ஒரு மனிதனுக்கு அவன் அனுபவங்களின் மூலமாக பெறுகின்ற அறிவு மட்டுமே போதுமானது அல்ல, அந்த குறையை புத்தகங்கள் பூர்த்தி செய்கின்றன. புத்தகங்களை படிக்கும் போது அந்த புத்தக ஆசிரியரின் ஒட்டுமொத்த அனுபவங்களை படித்து தெரிந்துகொள்கிறீர்கள். புத்தகம் மட்டுமே நமக்கு அந்த வாய்ப்பினை வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடக்கிறது, ஏராளமான புத்தக வாசிப்பாளர்கள் சென்று புத்தகங்களை வாங்கி குவிக்கிறார்கள். இதனை காணும்போது, தொழில்நுட்ப வசதியால் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது என்போரின் கூற்று மூலமாக பொய்யாகிப்போனது. ஆனால் இன்னும் அதிக மக்கள் புத்தக கண்காட்சிக்கு செல்ல வேண்டும்
குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்
குழந்தையை நல்ல பள்ளிக்கூடத்தில் பார்த்து பார்த்து சேர்க்கிறோம், புதிய புதிய ஆடைகளை வாங்கி போட்டு அழகு பார்க்கிறோம். ஆனால் இந்த புத்தகத்தை வாசி என எந்த புத்தகத்தையாவது அறிமுகப்படுத்தியிருக்கிறோமா? ஒருவேளை நீங்கள் செய்திருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். செய்யவில்லையெனில், கவலை வேண்டாம் இப்போதே செய்திடுங்கள்.
உங்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் இல்லையெனில் இதுபோன்ற புத்தக கண்காட்சிகளுக்கு பிள்ளைகளை அழைத்துச்செல்லுங்கள். அங்கிருக்கும் புத்தகங்களை பார்க்கும் போது அவர்களுக்கு புத்தகங்களின் மீதான ஈர்ப்பு ஏற்படும். சுற்றி அனைத்தையும் பார்த்து முடித்தவுடன் நிச்சயமாக அவர்களாலேயே ஒன்றிரண்டு புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடியும். அந்த புத்தகங்களை படித்து முடிக்கும் போது அவர்களுக்கு தானாகவே ஒரு தெளிவு ஏற்படும்.
நீங்கள் செய்யவேண்டியது ஓர் அறிமுகம். அதனை நீங்கள் செய்துவிட்டால் அவர்கள் உலகத்தை படிக்க ஆரம்பித்து விடுவார்கள். அனைத்தையும் அறிந்துகொள்ள முயல்வார்கள். புதிய மனிதராக பரிணமிப்பார்கள். நல்ல உணவு, உடை , பள்ளி என்பதோடு உங்களது கடமை முடிந்துவிடுவதில்லை என்பதனை உணருங்கள்.
சென்னையில் இருப்பவர்கள் புத்தக கண்காட்சிக்கு அழைத்துச்செல்லுங்கள். பிற ஊர்களில் இருப்பவர்கள் ஒரு நல்ல புத்தகத்தை உங்களது பிள்ளைக்கு வாங்கிக்கொடுங்கள்.