அண்மைய காலமாகவே இலவசங்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக எழுந்து வருகின்றன. குறிப்பாக, தேர்தல் நேரத்திய இலவச அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார சூழலை கவனிக்காமல் வெறுமனே தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றன என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீண்ட நெடிய விவாதம் வேண்டும் என்பது அனைவரது கருத்தாக உள்ளது. சாமானிய மக்களும் இந்த விவகாரம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிய வேண்டும் என்பதற்க்காக இந்தப்பதிவு எழுதப்படுகிறது. படியுங்கள் – பகிருங்கள்.
இலவசங்களுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கு
அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் “தேர்தலுக்கு முந்தைய இலவச அறிவிப்புகளுக்கு” எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தார். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என இலவசங்களை முன்னிருத்தி வாக்குறுதிகளை வாரி இறைக்கின்றன. அப்படிப்பட்ட வாக்குறுதிகள் வாக்காளர்களின் மனநிலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது நடுநிலையான நேர்மையான தேர்தல் என்பதையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. மேலும், இப்படிப்பட்ட இலவச திட்டங்களால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் மக்களின் மீது வரி சுமையும் ஏற்படுகிறது. ஆகவே, தேர்தலுக்கு முன்பு கட்சிகளின் சார்பில் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தடை செய்திட வேண்டும் என்பதே வழக்கின் சாராம்சம்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதங்கள்
இலவசங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு செய்தி மட்டும் தான் பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தது. அது, விவாதத்தின் போது எம்பி வில்சன் திமுகவின் கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது “நீங்கள் சார்ந்த கட்சி மட்டும் தான் அறிவார்ந்த கட்சி என்று நினைக்காதீர்கள். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டியுள்ளது, பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்” என கூறினார். இது மட்டும் தான் இங்கே பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இன்னும் பல விசயங்கள் நீதிமன்றத்தில் பேசப்பட்டன. அவற்றின் சுருக்கங்களை பார்க்கலாம்.
இந்த விவாதத்தின் முக்கிய கருப்பொருளாக இருந்தது என்னவெனில் ஒரு திட்டத்தை இலவச திட்டமா அல்லது மக்கள் நலத்திட்டமா என எப்படி வகைப்படுத்துவது என்பது தான்
தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் இருக்கக்கூடாது என்பதை தடை செய்திட எந்தவொரு அரசியல் சட்டமும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபட கூறிவிட்டது. ஆகவே, இனிமேல் வரக்கூடிய சட்டம் மூலமாகத்தான் இதனை தடை செய்திட முடியும் என்பது தெளிவாகிறது.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி NV ரமணா சில முக்கிய கருத்துக்களை இந்த வழக்கு விசாரணையின் போது முன்வைத்தார்.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியுமா? : இதுவொரு முக்கியமான கேள்வியாக பார்க்கப்படுகிறது. பொதுவாக, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை. ஒருவேளை, அரசின் கொள்கை முடிவால் யாரேனும் தங்களுக்கு பாதிப்பு உள்ளது என நீதிமன்றத்தை நாடினால் அதில் நீதிமன்றம் தலையிடும். இந்த சூழலில் நீதிமன்றம் இந்த விவகாரத்தை எடுத்திருப்பதற்கு தலைமை நீதிபதி கொடுத்த விளக்கத்தில், இந்த விவகாரத்தில் பிரச்சினை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது கொள்கை சார்ந்த விவகாரம். எனவே இதில் தலையிட முடியாது என்று கூற முடியுமா? உதாரணமாக, மத்திய அரசு இலவசங்கள் கொடுக்க தடை சட்டம் இயற்றும்போது அதனை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார். இந்த தேர்தல் இலவசங்கள் விவகாரம் தொடர்பாக இங்கு விவாதிப்போம், அது தொடர்பாக அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு பின்னர் முடிவு செய்யலாம் என்றே கூறுகிறோம் என தெரிவித்தார்.
இலவசங்கள் – மக்கள் நலத்திட்டங்கள் வேறுபாடு : இந்த விவகாரத்தில் இந்தப்புரிதல் மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. பலர் இலவசம் என்று சொல்லும் விசயங்களை கட்சிகள் மக்கள் நலத்திட்டங்கள் என்று கூறுகின்றன. உதாரணத்திற்கு, பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் திட்டம் ஒரு இலவச திட்டமாக சிலர் பார்க்கலாம். ஆனால், திமுக கட்சியானது “வேலை பார்க்கும் பெண்கள் பேருந்து பயணத்திற்கு செலவு செய்திடும் தொகையை வேறு வளர்ச்சிக்கு பயன்படுத்தும் விதத்திலான பெண்கள் நலத்திட்டம் என்று கூறும்.
இதுகுறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி NV ரமணா சில கருத்துக்களை தெரிவித்தார். அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு கால்நடைகள் வழங்குவது அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றவே வழங்கப்படுகிறது. அதேபோல கிராமப்புற மாணவிகள் கல்வி கற்று பயனடைய அவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என்று கூறவில்லை. இலவசங்கள் மற்றும் நலத் திட்டங்களையும் அதன் வேறுபாட்டையும் நாங்களும் அறிவோம். சாதாரண குடிமக்கள்கூட இதன் வேறுபாட்டை அறிவர் என தெரிவித்தார்.
அரசின் கொள்கை முடிவில் தலையிடல் : மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு மக்களின் நலனுக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் முழு உரிமை உண்டு. அதேசமயம், அப்படி ஒரு தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் எடுக்கும் இலவச திட்டங்களால் அரசுக்கு நிதிச்சுமை கூடி பொருளாதாரத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் பேராபத்தும் உள்ளது. “பொருளாதார பாதிப்பு” என்பது இந்த விசயத்தில் முக்கிய விவாதப்பொருளாக இருக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்து இருந்தார்.
உதாரணத்திற்கு, தமிழகம் விவாசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. இன்னொருபக்கம், தமிழ்நாடு மின்சார வாரியம் பல ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இதுதான் இங்கே சிக்கலாக பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இலவசங்களை தடை செய்திடும் விதியோ சட்டமோ வந்தால் மக்களால் தேர்வு செய்யப்படும் அரசாங்கம் அறிவிக்கும் ஒவ்வொரு திட்டத்தை எதிர்த்தும் வழக்குகள் தொடர வாய்ப்பு உண்டு. அது திட்டங்களை தாமதப்படுத்தவும் வாய்ப்பு உண்டு என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
திமுகவின் வாதம் : திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் சார்பில் எழுத்துபூர்வமாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களால் மக்கள் மத்தியில் வருமான இடைவெளி குறைந்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு அது வித்திட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுமாதிரியான திட்டங்கள் தான் தமிழகத்தை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் தேசத்தில் முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது. மாநில தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 100 தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 18 தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
மாநிலத்தின் வளம் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வருவோரின் சதவீதம் 8.3% ஆக உள்ளது. தமிழக அரசின் இலவச மருத்துவ வசதிகள் ஈடு இணையற்றவை. தமிழகம் இலவசங்களால் பின்னோக்கிச் செல்வதாக குறிப்பிட்டு மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயாவை நாங்கள் சில ஆண்டுகள் தமிழகத்தில் வசித்துப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம். அப்படித் தங்கிப் பார்த்தால்தான் சமூக நலத் திட்டங்கள் ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக எப்படி மேம்படுத்துகிறது. அவை மக்களின் மகிழ்ச்சிக்கு எப்படி வித்திடுகிறது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ள முடியும். மேலும் இலவசங்கள் என்ற வார்த்தையே மிகவும் கடுமையான சொல்லாடல். இது நலத்திட்டங்கள் மீது எதிர்மறை சாயம் பூசுகிறது.
உண்மையில் இவை சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள். உயர் சாதியினர் ஆண்டாண்டு காலமாக கட்டவிழ்த்த அடக்குமுறையால் நலிவடைந்து கிடந்த சமூகத்தினருக்கு நலத்திட்டங்கள் அவசியமானவை. இன்று சில முன்னேறிய சமூகங்கள், தலைமுறை தலைமுறையாக வசதியாக வாழும் சமூகங்கள் ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி, புத்தகங்கள், பயணம், மருத்துவம், உணவு என எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பலாம். அதற்கு ஒரே பதில்தான் இருக்கிறது. அவர்களுக்கு சமூகத்தின் மேல்மட்டத்தினருக்குக் கிடைத்த அதே வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. மறுக்கப்பட்ட வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.
ஆகையால் எங்களின் திட்டங்கள் இலவசங்கள் அல்ல. மாறாக அவை சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான கருவி. தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதில், சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருக்கிறது. தமிழக அரசு மகளிர்க்காக விலையில்லா பேருந்து பயணத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் பெண்களின் வருமானத்தில் 12% சேமிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த சேமிப்பை அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படுத்துவார்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பணத்தை கணக்குப் போட்டு துல்லியமாக செலவு செய்ய முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஒரு மாநிலம் தன் மக்கள் நலனுக்காக பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது நிச்சயமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தொடரும் விவாதம் : உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இந்த விவகாரத்தில் அதிகப்படியான விவாதங்கள் தேவை என்பதனால் இந்த வழக்கினை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றி உத்தரவு பிறப்பித்து உள்ளார். எதிர்காலத்தில் இதற்காக ஒரு குழுவோ அல்லது ஆணையமோ அமைக்கப்படலாம்.
எனது கருத்து
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் மக்கள் நலத்திட்டங்கள் நிறைய உள்ளன. ஆகவே, இந்த விவகாரத்தை தமிழக மக்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இலவச திட்டங்களை அறிவிக்க கட்டுப்பாடு விதிப்பதோ அல்லது தடை செய்வதோ அவ்வளவு எளிதில் நடைபெறக்கூடிய விசயம் அல்ல. இது மிக நீண்ட காலம் விவாதிக்க வேண்டிய விசயம். உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக தனது நிலைப்பாட்டை இந்த வழக்கில் தெரிவித்து உள்ளது. அதன்படி, தேர்தலுக்கு முன்பாக மட்டுமல்ல, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் உள்ள அரசு அறிவிக்கும் இலவச திட்டங்களுக்கும் வரையறை வேண்டும் என அது தெரிவித்து உள்ளது. அது எப்படிப்பட்ட வரையறை என்பது எதிர்காலத்தில் தான் தெரியவரும்.
இந்த விவாதம் இப்போதைக்கு அவசியமா என்று கேட்டால் நிச்சயமாக அவசியம் என்று தான் சொல்வேன். காரணம் மிக எளிது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, மக்கள் வரிப்பணத்தில் தான் திட்டங்களை அறிவிக்கின்றன. அது மக்கள் பணம் என்பதனால் அது எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதை கேள்வி கேட்க அந்த மக்களுக்கு உரிமை உள்ளது. மேலும், ஒரு அரசு உருவாக்கிவிட்டுப்போகும் இலவச திட்டத்தை எதிர்காலத்தில் வரும் அரசுகளும் பின்பற்ற வேண்டிய சூழல் உள்ளபடியால் அதனை முறைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. தவறான திட்டங்களும் முடிவுகளும் பொருளாதாரத்தை குலைத்துவிடும் அபாயம் உள்ளபடியால் இதனை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
இலவசங்கள் – மக்கள் நலத்திட்டங்கள் என்பவைக்கு ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் சைக்கிளால் கிராமப்புற மாணவர்களால் பள்ளிக்கு சென்றுவர முடியும். வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகவே, இதோவொரு மக்கள் நலத்திட்டம். நகைக்கடன் வாங்கியவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. உண்மையாகவே ஒரு விவசாயியால் ஒரு ஏழையால் வாங்கிய கடனை கட்டமுடியாவிடில் அதனை தள்ளுபடி செய்தால் கூட பரவாயில்லை. ஆனால் கடனை கட்டும் வாய்ப்பு இருந்தும், அந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தால் எப்படியும் தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்பதற்காக கட்டாமல் இருப்போரின் கடனை தள்ளுபடி செய்வது எப்படி மக்கள் நலத்திட்டம் என ஏற்க முடியும். இதெல்லாம் இங்கே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். கடனில் மூழ்கி இருக்கும் மின்சார வாரியம் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக கொடுப்பதும் இங்கே கருத்தில் கொள்ளப்படும்.
எதை எடுத்தாலும் இப்போது வரி விதிக்கப்படுகிறது. வருமான வரி ஒரு பக்கம், வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி மறுபக்கம் என மக்கள் கடுமையான வரியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்லிவிட்டு பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றால் என்ன செய்ய முடியும்? பொருளாதாரத்தை மீட்டுக்கொண்டுவர மேலும் வரிகளை தானே அரசுகள் விதிக்கும். அதை தடுக்க வேண்டும் எனில் ஒரு வரையறை அவசியம் தானே.
அரசின் திட்டங்களுக்கு வரையரை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அது நீண்டுகொண்டே போகக்கூடிய விசயம். ஒருவேளை இலவசங்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டால் அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்திற்கு எதிராகவும் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு. அது அரசின் செயல்பாட்டில் பெரிய தொய்வை கொண்டுவரும். அதேசமயம், இதை இப்படியே விட்டுவிட்டால் பொருளாதார சீரழிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இந்த விவாதம் காலத்திற்கு ஏற்ற விவாதம் தான். ஆனால், இதனை நீதிமன்றம் துவங்கி வைத்திருப்பது சரியல்ல. இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் தான் துவங்கப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளின் விவாதங்களை கேட்டு ஒட்டுமொத்த பேராதரவுடன் ஒரு விதிமுறையை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் இதை செய்யத்தவறியதன் விளைவு நீதிமன்றம் அந்த வேலையை கையில் எடுத்துள்ளது. இனிமேலாவது மத்திய அரசும் நாடாளுமன்றமும் இதுகுறித்து பேச ஆரம்பிக்க வேண்டும். மக்களும் இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
“அரசியல் பழகு”
— பாமரன் கருத்து