Site icon பாமரன் கருத்து

மதுரை மக்களே தேவயானிக்கு உதவுங்கள் | 600 க்கு 500 மார்க் எடுத்த குறி சொல்லும் தொழிலாளியின் மகள்

கல்வி அல்லாது வேறொன்றால் ஏழை மக்களின் நிலையினை உயர்த்திவிட முடியாது. பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தில் இருந்து வரும் பிள்ளைக்கு உதவவேண்டியது அனைவரின் கடமையும் கூட.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் குறி சொல்லும் தொழில் செய்துவரும் கணேசன் மற்றும் லெட்சுமி ஆகிய இருவருக்கும் 6 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாக பிறந்தவர் தான் தேவயானி. கொரோனா பிரச்சனையில் பல்வேறு தொழில்களும் முடங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில் குறிசொல்லும் பிழைப்போரின் நிலையும் பரிதாபமான சூழ்நிலையை அடைந்திருக்கிறது. அண்மையில் வெளியான 12 ஆம் பொதுத்தேர்வில் தேவயானி 600 க்கு 500 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்த செய்தி வெளியானது.

அன்றாடம் நிரந்தர வருமானம் கிடைக்காத, வெவ்வேறு இடங்களுக்கு சென்று தொழில்செய்து பிழைக்கிற பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறந்திருந்தாலும் கூட கடுமையான முயற்சியினால் 500 மதிப்பெண்கள் பெற்று சாதித்து இருக்கிறார் தேவயானி என்ற செய்தி மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அண்மையில் இவர் தனது மேற்படிப்பிற்காக மதுரை ஆட்சியரிடம் உதவி கேட்கபோவதாக வெளியான செய்தி சற்று வேதனை அளிக்கிறது.

இவரின் முகவரி, தந்தையின் தொலைபேசி எண் உள்ளிட்டவை இருந்தால் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களோடு நாங்களும் உதவி செய்திட தயாராக இருக்கிறோம்.

மதுரை ஒரு அற்புதமான ஊர், பல நல்ல உள்ளங்களை கொண்டிருக்கும் ஊர். அப்படிப்பட்ட ஊரில் இருக்கும் நல்லவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் ஒரு பெண் பிள்ளைக்கு உதவிட வேண்டியது அவசியமான ஒன்று. இன்று இந்த பெண் பிள்ளைக்கு கல்வி கிடைக்க உதவி செய்து முன்னேற செய்துவிட்டால் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையே நல்ல நிலைக்கு சென்றுவிடும். அதே சமுதாயத்தில் இருக்கும் பிற பிள்ளைகளுக்கு கல்வி மீது ஒரு பற்றுதலும் கல்வி கற்றால் தங்களது நிலையும் மாறிவிடும் என்ற நம்பிக்கையும் நிச்சயமாக ஏற்பட்டுவிடும்.

தற்போதைய சூழ்நிலையில் அரசு உதவி செய்யுமா என தெரியவில்லை. ஆகவே மனமிருக்கும் பெரியவர்கள் இந்தப்பெண்ணிற்கு மேற்கொண்டு கல்வி கற்க உதவி செய்திட முன்வரவேண்டும்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version