Site icon பாமரன் கருத்து

மகாத்மா காந்தி – இக்கால அரசியல்வாதி – ஒப்பீடு

 


 

அடிமைகளாக பல ஆண்டுகாலம் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்த ஏழை மக்கள்  சுதந்திரம் என்றால் என்னவென்பதே அறியாமல் வாழ்ந்துவந்தனர் . சுதந்திரம் பற்றி அறிந்த ஒரு சிலருக்கோ பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரம் பெறுவது சாத்தியமல்ல  என நம்பி வந்தனர் . அவர்களுக்கெல்லாம் சுதந்திரம் பற்றிய தெளிவையும் ஏதும் இல்லாவிட்டாலும் அகிம்சையால் சுதந்திரத்தை பெற முடியும் என்ற நம்பிக்கையையும் மக்களிடத்தில விதைத்தவர்  தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் .

காந்தி அவர்கள் பிறந்த தினமான அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி நாளாக கடைபிடிக்கப்படுகிறது .

 


காந்தி ஜெயந்தி


அவர் தன்னுடைய சொந்த வாழ்வில் கடைபிடித்த  உண்மையும் பொதுவாழ்வில் கொண்டிருந்த உண்மையும் அவரின் பின்னால் அனைவரையும் அணிவகுத்து நிற்கச்செய்தது .

 

மகாத்மா காந்தி அவர்களைப்பற்றி சிலவற்றை படித்து தெரிந்துகொண்ட பின்னரும் இக்கால அரசியல்வாதிகளை பற்றி கவனித்து வந்த பின்னரும் 100 சதவிகிதத்திற்கும் அதிகமான எதிர்மாற்றங்களை இப்போதுள்ள அரசியல்வாதிகளிடம் நான் பார்க்கின்றேன் . அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன் .

 


 

ஊழல்



இன்று அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது “ஊழல்” .

 



 

காந்தி மற்றும் அவரது மனைவி இருவரும் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு வருபவர்கள் கொடுக்கின்ற அன்பளிப்பு , நன்கொடை அனைத்தையுமே ஆசிரமத்திடம் ஒப்புவிக்கவேண்டும் என்பது விதி . அப்படி கொடுக்கப்பட்ட 4 ரூபாயை காந்தியின் மனைவி ஆசிரமத்திடம் ஒப்படைக்காமல் தானே வைத்துக்கொண்டார் . இதனை அறிந்த காந்தி அவரை கடுமையாக கடிந்துகொண்டதோடு ஒரு பத்திரிக்கையில் தன்னுடைய மனைவியின் செயல்பாட்டை ‘திருட்டு’ என சொல்வேன் என எழுதியிருந்தார் .

 

 

இன்று நிலமை அப்படியா இருக்கின்றது ? ஒரு அரசியல்வாதிக்கு அதிகாரம் வந்துவிட்டால் மாணவி , மச்சான் , மாமன் என ஆரம்பித்து நான்காம் வழி சொந்தக்காரன் வரை ஊழல் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் . காந்தியின் வழித்தோன்றல்களில் வந்த காங்கிரஸ் கட்சியே இன்னும் போபர்ஸ் வழக்கினை சுமந்துகொண்டுதானே இருக்கின்றது . மறுபக்கம் பாஜகவோ ரபேல் விவகாரத்தில் இருக்கின்றது . மாநில அளவில் சொல்லவே வேண்டியதில்லை , அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டோம் .

 


 

எளிமை


தென் ஆப்பிரிக்காவில்  இருந்து இந்தியாவிற்கு வந்த காந்தி அவர்கள் குஜராத் பகுதி உடையினை தரித்தார் . ஒருமுறை மதுரை பகுதிக்கு சென்றபோது அங்கிருந்த தன் மக்களின் நிலையினை கண்டு தான் மட்டும் சட்டை , வேட்டி , கடிகாரம் , தோல் காலனி , அங்கவஸ்திரம் , தலைப்பாகை என அணிந்திருப்பது அபத்தம் என நினைத்து அனைத்தையும் துறந்து இடுப்பில் துணியோடு தனது உடை அணியும் பழக்கத்தை மாற்றிக்கொண்டார் .

 

மகாத்மா காந்தி



இன்றைய ஏழை தலைவர்களோ பதவிக்கு வந்தவுடன் எத்தனை லட்சங்களில் உடை அணிகிறார்கள் என்பது நான் சொல்லித்தெரியவேண்டியது இல்லை . உடை அணிவது அவர்களின் சுய உரிமைதான் ஆனால் தன் மக்கள் கோவணத்தோடு இருக்கும்போது தான் வேட்டி சட்டை அணிவதில் அர்த்தமில்லை என்ற காந்தியாரை புகழும் இவர்களின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்பதனை கவனிக்கவேண்டியது அவசியம் தானே .

 


 

கிராமசபை



தேசத்தின் அடித்தளம் கிராமம் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மகாத்மா காந்தி. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் நாடாளுமன்றம் , சட்டமன்றம் ஆகியவற்றிற்கு இணையாக கிராமசபை உருவாவதற்கு காரணமாக அமைந்தது . மற்ற அமைப்புகளுக்கு இணையான அதிகாரம் கிராமசபைக்கு இருக்கவேண்டும் என விரும்பினார் மகாத்மா .

ஆனால் இன்றைய சூழலில் நிலைமை அப்படியா இருக்கின்றது ? ஊராட்சிகளுக்கான காலக்கெடு நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் இன்னும் தேர்தலை நடத்திடாமல் இருக்கின்ற சூழலில் தானே நாம் இருக்கின்றோம் .

 


 

மக்களின் மனநிலை


சுதந்திரத்திற்கு முன்பு அடிமைபட்டுக்கிடந்த போது கூட மக்கள் தேச உணர்வோடு ஒன்றுபட்டு நின்றனர் . அந்நியர்களின் அடிமை தனத்திற்கு எதிராக ரத்தமும் உயிரும் போனாலும் எதனையும் எதிர்பாராமல் துணிந்து நின்றார்கள் .

ஆனால் இன்று மக்கள் மாறியிருக்கிறார்கள்  . தான் சார்ந்து மட்டும் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்  . வாக்குக்கு பணம் வாங்க ஆரம்பித்து இருக்கிறார்கள் . குற்றங்களை பார்த்து சகித்துக்கொள்ள பழகியிருக்கிறார்கள் .
பாழாய்போகியிருக்கிறார்கள் .

இந்த மாற்றங்கள் கால ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல , தான் , தன் குடும்பம் , தன் தலைமுறை என்ற சுயநலத்தால் விளைந்த பூஞ்சைகள் இவைகள் . அகற்றப்படவேண்டியவைகள் . வருங்கால இளைஞர்களாவது இதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும் .



செய்வோமா ?



மாற்றுக்கருத்து அல்லது இன்னும் சில விசயங்கள் இருப்பின் கமெண்ட் செய்திடுங்கள் .

 




பாமரன் கருத்து

 

 

 

 

Share with your friends !
Exit mobile version