்டதாக கருதலாம். இதற்க்கு அடுத்ததாக கிருஷ்ணா நதியோடு பெண்ணாற்றை இணைக்க வேண்டி வரும். பின்னர் பெண்ணற்றோடு காவிரியை இணைக்கவேண்டி வரும்.

 

நதிநீர் இணைப்பில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன?

>> சுற்றுசூழல் பாதிப்பு

 

குளம், குட்டைகளை போல அல்ல நதிகள். அவை இயற்கையாக உருவாகி தானே தனது வழியினை தேர்ந்தெடுத்து பரவி செல்பவை. ஒரு நதி இருக்கிறது எனில் அதன் பக்கவாட்டில் அதன் இயல்புக்கு ஏற்றவாறான சூழல்களை உருவாக்கி வைத்திருக்கும். நிலத்தின் தன்மை , மண்ணில் வாழும் கண்ணுக்கு தெரியாத உயிர்கள் , மரம் , செடி , கொடி , பிற உயிரினங்கள் என அனைத்தும் அந்த நதியின் இயல்பிலேயே இருக்கும். ஒரு நதியை இன்னொரு நதியுடன் இணைக்கும் போது அந்த இடத்தில் மிகப்பெரிய சுற்றுசூழல் மாற்றங்கள் நடக்கும் என அறிவுறுத்துகிறார்கள். குறிப்பிட்ட அந்த மண் தனக்கான இயல்பினை இழந்துவிடுவது துவங்கி பல்வேறு மாற்றங்கள் நடக்கும். அவை மிகப்பெரிய பாதிப்புகளை நிச்சயமாக உருவாக்கும்.

 

>> தேவையான நிலம் மற்றும் இடப்பெயர்வு

 

பல நூறு கிலோமீட்டருக்கு நதியினை இணைக்க புதிய இணைப்பு நதியை உருவாக்கிட, பின்னர் அணை போன்றவற்றினை நிறுவிட வேண்டும் எனில் அதற்கு அதிக அளவிலான நிலம் தேவை. நிலத்தோடு மட்டும் அல்லாமல் மக்களை இடப்பெயர்வும் செய்யவேண்டி இருக்கும். அந்த எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும் என்பது போலவரம் திட்டத்தில் நடந்த இடப்பெயர்வுகளை கவனிக்கும் போது தெரிய வருகிறது.

 

 

>> நீடித்த பலன் கிட்டுமா

 

போலவரம் நதிநீர் இணைப்புத்திட்டத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள தொகையானது ரூ 55,548 கோடி. தமிழகத்திற்கு கோதாவரி நதியை கொண்டுவர வேண்டும் எனில் இன்னும் இரண்டு இடங்களில் நதிநீர் இணைப்புப்பணியினை மேற்கொள்ள வேண்டும். இன்னும் ஆய்வுகளும் திட்டங்களும் துவங்கப்படாத சூழலில் லட்சம் கோடிகளை செலவு செய்தால் மட்டுமே தமிழகத்திற்கான நதிநீர் இணைப்பு சாத்தியம்.

 

சரி அத்தனையும் செய்து நதிகளை இணைத்துவிடுகிறோம். எதிர்பார்த்த நீர் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால் கோதாவரி நீரானது ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளை கடந்துதான் தமிழகத்திற்கு வந்துசேர வேண்டும். அப்போது அதற்கு இடையூறாக மாநில அரசுகள் இருக்காது என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியுமா?

 

ஒவ்வொரு பகுதியிலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வெள்ளம் ஏற்படும். நாம் அதனை எண்ணத்தில் வைத்துக்கொண்டுதான் நதிகளை இணைத்துவிட்டால் வீணாகும் நீரை வறண்ட பகுதிகளில் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாமே என எண்ணுகிறோம். ஆனால் நாம் ஒரு விசயத்தை கவனிக்க மறந்துவிடுகிறோம், நீர் வாராத காலங்களில் நீர்வழிப்பாதையை யார் பராமரிப்பது? அதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும் என்பதனைதான்.

 

இவற்றை கணக்கில் கொண்டால் நாம் செலவு செய்தவைக்கு ஈடான பலனை நாம் பெற முடியுமா என்பது சந்தேகமே.

என்னதான் தீர்வு?

நமது முன்னோர்கள் நமக்காக உருவாக்கி வைத்திருந்த குளம், குட்டை, சதுப்பு நிலங்கள், காடுகள் இவற்றை மீட்டு அவற்றை முறையாக பயன்படுத்தி , பெய்கின்ற மழைநீரை வீணாக்காமல் சேமித்து வைக்க துவங்கினாலே முக்கால்வாசி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியும். இவற்றை செய்யாமல் நதிகளை இணைத்துவிட்டால் மட்டுமே பிரச்சனைகள் முடிந்துவிடும் என எண்ணினால் நம்மை விட முட்டாள்கள் இருக்க மாட்டார்கள்.

 

நாட்டில் பல நீர் மேலாண்மை வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத விதம் தண்ணீர் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து ஆராயவேண்டும்.

 

நதிநீர் இணைப்பு வெறும் குழாய்களை இணைப்பது போன்று எளிதானதும் அல்ல, பிரச்சனைகளை உண்டு பண்ணாததும் அல்ல.

 

பூமி நமக்கானது மட்டுமே அல்ல ! இதனை உணர்வோம்.

 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version